இலங்கை
இன்று முதல் கோவ்பே ஊடாக அபராதம் செலுத்தும் வசதி!

இன்று முதல் கோவ்பே ஊடாக அபராதம் செலுத்தும் வசதி!
மேல் மாகாணத்தில் இன்று (28) முதல் GovPay செயலி மூலம், போக்குவரத்து மீறல் தொடர்புடைய, அபராதம் செலுத்தும் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
குறித்த விடயத்தை போக்குவரத்து, நெடுஞ்சாலைகள், துறைமுகங்கள் மற்றும் சிவில் விமானப் போக்குவரத்து அமைச்சர் பிமல் ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
மேலும், இந்தத் திட்டத்தை வெற்றிகரமாக்குவதற்குத் தேவையான அதிகாரிகளுக்கு பயிற்சி அளிக்கப்பட்டுள்ளதாகவும், இன்று போக்குவரத்து காவல்துறை அதிகாரிகள் ஆயிரம் பேருக்கு கையடக்க தொலைபேசிகளை வழங்க திட்டமிடப்பட்டுள்ளதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
டிஜிட்டல் விவகார அமைச்சின் வலுவான அர்ப்பணிப்பு காரணமாக இந்தத் திட்டம் மிக விரைவாக ஆரம்பிக்க முடிந்ததாகவும் அமைச்சர் இதன்போது தெரிவித்தார்.
அடுத்த சில மாதங்களில் ஏனைய காவல்நிலையங்களுக்கும் கையடக்க தொலைபேசிகளை வழங்க எதிர்பார்ப்பதாகவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
2025 – 2026 ஆம் ஆண்டுக்கான போக்குவரத்து அமைச்சினால் தயாரிக்கப்பட்ட 85 அம்ச செயற்றிட்டம் அடங்கிய புத்தகம் இந்த நிகழ்வின் போது பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால மற்றும் டிஜிட்டல் பொருளாதார பிரதி அமைச்சர் எரங்க வீரரத்ன ஆகியோருக்கு வழங்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.