இலங்கை
இலங்கையில் அணுசக்தித் திட்டம் ஐந்து தளங்கள் அடையாளம்

இலங்கையில் அணுசக்தித் திட்டம் ஐந்து தளங்கள் அடையாளம்
இலங்கையில் முதல் அணுமின் நிலையத்தை அமைப்பதற்கான ஐந்து சாத்தியமான தளங்களை இலங்கை அடையாளம் கண்டுள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் உறுதிப்படுத்தியுள்ளது.
கடந்த 4 முதல் 18ஆம் திகதி வரை நடைபெற்ற மீளாய்வுப் பணிக்குப் பிறகு இந்தத் தகவல் வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அரசாங்கத்தின் கோரிக்கையின் பேரில் மேற்கொள்ளப்பட்ட இந்த ஒருங்கிணைந்த அணு உட்கட்டமைப்பு மீளாய்வுப் பணிக்குழு. 2022ஆம் ஆண்டில் நடைபெற்ற முதற்கட்ட சர்வதேச அணு சக்தி முகவரகத்தின் மீளாய்வுகளில் வழங்கப்பட்ட பரிந்துரைகளைச் செயற்படுத்துவதில் இலங்கை அடைந்துள்ள முன்னேற்றத்தை மதிப்பிட்டது. அணுசக்தி உட்கட்டமைப்பை மேம்படுத்துவதில் இலங்கை குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்துள்ளதாக சர்வதேச அணுசக்தி முகவரகம் குறிப்பிட்டது. குறிப்பாக, உலை கொள்முதல் செய்வதற்கான ஒரு மேலாண்மைக் கட்டமைப்பை இலங்கை நிறுவியதுடன், விரிவான அணுசக்திச் சட்டவரைவையும் உருவாக்கியுள்ளது. மேலும் 2025-2044 ஆம் ஆண்டுக்கான தேசிய நீண்ட கால எரிசக்தித் திட்டத்தில் அணுசக்தியைச் சேர்த்துள்ளது. இலங்கையின் அணுசக்தி முயற்சி முதன்முதலில் 2010 ஆம் ஆண்டில் அமைச்சரவையால் அங்கீகரிக்கப்பட்டது. 2019 ஆம் ஆண்டில் அணுசக்தித்திட்ட அமுலாக்க அமைப்பு உருவாக்கப்பட்டது. இதில் எரிசக்தி அமைச்சு, இலங்கை அணுசக்தி அதிகாரசபை. இலங்கை மின்சாரசபை மற்றும் இலங்கை அணுசக்தி ஒழுங்குமுறை மன்றம் ஆகியவை அடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.