தொழில்நுட்பம்
எச்.ஐ.வி.க்கு புதிய மருந்து லெனகாவிர்: 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊசி!

எச்.ஐ.வி.க்கு புதிய மருந்து லெனகாவிர்: 6 மாதங்களுக்கு ஒருமுறை மட்டுமே ஊசி!
எச்.ஐ.வி. (HIV) தொற்றைத் தடுப்பதற்கான போராட்டத்தில் முக்கிய திருப்புமுனையாக, லெனகாவிர் (Lenacapavir) என்ற புதிய ஊசி மருந்து உலகளவில் அங்கீகாரம் பெற்று வருகிறது. இது 6 மாதங்களுக்கு ஒருமுறை செலுத்தப்படும் ஊசி என்பதால், எச்.ஐ.வி. தடுப்பு, சிகிச்சையில் பெரும் மாற்றத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.உலகளவில் அங்கீகாரம்:ஐரோப்பிய மருந்துகள் நிறுவனம் (EMA): ஜூலை 25 அன்று, ஐரோப்பிய மருந்துகள் நிறுவனத்தின் ஆலோசனைக் குழு, பெரியவர்கள் மற்றும் இளம் பருவத்தினரிடையே எச்.ஐ.வி. தொற்றைத் தடுப்பதற்காக, கிலியட் சயின்சஸ் நிறுவனத்தின் லெனகாவிர் மருந்தை பரிந்துரைத்துள்ளது. இந்த பரிந்துரை இந்த ஆண்டின் பிற்பகுதியில் ஐரோப்பிய ஆணையத்தால் முறையாக அங்கீகரிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.அமெரிக்க FDA ஒப்புதல்: ஐரோப்பிய பரிந்துரைக்கு ஒரு மாதத்திற்கு முன்பு, ஜூன் 18 அன்று, அமெரிக்காவின் உணவு மற்றும் மருந்து நிர்வாகம் (FDA) லெனகாவிர் ஊசி மருந்தை எச்.ஐ.வி. முன் வெளிப்பாடு தடுப்பு மருந்தாக (PrEP – Pre-exposure Prophylaxis) அங்கீகரித்தது.உலக சுகாதார அமைப்பு (WHO) வரவேற்பு: ஜூன் 19 அன்று FDA-வின் ஒப்புதலை உலக சுகாதார அமைப்பு வரவேற்றதுடன், ஜூலை 14 அன்று எச்.ஐ.வி. தடுப்புக்கு லெனகாவிர் பயன்படுத்துவதற்கான வழிகாட்டுதல்களையும் வெளியிட்டது. கூடுதல் PrEP விருப்பங்களை வழங்குவது, மக்கள் தங்களுக்கு விருப்பமான முறையைத் தேர்ந்தெடுப்பதற்கு வழிவகுப்பதால், PrEP மற்றும் ஒட்டுமொத்த எச்.ஐ.வி. தடுப்பின் பயன்பாட்டை அதிகரிக்கச் செய்யும் என்று வழிகாட்டுதல்கள் தெரிவிக்கின்றன.இதுவரை, எச்.ஐ.வி. தொற்று உள்ளவர்கள் அல்லது தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்கள் தினமும் மாத்திரைகளை உட்கொள்ள வேண்டியிருந்தது. இந்த தினசரி மருந்துகள் சில சமயங்களில் நோயாளிகளுக்கு அசௌகரியத்தை ஏற்படுத்தலாம் (அ) மருந்தை எடுத்துக் கொள்வதில் சிக்கல்களை உருவாக்கலாம். ஆனால், லெனகாவிர் போன்ற நீண்ட காலம் செயல்படும் ஊசி மருந்து, இந்த பிரச்னைகளுக்கு தீர்வாக அமைகிறது.இந்த மருந்தின் முக்கியத்துவம் என்னவென்றால் 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊசி செலுத்திக் கொள்வது, தினசரி மாத்திரைகளை எடுத்துக் கொள்வதை விட மிகவும் எளிமையானது. இது நோயாளிகளின் மருந்து உட்கொள்ளும் முறையை மேம்படுத்தும். எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ளவர்களுக்கு, இந்த ஊசி மருந்து தொற்றைத் தடுப்பதற்கான ஒரு சிறந்த வழியாகும். இந்த மருந்து பரவலாகக் கிடைக்கும் போது, எச்.ஐ.வி.யால் பாதிக்கப்பட்ட மற்றும் பாதிக்கப்படக்கூடிய மக்களுக்கு உலகளவில் அணுகலை மேம்படுத்த உதவும்.லெனகாவிர், எச்.ஐ.வி. வைரஸின் வாழ்க்கைச் சுழற்சியின் வெவ்வேறு கட்டங்களில் செயல்படும் புதிய வகை மருந்து ஆகும். இது வைரஸ் உடலுக்குள் பரவுவதையும், பெருகி வளர்வதையும் தடுக்கிறது. இந்த கண்டுபிடிப்பு, எச்.ஐ.வி.க்கு எதிரான போராட்டத்தில் திருப்புமுனையாக கருதப்படுகிறது. இது நோயாளிகளின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்துவதோடு மட்டுமல்லாமல், எச்.ஐ.வி. பரவலை கட்டுப்படுத்துவதிலும் ஒரு முக்கிய பங்காற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.சிகிச்சை (Treatment) ஏற்கனவே எச்.ஐ.வி. தொற்று உள்ள, குறிப்பாக மற்ற எச்.ஐ.வி. மருந்துகளுக்கு எதிர்ப்புத் திறன் கொண்ட அல்லது மருந்து எடுத்துக் கொள்வதில் சிரமம் உள்ள பெரியவர்களுக்கு, லெனகாவிர் மற்ற எச்.ஐ.வி. மருந்துகளுடன் இணைந்து பயன்படுத்தப்படுகிறது. தடுப்பு (Prevention / PrEP – Pre-exposure Prophylaxis) பாலியல் ரீதியாக எச்.ஐ.வி. தொற்று ஏற்படும் அபாயத்தில் உள்ள பெரியவர்கள் மற்றும் 35 கிலோவுக்கு மேல் எடையுள்ள இளம் பருவத்தினருக்கு, 6 மாதங்களுக்கு ஒருமுறை ஊசி மூலம் லெனகாவிர் செலுத்தப்படுவது, தொற்றைத் தடுப்பதற்கான வழியாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது.