இலங்கை
கிருஷாந்தி கொலைக் குற்றவாளியின் சாட்சியம் இனவழிப்புக்கான சான்று!

கிருஷாந்தி கொலைக் குற்றவாளியின் சாட்சியம் இனவழிப்புக்கான சான்று!
மக்கள் போராட்ட முன்னணி தெரிவிப்பு!
கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச நேரடியாக அளித்த சாட்சியம் ஊடாக நாங்கள் இந்த செம்மணி விவகாரத்தை அணுகவேண்டும். குற்றங்களை இழைத்தவர்களைச் சட்டத்தின்முன் வேண்டும் என மக்கள் போராட்ட முன்னணியின் ராஜ்குமார் ரஜீவ்காந் தெரிவித்துள்ளார்.
வடக்கு, கிழக்குத் தமிழர்கள் கோரும் சர்வதேச நீதிப்பொறிமுறையூடான நீதி கோரிக்கைக்கு ஆதரவு தெரிவித்து, ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கை காரியாலயத்துக்கு முன்பாக நேற்று முன்தினம் இடம்பெற்ற ஆர்ப்பாட்டத்தில் அவர் இதனைத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்; 300 முதல் 600 வரையிலானோரை கொலை செய்து எங்களிடம் மேலதிகாரிகள் தந்தார்கள். இங்கு கொண்டுவந்து அவர்களைப் புதைத்திருக்கின்றோம் என கிருஷாந்தி குமாரசுவாமி கொலையின் குற்றவாளியாக அடையாளங்காணப்பட்ட சோமரட்ண ராஜபக்ச சாட்சியம் வழங்கியுள்ளார். இது ஓர் இன அழிப்பின் சான்றாக, ஓர் இனத்தின் மேல் நிகழ்த்தப்பட்ட பெரும் கொலையாக நாங்கள் இதனைப் பார்க்க வேண்டும். இது
மிகப்பெரிய தண்டனைக்குரிய குற்றம் என்பதை மறந்துவிடக்கூடாது.
நாட்டின் பிரஜைகளைக் கொன்றொழித்த இராணுவத்தினரை எவ்வாறு வெற்றிவீரர்களாகக் கொண்டாட முடியும். இந்தக் குற்றங்களை இழைத்தவர்களை சட்டத்தின் முன்நிறுத்த வேண்டும், இதற்கு உள்நாட்டுப்பொறி முறையில் நம்பிக்கையில்லை. சர்வதேச நீதி விசாரணையொன்றே அவசியம்- என்றார்.