பொழுதுபோக்கு
படம் முடிந்தும் வெளியே வர மனமில்லை; சிவாஜி நடிப்பை பார்த்து மிரண்டு போன எம்.ஜி.ஆர்: எந்த படம் தெரியுமா?

படம் முடிந்தும் வெளியே வர மனமில்லை; சிவாஜி நடிப்பை பார்த்து மிரண்டு போன எம்.ஜி.ஆர்: எந்த படம் தெரியுமா?
தமிழ் சினிமாவில் மிகச் சிறந்த நடிகர் என்று எடுத்துக் கொண்டால், ரசிகர்கள் பலரும் முதலில் சிவாஜி கணேசனின் பெயரை தான் குறிப்பிடுவார்கள். சிவாஜி கணேசனின் நடிப்பை பலமுறை வியந்து பார்த்ததாக கமல்ஹாசன் கூறியுள்ளார். மேலும், சிவாஜி கணேசனின் ஸ்டைல் தனக்கு மிகவும் பிடிக்கும் என்று ரஜினிகாந்தும் நேர்காணல் ஒன்றில் தெரிவித்துள்ளார்.அந்த அளவிற்கு மிகத் திறமையான நடிகராக சிவாஜி கணேசன் விளங்கினார். காலங்கள் மாறினாலும் சிவாஜி கணேசனை ரசிக்கும் மக்கள் இன்றும் கணிசமான அளவிற்கு இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இதற்கு எடுத்துக்காட்டாக சிவாஜி கணேசனின் நடிப்பில் உருவான ‘கர்ணன்’, ‘வசந்த மாளிகை’ போன்ற படங்கள் மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளன.சிவாஜி கணேசன் திரைத்துறையில் கோலோச்சி விளங்கிய காலத்தில் அவருக்கு சமகால நடிகராக தனது முத்திரையை அழுத்தமாக பதித்தவர் எம்.ஜி.ஆர். இருவரும் தமிழ் திரைத்துறையில் தவிர்க்க முடியாத ஜாம்பவான்களாக விளங்கினர். ஆனால், இருவரின் திரைப்படங்களும் வெவ்வேறு விதமாக இருக்கும். குறிப்பாக, சமூக கருத்துகளை போதிக்கும் திரைப்படங்களில் மட்டுமே எம்.ஜி.ஆர் நடித்தார். ஆனால், அத்தகைய வேறுபாடு இன்றி ரசிகர்களை ஆச்சரியப்படுத்தும் பல விதமான பாத்திரங்களை சிவாஜி கணேசன் ஏற்று நடித்துள்ளார்.இந்நிலையில், சிவாஜி கணேசனின் நடிப்பை எம்.ஜி.ஆர் வியந்து பார்த்த ஒரு சம்பவத்தை தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார். இந்த வீடியோ சமூக ஊடகத்தில் ட்ரெண்டாகி வருகிறது. அதில், “சிவாஜி கணேசனுக்கு திரைத்துறையில் போட்டியாக விளங்கியவர் எம்.ஜி.ஆர். ‘மிருதங்க சக்கரவர்த்தி’ என்ற திரைப்படத்தை கலைஞானம் எடுத்தார். அந்த நேரத்தில் எம்.ஜி.ஆர் முதலமைச்சராக இருந்தார். அவருக்காக இப்படம் திரையிட்டுக் காண்பிக்கப்பட்டது.அப்படத்தில், சுமார் 20 நிமிடங்களுக்கு சிவாஜி கணேசன் மிருதங்கத்தை வாசிக்கும் காட்சி இடம்பெற்றிருக்கும். சிவாஜி கணேசனின் நடிப்பு, பாவனை, உடல் மொழி ஆகியவற்றை பார்த்த எம்.ஜி.ஆர், பிரம்மித்து விட்டார். இப்படம் முடிந்த பின்னரும் எம்.ஜி.ஆர் அப்படியே இருக்கையில் அமர்ந்து இருந்தார். எம்.ஜி.ஆருக்கு அருகில் இருந்த அவரது மனைவி ஜானகி, எம்.ஜி.ஆரை எழுந்து வருமாறு கூறினார். ஆனால், எம்.ஜி.ஆர் சட்டென எழுந்து செல்லவில்லை. கன்னத்தில் கை ஊன்றியபடி, சுமார் ஐந்து நிமிடங்களுக்கு திரையை பார்த்துக் கொண்டிருந்தார். இந்த தகவலை கலைஞானம் பதிவு செய்தார். மேலும், இந்த உலகத்தில் நடிகன் என்று ஒருவன் உண்டு என்றால், அது சிவாஜி கணேசன் மட்டும் தான்” என தமிழருவி மணியன் தெரிவித்துள்ளார்.