இந்தியா
பணி நிரந்தரம் கோரி பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்: புதுச்சேரியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு

பணி நிரந்தரம் கோரி பி.ஆர்.டி.சி. ஊழியர்கள் தொடர் வேலைநிறுத்தம்: புதுச்சேரியில் போக்குவரத்து ஸ்தம்பிப்பு
புதுச்சேரி சாலை போக்குவரத்துக் கழகத்தில் (PRTC) கடந்த 11 ஆண்டுகளுக்கும் மேலாக ஒப்பந்த அடிப்படையில் ஓட்டுநர்கள், நடத்துநர்கள் மற்றும் பிற ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர். இவர்களின் நீண்டநாள் கோரிக்கை, தற்காலிகப் பணியாளர்களைப் பணி நிரந்தரம் செய்ய வேண்டும் என்பதும், 7வது ஊதியக் குழு பரிந்துரைகளை அமல்படுத்த வேண்டும் என்பதும்தான். இந்தக் கோரிக்கைகளுக்காக ஊழியர்கள் பல கட்டப் போராட்டங்களை ஏற்கெனவே நடத்தியுள்ளனர்.ஆனால், சாலை போக்குவரத்துக் கழக நிர்வாகம், போராட்டத்தில் ஈடுபட்டுவரும் ஒப்பந்த ஊழியர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தவோ அல்லது அவர்களின் கோரிக்கைகள் குறித்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கவோ முன்வரவில்லை. நிர்வாகத்தின் இந்த அலட்சியப் போக்கைக் கண்டித்து, சாலை போக்குவரத்துக் கழக ஒருங்கிணைந்த கூட்டுப் போராட்டக் குழுவினர் இன்று காலை முதல் காலவரையற்ற வேலைநிறுத்தப் போராட்டத்தைத் தொடங்கியுள்ளனர். கோரிக்கைகள் நிறைவேறும் வரை போராட்டம் தொடரும் என ஊழியர்கள் அறிவித்துள்ளனர். இன்று காலை சாலை போக்குவரத்துக் கழக அலுவலகம் முன்பு தொடங்கிய இந்தப் போராட்டத்தில், புதுச்சேரி சட்டமன்ற எதிர்க்கட்சித் தலைவர் இரா. சிவா பங்கேற்று, போராட்டத்திற்குத் தனது ஆதரவைத் தெரிவித்தார். ஊழியர்களின் நியாயமான கோரிக்கைகளை அரசு உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என அவர் வலியுறுத்தினார். இந்தப் போராட்டம் புதுச்சேரியில் போக்குவரத்து சேவையைப் பெரிதும் பாதிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.