இலங்கை
மாகாணசபை தேவையா… பரிசீலனை மிக அவசியம்! முன்னாள் பிரதமர் தினேஷ் வலியுறுத்து

மாகாணசபை தேவையா… பரிசீலனை மிக அவசியம்! முன்னாள் பிரதமர் தினேஷ் வலியுறுத்து
மாகாணசபை முறைமையை அப்படியே கொண்டுசெல்வதா?, முடித்துக்கொள் வதா? அல்லது அதனை முழுமையாக மறுசீரமைப்பு செய்வதா? என்பது தொடர்பில் விரிவான பரிசீலனைகள் இடம்பெறுவது அவசியம் என்று முன்னாள் பிரதமர் தினேஷ் குணவர்த்தன தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு வழங்கிய நேர்கா ணலில் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
40 வருடங்களுக்கு முன்னர் அறிமுகப்படுத்தப்பட்ட மாகாணசபை முறைமை இன்று பயன்படுகின்றதா? அல்லது அரசியல் சவால்களை எதிர்கொள்கின்றதா? என்பதை நாங்கள் ஆராயவேண்டும். அத்துடன், மாகாணசபை முறையின்றி கடந்த பல வருடங்களாக நாடு இயங்கியுள்ளது என்பதையும் புரிந்துகொள்ள வேண்டும்.
கடந்த 2014ஆம் ஆண்டு இறுதியாக ஊவா மாகாணசபைக்கு தேர்தல் மாகாணசபைகளுக்கு தேர்தல்கள் நடத்தப்பட்டதன் பின்னர் இன்னும் நடத்தப்படவில்லை. மாகாணசபைகளின் பதவிக்காலங்கள் நிறைவடைந்து கிட்டத்தட்ட ஆறு அல்லது ஏழு ஆண்டுகள் கடந்துவிட்டன. இன்னமும் தேர்தல் இடம்பெறவில்லை. மாகாணசபைத் தேர்தல்களை நடத்துவதில் தேர்தல் முறை தொடர்பான சட்டச்சிக்கல் காணப்படுவதால் அதனை நிவர்த்தி செய்யவேண்டும் எனவும் கூறப்படுகின்றது. சில கட்சிகள் தேர்தலை உடனடியாக நடத்துமாறு வலியுறுத்துகின்றன. எனவே. மாகாணசபையை அடிப்படையாக வைத்து, பரந்துபட்ட மீளாய்வுக் கலந்துரையாடல் இடம்பெறவேண்டியது அவசியம் என்பது இதிலிருந்து புலப்படுகின்றது.
மாகாணசபை ஊடாக மக்களின் பிரச்சினைகள் தீர்க்கப்படவில்லை. மாறாக இதற்கு பெரியளவு நிதி செலவிடப்படுகிறது. எனவே,மாகாணசபை நாட்டுக்குத் தேவையா என்பது தொடர்பில் மீளச் சிந்திக்கவேண்டிய காலம் மீள உருவாகியிருக்கிறது. இன்றைய காலகட்ட சவால்களுக்கு இந்த மாகாண சபை முறைமை பதில் அளிக்கிறதா என்பது குறித்துச் சிந்திக்க வேண்டும். உள்ளூராட்சி மன்றங்கள் சிறப்பாக இயங்குகின்றன. நாட்டின் சகல பகுதிகளுக்குமான அபிவிருத்தியில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் பங்கெடுக்கலாம். எனவே. இடையில் மாகாண சபை அவசியமா? என்ற கேள்வி எழுகிறது. இலங்கையில் மாகாண சபையானது அரசியல்வாதிகள் நாடாளுமன்றம் செல்வதற்கான இடையீட்டுக்காலமாகவே உள்ளது – என்றார்.