பொழுதுபோக்கு
4 ஓநாய், ஒரு சிங்கம், இதுதான் க்ளைமாக்ஸ்; ஆனா வடிவேலு காமெடி மாதிரி ஆச்சி: கார்த்தி படம் குறித்து சுசீந்திரன் தகவல்!

4 ஓநாய், ஒரு சிங்கம், இதுதான் க்ளைமாக்ஸ்; ஆனா வடிவேலு காமெடி மாதிரி ஆச்சி: கார்த்தி படம் குறித்து சுசீந்திரன் தகவல்!
சுசீந்திரன் இயக்கத்தில், கார்த்தி நடிப்பில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற நான் மகான் அல்ல திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சிகள் நல்ல வரவேற்பை பெற்றன. அந்த வகையில், இக்காட்சிகளை படமாக்கிய விதம் குறித்து சினி உலகம் யூடியூப் சேனல் உடனான நேர்காணலில் இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.முன்னதாக, கார்த்தியின் முந்தை படங்களான பருத்திவீரன், ஆயிரத்தில் ஒருவன், பையா ஆகியவை விமர்சகர்கள் இடையே பாராட்டுகளை பெற்றன. இதில் ஆயிரத்தில் ஒருவன் தவிர மற்ற இரண்டு திரைப்படங்களும் வர்த்தக ரீதியாகவும் வெற்றி பெற்றன. இதனால், நான் மகான் அல்ல திரைப்படத்திற்கு ரசிகர்கள் இடையே மிகுந்த எதிர்பார்ப்பு இருந்ததாகவும் சுசீந்திரன் கூறியுள்ளார்.அதன்படி, “நான் மகான் அல்ல திரைப்படத்தின் க்ளைமேக்ஸ் சண்டைக் காட்சி, ஏறத்தாழ வடிவேலுவின் கிணற்றை காணவில்லை என்ற காமெடி போல் அமைந்தது. படத்தின் தொடக்க காட்சிகளை முதலில் பட்டிணப்பாக்கம் கடற்கரையோரம் படமாக்கினோம். சுனாமியின் போது அந்தப் பகுதி கடுமையாக பாதிக்கப்பட்டிருந்தது.அதன் பின்னர், சுமார் ஆறு மாதங்களுக்கு பின்னர் க்ளைமேக்ஸ் காட்சிகளை படமாக்குவதற்காக அந்தப் பகுதிக்கு சென்றோம். அப்போது, அங்கிருந்த கட்டடங்களை அகற்றி விட்டு வேறு ஒரு கட்டுமான பணிகளை மேற்கொண்டிருந்தனர். அதன் பின்னர், மீண்டும் சுனாமியால் பாதிக்கப்பட்ட இடங்களை தேடிச் சென்ற போது, புதுச்சேரிக்கு சுமார் 30 கிலோமீட்டர் அருகே ஒரு இடத்தை கண்டுபிடித்தோம்.இதையடுத்து, முறையான அனுமதி பெற்று எங்கள் திரைப்படத்திற்கு ஏற்ற வகையில் அதனை சற்று மாற்றினோம். குறிப்பாக, சண்டைக் காட்சிக்கு ஏற்ற வகையில் அதனை மாற்றி அமைத்தோம். அதில் ஆர்ட் டிபார்ட்மென்டுக்கு பெரும் பங்கு இருக்கிறது. அந்தக் காட்சியை நான்கு ஓநாய்களுக்கும், ஒரு சிங்கத்திற்கும் இடையே ஏற்படும் சண்டை போன்று அமைக்க வேண்டும் என்று அனல் அரசு மாஸ்டரிடம் கூறினேன்.நான் சொன்னதற்கு ஏற்ற வகையில் சிறப்பாக அந்த சண்டைக் காட்சி உருவாக்கப்பட்டது. அவ்வளவு சிறப்பாக அந்தக் காட்சி உருவானதற்கு, சண்டை பயிற்சியாளர் அனல் அரசு, ஒளிப்பதிவாளர் மதி மற்றும் கலை இயக்குநர் ராஜீவன் ஆகியோருக்கு தான் நன்றி கூற வேண்டும்” என இயக்குநர் சுசீந்திரன் தெரிவித்துள்ளார்.