வணிகம்
80% சரிந்த ஷேர்… 90% அடி வாங்கிய விற்பனை; தடைக்குப் பிறகு மேகி நூடுல்ஸ் கம்பேக் கொடுத்தது எப்படி?

80% சரிந்த ஷேர்… 90% அடி வாங்கிய விற்பனை; தடைக்குப் பிறகு மேகி நூடுல்ஸ் கம்பேக் கொடுத்தது எப்படி?
நீங்கள், இந்தியாவில் வளர்ந்தவர் என்றால், “மம்மி, பசிக்குது!” என்ற வார்த்தைகள் வெறும் நினைவுகளை மட்டுமல்ல, சமையலறையில் கொதிக்கும் மேகி மசாலாவின் வாசனையையும் கொண்டு வரும். 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு பல தசாப்தங்களாக, மேகி வெறும் பிராண்ட் அல்ல; அது ஒரு மஞ்சள் பாக்கெட்டில் கிடைத்த அரவணைப்பு என்று கூறலாம். ஆனால், 2015-ஆம் ஆண்டில் ஒரே நாள் அது மாறிப்போனது.அதிகப்படியான காரீயச்சத்து (Lead) மற்றும் “எம்.எஸ்.ஜி சேர்க்கப்படவில்லை” என்ற தவறான லேபிள்கள் குறித்த குற்றச்சாட்டுகள் மேகியின் புகழை சரித்தன. ஒரு சில வாரங்களிலேயே, 80% சந்தை பங்கு கொண்டிருந்த அந்த பிராண்ட் பூஜ்யத்திற்கு சரிந்தது; விற்பனையும் 90% குறைந்தது. 30,000 டன்களுக்கும் அதிகமான நூடுல்ஸ்கள் திரும்ப பெறப்பட்டு அழிக்கப்பட்டன. நெஸ்லே இந்தியா, 15 ஆண்டுகளில் முதல் முறையாக ரூ. 64.4 கோடி காலாண்டு இழப்பை சந்தித்தது. ஆனால், இவற்றில் இருந்து ஃபீனிக்ஸ் பறவை போல மீண்டும் மேகி எழுந்தது.இந்த நெருக்கடி, உத்தர பிரதேச அதிகாரிகள் மேகி சாம்பிள்களில் அதிக காரீயச்சத்து (Lead) அளவைக் கண்டறிந்த போது தொடங்கியது. ஜூன் 2015-க்குள், இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) நாடு தழுவிய தடையை விதித்தது. இருப்பினும், உணர்ச்சிபூர்வமான பிணைப்பு (emotional equity) மேகியுடன் பலருக்கு இருந்தது. லட்சக்கணக்கானவர்களுக்கு, மேகி வெறும் உணவு அல்ல; அது குழந்தைப்பருவம், ஹாஸ்டல் வாழ்க்கை, மாலை நேர சிற்றுண்டி என பல வகையில் ஒன்றிணைந்து இருந்தது. இதை உணர்ந்த நெஸ்லே ஒரு சரியான திருப்பத்தை மேற்கொண்டது. ஆனால் இந்த மீட்சி வெறும் மன்னிப்புக் கோரும் விளம்பரங்கள் அல்லது உணர்வுபூர்வமான பிரசாரங்கள் மூலம் மட்டும் வரப்போவதில்லை. அது உறுதியான, சரிபார்க்கக்கூடிய உண்மைகளுடன் தொடங்க வேண்டியிருந்தது.ஒரு பெரிய பாதுகாப்பு சரிபார்ப்பு நடவடிக்கையை நெஸ்லே மேற்கொண்டது. 3,500-க்கும் மேற்பட்ட மேகி நூடுல்ஸ் சாம்பிள்கள், இந்தியா, அமெரிக்கா, இங்கிலாந்து, கனடா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் உள்ள சர்வதேச ஆய்வகங்களில் சோதிக்கப்பட்டன. காரீயச்சத்து (Lead) அளவுகள் அனுமதிக்கப்பட்ட வரம்புகளுக்குள் இருப்பதை முடிவுகள் உறுதிப்படுத்தின. அதே நேரத்தில், நெஸ்லே இந்தியா 30,000 டன்களுக்கும் அதிகமான நூடுல்ஸ்களை திரும்பப் பெற்று அழிக்கும் பெரும் சவாலை சந்தித்தது. இது நுகர்வோர் பாதுகாப்பிற்கான ஒரு வெளிப்படையான மற்றும் உறுதியான அர்ப்பணிப்பு ஆகும். இது தவிர, தகவல் தொடர்பும் குறிப்பிடத்தக்க வகையில் மேம்பட்டது. அச்சு ஊடகங்களை முழுப்பக்க விளம்பரங்களால் நெஸ்லே நிரப்பியது. தங்கள் மேகி பாதுகாப்பானது என்றும், எப்போதும் பாதுகாப்பாகவே இருந்ததாகவும் நுகர்வோருக்கு உறுதியளித்தது. விரிவான விளக்க வீடியோக்கள் மற்றும் தயாரிப்பின் பின்னணி வீடியோக்கள் அவர்களின் வலைதளங்கள், சமூக ஊடகங்களை ஆக்கிரமித்தன. பாதுகாப்பு உறுதிமொழிகளுடன், நெஸ்லே அதன் மிக முக்கியமான பிரசாரங்களில் ஒன்றான #WeMissYouToo என்பதை வெளியிட்டது. இது தவிர நுகர்வோரை கவரும் வகையில் பல்வேறு விளம்பரங்களும் மேற்கொள்ளப்பட்டன. இதன் பின்னர், தனது வர்த்தக மீட்சியை மேகி மேற்கொண்டது. முதலில், ஸ்நாப்டீல் தளத்துடன் இணைந்து ஆன்லைனில் பிரத்யேகமாக தொடங்கப்பட்டது. இதில் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், அனைத்து விதமான விற்பனைகளும் மேற்கொள்ளப்பட்டன. பல விளம்பரங்கள் வெளியிடுவதையும் மேகி கைவிடவில்லை.இதன் விளைவாக, மார்ச் 2016-க்குள் மேகி தனது இழந்த சந்தை பங்கில் 50% க்கும் அதிகமாக மீட்டுக்கொண்டது. 2017 ஆம் ஆண்டின் இறுதிக்குள் இதன் அளவு 60%-ஐ கடந்தது. உண்மை, உணர்வுப்பூர்வம், அறிவியல்பூர்வமான ஆதாரம் ஆகியவற்றை கொண்டு மேகி தனது இருப்பை மேம்படுத்தியது. ஆனால், இந்தப் பயணம் அவ்வளவு எளிதாக அமையவில்லை. சுமார் ரூ. 450 கோடிக்கும் அதிகமாக மேகி செலவிட்டதாக கூறப்படுகிறது. தங்கள் பொருள் பாதுகாப்பானது என்று நிரூபிக்க அறிவியல்பூர்வ ஆதாரங்களை சேகரித்த பின்னர், அதனை உணர்ச்சிப்பூர்வமாக மக்களிடம் கொண்டு சேர்த்தனர். இதனிடையே மேகிக்கு போட்டியாக சில நூடுல்ஸ்களும் களமிறங்கின.இன்று, இந்தியாவில் ஆண்டுக்கு ஆறு பில்லியன்கள் என்ற அளவில் மேகி விற்பனை ஆகிறது. இது நெஸ்லேவின் உலகளாவிய மிகப்பெரிய நூடுல்ஸ் சந்தையாகும். எனினும், மேகி மீண்டும் அலட்சியமாக இருக்க முடியாது என்பதும் நிதர்சனம் தான். அந்த வகையில் மேகியின் இந்த வரலாறு பல நிறுவனங்களுக்கு பாடமாக அமைந்தது.