இந்தியா
ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரி உலக தலைவர்கள் யாரும் இந்தியாவிடம் கூறவில்லை – மக்களவையில் மோடி பேச்சு

ஆபரேஷன் சிந்தூரை நிறுத்தக் கோரி உலக தலைவர்கள் யாரும் இந்தியாவிடம் கூறவில்லை – மக்களவையில் மோடி பேச்சு
பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா நடத்திய ‘ஆபரேஷன் சிந்தூர்’ குறித்த விவாதம் மக்களவையில் இன்று (ஜூலை 29) நடைபெற்றது. அதன் பேரில், பிரதமர் மோடி பல்வேறு தகவல்களை எடுத்துரைத்தார். குறிப்பாக, இந்த நாடாளுமன்ற கூட்டத்தொடர் ‘பாகிஸ்தானுக்கு எதிரான வெற்றி கொண்டாட்டம்’ என்று கூறி மோடி தனது உரையை தொடங்கினார். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் “இது (பாகிஸ்தானின்) பயங்கரவாத தலைமையகங்களை அழித்த வெற்றி கொண்டாட்டம். இது ‘சிந்தூரின்’ சபதத்தை நிறைவேற்றிய வெற்றி கொண்டாட்டம். 140 கோடி இந்தியர்களின் ஒற்றுமைக்கும், மன உறுதிக்கும் கிடைத்த வெற்றிக்கான கொண்டாட்டம் இது” என பிரதமர் மோடி கூறினார். மேலும், பயங்கரவாதிகளுக்கு இப்போது தூக்கம் இல்லை என்றும் அவர் விமர்சித்தார்.ஆபரேஷன் சிந்தூர் மூலம் ‘ஆத்மநிர்பர் பாரத்’ சக்தியை உலகம் முதல்முறையாகக் கண்டது என்று பிரதமர் மோடி குறிப்பிட்டார். “இந்தியாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்கள் மற்றும் ஏவுகணைகள் பாகிஸ்தான் ஆயுதங்களுக்கு எதிராக திறமையைக் காட்டின” என்று அவர் குறிப்பிட்டார். மேலும், “பாகிஸ்தானின் அணுசக்தி மிரட்டலை இந்தியா உடைத்தது; அணுசக்தி மிரட்டலுக்கு நாம் அடிபணிய மாட்டோம் என்று உலகிற்கு நிரூபித்தது” என்றும் பிரதமர் மோடி ஆபரேஷன் சிந்தூர் குறித்து பேசினார்.பஹல்காம் பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடியாக இந்தியா தொடங்கிய ஆபரேஷன் சிந்தூரை பிரதமர் மோடி பாராட்டினார். இப்போது பயங்கரவாதத்தின் மூளையாக செயல்பட்டவர்கள், நிம்மதியாக தூங்க முடியாது என்றும், இதுவே புதிய இயல்பு என்றும் அவர் கூறினார்.ஐ.நா.வில் மூன்று நாடுகள் மட்டுமே பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசின என்று ஆபரேஷன் சிந்தூர் குறித்து பிரதமர் மோடி குறிப்பிட்டார். அரசியல் லாபத்திற்காக காங்கிரஸ் தலைவர்கள் தன்னை தாக்கினார்கள் எனவும், அவர்களின் அர்த்தமற்ற அறிக்கைகள் நமது வீரர்களின் மன உறுதியை விமர்சிக்கும் வகையில் இருந்தது என்றும் அவர் தெரிவித்தார்.மக்களவையில் நடந்த விவாதத்தின் போது, “நமது நடவடிக்கைகளின் நோக்கம் உலகிற்கு தெரிந்துள்ளது. அவை சிந்தூரில் இருந்து சிந்து வரை நீள்கின்றன; பாகிஸ்தான் எந்த தவறு செய்தாலும் மிகப்பெரிய விலையைக் கொடுக்க வேண்டும் என்பது இப்போது புரியும்” என்று பிரதமர் மோடி கூறினார்.”ஆனால் நமது வீரர்களின் வீரத்தை காங்கிரஸ் ஆதரிக்காதது துரதிர்ஷ்டவசமானது” என்று பிரதமர் மோடி தெரிவித்தார். அதன்படி, “காங்கிரஸ் தலைவர்கள் அரசியல் லாபத்திற்காக என்னை குறிவைத்தனர். ஆனால் அவர்களின் அறிக்கைகள் நமது துணிச்சலான வீரர்களை சோர்வடைய செய்தன. எதிர்க்கட்சிகள் என்னை தாக்குவதன் மூலம் ஊடகங்களில் தலைப்பு செய்திகளைப் பெறலாம், ஆனால் நாட்டு மக்களின் இதயங்களில் அவர்களுக்கு இடத்தை பெற்றுத் தராது” என்றும் அவர் குறிப்பிட்டார்.இதேபோல், “செய்தியாளர் சந்திப்பில், இந்தியா தனது நோக்கங்களை தெளிவாகக் கூறியது. எங்கள் இலக்குகள் பயங்கரவாதிகள், பயங்கரவாத உள்கட்டமைப்பு மற்றும் மறைவிடங்கள். மே 6-7 அன்று, ஆபரேஷன் முடிந்ததும், இந்திய ஆயுதப்படைகள் தங்கள் நோக்கத்தை தெளிவுபடுத்தின. எங்கள் இதயத்திலும், மனதிலும் என்ன இருக்கிறது என்பதை அவர்களுக்கு தெரியப்படுத்தின” என்று பிரதமர் நரேந்திர மோடி கூறினார்.”பெரும் இழப்பை சந்தித்த பிறகு, பாகிஸ்தானின் டி.ஜி.எம்.ஓ. (ராணுவ நடவடிக்கைகளின் இயக்குநர் ஜெனரல்) ‘இனி எங்களைத் தாக்காதீர்கள், எங்களால் தாங்க முடியாது’ என்று கூறினார். எந்த ஒரு நாட்டின் தலைவரும், ஆபரேஷன் சிந்தூரை நிறுத்த இந்தியாவிடம் கூறவில்லை” என்று பிரதமர் மோடி தனது மக்களவை உரையில் தெரிவித்தார்.”மே 9 இரவு, அமெரிக்க துணை அதிபர் என்னை 3-4 முறை தொடர்பு கொள்ள முயன்றார், ஆனால் நான் ஆயுதப்படைகளுடனான சந்திப்புகளில் தீவிரமாக இருந்தேன். நான் மீண்டும் அழைத்த போது, பாகிஸ்தானிலிருந்து ஒரு பெரிய தாக்குதல் நிகழும் என்று அவர் எச்சரித்தார். பாகிஸ்தான், இந்தியாவை தாக்கினால், எங்கள் தாக்குதல் மிகவும் பெரியதாக இருக்கும். ஏனெனில், நாங்கள் குண்டுகளுக்கு பீரங்கிகளால் பதிலளிப்போம் என்று நான் அவரிடம் கூறினேன்” என பிரதமர் மோடி தெரிவித்தார்.”இந்தியா தற்சார்பு நிலையை நோக்கி சென்று கொண்டிருக்கிறது. ஆனால் காங்கிரஸ் இப்போது பிரச்சினைகளுக்காக பாகிஸ்தானை சார்ந்துள்ளது. காங்கிரஸ் தங்கள் பிரச்சினைகளை பாகிஸ்தானிலிருந்து இறக்குமதி செய்ய வேண்டும். காங்கிரஸும் அதன் கூட்டணிகளும் துரதிர்ஷ்டவசமாக பாகிஸ்தான் பிரசாரத்தின் செய்தி தொடர்பாளர்களாக மாறிவிட்டனர்” என்று பிரதமர் மோடி விமர்சித்தார்.”இந்தியாவின் வான் பாதுகாப்பு அமைப்புகள் இப்போது உலகெங்கிலும் பேசப்படுகின்றன, பாகிஸ்தான் தாக்குதல்களை அவை முறியடித்த விதம் தான் இதற்கு காரணம். பாகிஸ்தான், இந்தியா மீது 1,000 ஏவுகணைகளையும், ட்ரோன்களையும் ஏவியது. ஆனால் அவை நமது ஆயுதப்படைகளால் வானிலேயே அழிக்கப்பட்டன” என்று பிரதமர் மோடி தகவல் அளித்தார்.பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் ஏன் இன்னும் திரும்பப் பெறப்படவில்லை என்று கேட்பதற்கு முன், அதை யார் விட்டுக் கொடுத்தார்கள் என்று காங்கிரஸ் பதிலளிக்க வேண்டும் என்று பிரதமர் மோடி கூறினார். “நேருவில் தொடங்கி முந்தைய காங்கிரஸ் அரசாங்கத்தால் செய்யப்பட்ட தவறுகளின் வலியை இந்தியா இன்னும் அனுபவித்து வருகிறது” என்று அவர் குற்றம் சாட்டினார்.”இந்தியாவிடம் பாகிஸ்தானின் நிலமும், அதன் வீரர்கள் காவலில் இருந்தபோதும், பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்புகளை அப்போதைய காங்கிரஸ் அரசு இழந்தது” என்று மோடி 1971 இல் பங்களாதேஷில் பாகிஸ்தான் படைகள் காவலில் இருந்ததை குறிப்பிட்டு கூறினார்.”சிந்து நதிநீர் ஒப்பந்தம் நேருவால் செய்யப்பட்டது. இது இந்தியாவின் ஆறுகளிலிருந்து வரும் நீரின் விதியை உலக வங்கி தீர்மானிக்க அனுமதித்தது. இந்தியாவில் உருவாகும் ஆறுகளிலிருந்து 80 சதவீத நீரை பாகிஸ்தானுக்கு கொடுக்க நேரு ஒப்புக்கொண்டார். நமது நாட்டிற்கு வெறும் 20 சதவீதத்தை மட்டுமே எடுத்துக் கொண்டார்” என்று பிரதமர் மோடி விமர்சித்தார். “பாகிஸ்தானுடன் தண்ணீரை பகிர்ந்து கொண்ட பிறகு, அணைகளைக் கட்ட இஸ்லாமாபாத்துக்கு நேரு பணமும் கொடுத்தார்” என்றும் மோடி தெரிவித்தார்.இறுதியாக, பயங்கரவாத நடவடிக்கைகளை பாகிஸ்தான் நிறுத்தாத வரை, இந்தியாவின் ஆபரேஷன் சிந்தூர் நடவடிக்கை தொடரும் என்று மோடி கூறினார்.