இலங்கை
இன்று ஆடி செவ்வாயுடன் கருட பஞ்சமி ; சகல ஐஸ்வர்யத்தையும் பெற இப்படி வழிபடுங்க!

இன்று ஆடி செவ்வாயுடன் கருட பஞ்சமி ; சகல ஐஸ்வர்யத்தையும் பெற இப்படி வழிபடுங்க!
ஆடி மாதத்தில் வரக்கூடிய செவ்வாய்க்கிழமை என்பது மிகவும் சிறப்பு வாய்ந்தது. அதனால் தான் பலரும் ஆடி செவ்வாய் என்று சிறப்பாக கூறி வழிபாடுகள் செய்வார்கள். அப்படிப்பட்ட ஆடி செவ்வாயுடன் சேர்ந்து வரக்கூடிய பஞ்சமி திதி சிறப்பு வாய்ந்தது.
பொதுவாகவே ஆடி மாதத்தில் வரக்கூடிய வளர்பிறை பஞ்சமி நாளை தான் நாம் கருட பஞ்சமி என்று அழைக்கிறோம். அப்படிப்பட்ட கருட பஞ்சமியும் ஆடி செவ்வாயும் ஒரு சேர வருவதால் இன்றைய நாளில் நாம் இரண்டு விதமான வழிபாட்டு முறைகளை ஒரே சமயத்தில் செய்ய அனைத்து நன்மைகளும் நம்மை வந்து சேரும்.
கருட பஞ்சமி நாளன்று நாம் கருட பகவானை வழிபாடு செய்வதன் மூலம் நம் குடும்பத்தில் இருக்கக்கூடிய திருஷ்டி தோஷங்கள் நீங்கும். நீண்ட நாட்களாக நோய்வாய்ப்பட்டு இருப்பவர்களுடைய நோயின் தாக்கம் படிப்படியாக குறையும்.
புதிதாக எந்தவித நோய்களும் தாக்காமல் இருக்கும். இதோடு ஒரு சிலருக்கு திடீர் விபத்து ஏற்பட்டு அதனால் பாதிப்புகள் உண்டாகும் என்று ஜாதகரீதியாக கூறப்பட்டிருக்கும், அப்படிப்பட்டவர்கள் கருட பஞ்சமி வழிபாட்டை செய்யும் பொழுது அந்த விபத்து ஏற்படாமல் தடுக்கப்படும். மனதில் ஒருவித தெளிவு உண்டாகும். குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் எதுவும் இருக்காது. பொருளாதாரத்தில் நல்ல முன்னேற்றம் உண்டாகும்.
இவ்வளவு பலன்களை தரக்கூடிய கருட பஞ்சமி நாளில் வழிபாட்டை ஜூலை மாதம் 29ஆம் திகதி செவ்வாய்க்கிழமை அன்று பிரம்ம முகூர்த்த நேரத்தில் செய்யலாம் அல்லது காலை 7.45 இல் இருந்து 8:45க்குள் செய்யலாம் அல்லது காலை 10:45 இல் இருந்து 11.45 க்குள் செய்யலாம் அல்லது மாலை 5:30 மணியிலிருந்து 8:30 மணிக்குள் செய்யலாம்.
வீட்டில் கருடாழ்வாரின் படம் இருக்கும் பட்சத்தில் அந்த படத்தை சுத்தம் செய்து சந்தனம் குங்குமம் வைத்துக் கொள்ளுங்கள். கருடாழ்வாரின் படம் இல்லாதவர்கள் பெருமாளின் படத்தை வைத்து கூட இந்த வழிபாட்டை செய்யலாம். பெருமாளின் படமும் இல்லை என்பவர்கள் அம்மனின் படத்திற்கு முன்பாக இந்த வழிபாட்டை செய்யலாம். பெருமாள் மற்றும் கருடாழ்வாரின் படம் இருக்கும் பட்சத்தில் துளசி மாலையை சாற்ற வேண்டும்.
பிறகு மூன்று நெய் தீபங்களை வடக்கு அல்லது கிழக்கு பார்த்தவாறு ஏற்றி வைத்துக் கொள்ளுங்கள். நெய்வேத்தியமாக எலுமிச்சை சாதம் காய்ச்சிய பசும்பால் போன்றவை வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு கையில் வாசனை மிகுந்த மலர்களை எடுத்துக்கொண்டு கருடாழ்வாரின் மூல மந்திரத்தை 11 முறை கூற வேண்டும்.
அவ்வாறு கூறி முடித்த பிறகு அம்பிகையை மனதார நினைத்துக் கொண்டு அம்பிகையின் பின்வரும் மந்திரத்தை 11 முறை கூற வேண்டும். இவ்வாறு கூறி முடித்த பிறகு மலர்களை இறைவனுக்கு சமர்ப்பணம் செய்துவிட்டு கற்பூர தீப தூப ஆராதனை காட்டி வழிபாட்டை நிறைவு செய்து கொள்ளலாம்.