இலங்கை
இலஞ்சம் கோரிய இடைத்தரகர் கைது

இலஞ்சம் கோரிய இடைத்தரகர் கைது
நாரஹென்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் இலஞ்சம் கோரிய இடைத்தரகர் ஒருவர் இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளால் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
மோட்டார் சைக்கிளின் பதிவுச் சான்றிதழை அதிகாரபூர்வமாக மாற்றுவற்கு இடைத்தரகர் இலஞ்சம் கோரியதாக கூறப்படுகின்றது.
இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகளுக்கு கிடைத்த தகவலின் பேரில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் சந்தேக நபர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
சந்தேக நபர் மோட்டார் சைக்கிளின் பதிவுச் சான்றிதழை அதிகாரபூர்வமாக மாற்றுவதற்காக நபரொருவரிடம் 30 ஆயிரம் ரூபா பணத்தை இலஞ்சமாக கோரியுள்ளார்.
பின்னர் இலஞ்சமாக கோரிய தொகையில் 10 ஆயிரம் ரூபா பணத்தை நாரஹென்பிட்டியில் உள்ள மோட்டார் வாகன போக்குவரத்துத் திணைக்களத்திற்கு அருகில் உள்ள கடை ஒன்றில் வைத்து பெற முயன்ற போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
கைதான சந்தேக நபர் கொழும்பு நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்படவுள்ளதாக இலஞ்சம் மற்றும் ஊழல் விசாரணை ஆணைக்குழு அதிகாரிகள் தெரிவித்தனர்.