பொழுதுபோக்கு
கிழிந்த பேண்ட், சட்டை; நீ ஹீரோவா? கலாய்த்து சிரித்த கூட்டத்தை சைலண்ட் ஆக்கிய தனுஷின் முதல் ரசிகை!

கிழிந்த பேண்ட், சட்டை; நீ ஹீரோவா? கலாய்த்து சிரித்த கூட்டத்தை சைலண்ட் ஆக்கிய தனுஷின் முதல் ரசிகை!
தமிழ் சினிமாவில் அதிகப்படியான உருவக் கேலிக்கு ஆளான நடிகர்களில் தனுஷும் ஒருவர். தனது திரைப்பயணத்தை தொடங்கிய போது, பிரபல இயக்குநரின் மகன் என்ற விமர்சனத்தை கடந்து, அவரது உருவத்தை வைத்து பலரும் ட்ரோல் செய்தார்கள். குறிப்பாக, ஒரு ஹீரோவுக்கு உரிய உடலமைப்பு தனுஷுக்கு இல்லை என்று கிண்டல் செய்யும் அளவிற்கு இந்த ட்ரோல்கள் அமைந்தன.ஆனால், தன் மீது வைக்கப்பட்ட விமர்சனங்கள் மற்றும் கிண்டல்கள் அனைத்திற்கும் தன்னுடைய திறமை மூலம் தனுஷ் பதிலடி கொடுத்தார். தனுஷின் திரைப்படங்கள் வர்த்தக ரீதியாக நல்ல வரவேற்பை பெற தொடங்கின. ஆனால், அது மட்டும் போதாது என்று விமர்சகர்களின் பாராட்டுகளையும் பெறும் வகையில் தொடர்ந்து பல படங்களில் தனுஷ் நடித்தார்.அந்த வகையில், வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த ஆடுகளம் திரைப்படம், அவருக்கு சிறந்த நடிகருக்கான முதல் தேசிய விருதை பெற்றுக் கொடுத்தது. ஹீரோவுக்கான எந்த தகுதியும் இல்லை என்று கூறியவர்கள் முன்பு, சிறந்த நடிகருக்கான தேசிய விருதை தனுஷ் வென்றார். நடிப்பு மட்டுமின்றி பாடலாசிரியர், தயாரிப்பாளர், இயக்குநர் என்று ஒரு பன்முக திறமையாளராகவும் தனுஷ் மிளிர்ந்தார்.ஒரு கட்டத்தில் தமிழ் சினிமாவை கடந்து டோலிவுட், பாலிவுட், ஹாலிவுட் என தனுஷின் திரைப்பயணம் தொடர்ந்தது. குறிப்பாக, அனிருத், சிவகார்த்திகேயன் என திறமையானவர்களுக்கு ஒரு தயாரிப்பாளராக தனுஷ் வாய்ப்பு வழங்கினார். இந்த அளவிற்கு தனுஷின் பெருமைகளை அடுக்கிக் கொண்டே செல்லலாம். அந்த வகையில், காதல் கொண்டேன் திரைப்பட படப்பிடிப்பின் போது தனக்கு ஏற்பட்ட அனுபவத்தை, பழைய நேர்காணல் ஒன்றில் தனுஷ் பகிர்ந்து கொண்டார்.அதில், “காதல் கொண்டேன் திரைப்படத்தின் படப்பிடிப்பின் போது, யார் ஹீரோ என்று அங்கிருந்த எல்லோரும் கேட்டனர். அப்போது, படத்தின் கெட்டப்பிற்காக கிழிந்த பேன்ட், சட்டை அணிந்து நின்று கொண்டிருந்தேன். யூனிட்டில் இருந்த ஒருவர், என்னை காண்பித்து நான் தான் ஹீரோ என்று கூறினார்.இதைக் கேட்டதும் கூட்டத்தில் இருந்த எல்லோரும் சிரித்து கலாய்த்தனர். இதனால் மிகவும் அவமானமாக உணர்ந்தேன். அந்த சமயத்தில் யாரும் எதிர்பார்க்காத வகையில், கூட்டத்தில் இருந்து ஒரு பள்ளி மாணவி ஓடி வந்தாள். என்னிடம் நோட் புக்கை கொடுத்து ஆட்டோகிராஃப் போடுமாறு அந்த சிறுமி கேட்டாள். மேலும், துள்ளுவதோ இளமை திரைப்படம் தனக்கு மிகவும் பிடிக்கும் என்றும் அச்சிறுமி கூறினாள்.அச்சிறுமி இவ்வாறு சொன்னதும் என்னை பார்த்து சிரித்த அனைவரும், அமைதியாகி விட்டனர். என்றென்றுமே அந்த சிறுமி தான் என்னுடைய முதல் ரசிகை” என்று நடிகர் தனுஷ் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.