இலங்கை
மீண்டும் என்புத் தொகுதிகள் அடையாளம்!

மீண்டும் என்புத் தொகுதிகள் அடையாளம்!
அரியாலை செம்மணி புதைகுழியின் நேற்றைய அகழ்வின்போது புதிதாக 3 மனித என்புத் தொகுதிகள் அடையாளம்காணப்பட்டன.
செம்மணி மனிதப் புதைகுழியின் இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் 23ஆம் நாள் நடவடிக்கைகள் நேற்று முன்னெடுக்கப்பட்டன. இதன் போது மூன்று என்புத்தொகுதிகள் புதிதாக அடையாளம் காணப்பட்டதுடன்ஓர் என்புத்தொகுதி முழுமையாக அகழ்ந்து எடுக்கப்பட்டது.
இதன்படி செம்மணி மனிதப் புதைகுழியில் இருந்து இதுவரை 104 மனித என்புத்தொகுதிகள் அடையாளம் காணப்பட்டுள்ள நிலையில் 96 என்புத்தொகுதிகள் முழுமையாக மீட்கப்பட்டுள்ளன.
நீதிவான் ஏ.ஏ.ஆனந்தராஜாவின் கண்காணிப்பில், துறைசார் நிபுணரும் பேராசிரியருமான சோமதேவாவின் தலைமையில் அகழ்வுப் பணிகள் இடம்பெற்று வருகின்றன.
காணாமல் ஆக்கப்பட்டோர் ஆணைக்குழுவின் சட்டத்தரணி பூரணி மரியநாயகம், காணாமல் ஆக்கப்பட்ட வர்களின் உறவினர்கள் சார்பான சட்டத்தரணி ஞா.ரணித்தா, சட்ட மருத்துவ அதிகாரி பிரணவன் செல்லையா தலைமையிலான குழுவினர், யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவபீட மற்றும் கலைப்பீட தொல்லியற்துறை மாணவர்கள் ஆகியோர் அகழ்வுகளில் முன்னிலையாகிவருகின்றனர்.
மேலும் சட்டத்தரணிகள் சங்கத்தின் சார்பில் நேற்று ஜனாதிபதி சட்டத்தரணிஎம்.ஏ.சுமந்திரன், சட்டத்தரணி கே.சயந்தன் ஆகியோர் அகழ்வுப்பணிகளை அவதானித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.[ஒ]