பொழுதுபோக்கு
அந்த படம் சரியா போகல… பாட்டுல அந்த வார்த்தை வேண்டாம்: சச்சின் பட பாடலை திருத்திய விஜய்!

அந்த படம் சரியா போகல… பாட்டுல அந்த வார்த்தை வேண்டாம்: சச்சின் பட பாடலை திருத்திய விஜய்!
விஜய் நடிப்பில் வெளியான ‘சச்சின்’ திரைப்படத்தில் வரும் ‘வாடி வாடி’ பாடலில் இருந்த ஒரு வார்த்தையை மட்டும் மாற்றி எழுதிய சம்பவத்தை பாடலாசிரியர் இளங்கோ நினைவு கூர்ந்துள்ளார். கடந்த 2005-ஆம் ஆண்டு கலைப்புலி தாணு தயாரிப்பில், ஜான் மகேந்திரன் இயக்கத்தில், விஜய், வடிவேலு, ஜெனிலியா ஆகியோர் நடிப்பில் வெளியான திரைப்படம் ‘சச்சின்’. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்தார். இப்படம் தமிழ் புத்தாண்டின் போது ‘சந்திரமுகி’, ‘மும்பை எக்ஸ்பிரஸ்’ ஆகிய படங்களுடன் வெளியானது.அன்றைய காலகட்டத்தில் இப்படம் வர்த்தக ரீதியாக எதிர்பார்த்த அளவிற்கு வெற்றி பெறவில்லை. ஆனால், பல விஜய் ரசிகர்களுக்கு இப்படம் இன்றளவும் ஃபேவரட்டாக உள்ளது. இந்நிலையில், கடந்த பிப்ரவரி 11-ஆம் தேதி இப்படம் திரையரங்குகளில் மறுவெளியீடு செய்யப்பட்டது. விஜய்யின் ‘கில்லி’ படம் ரீ-ரிலீஸ்க்கு கிடைத்த வரவேற்பு போன்று இப்படத்திற்கும் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், அந்த அளவிற்கு ரசிகர்களிடம் வரவேற்பு கிடைக்கவில்லை என்பது நிதர்சனம். இந்த சூழலில் அப்படத்தில் இடம்பெற்ற ‘வாடி வாடி’ பாடலை எழுதிய பாடலாசிரியர் இளங்கோ, தனது அனுபவங்களை சினிமா விகடன் யூடியூப் சேனலுக்கு அளித்த நேர்காணலில் பகிர்ந்து கொண்டார்.அதன்படி, “சச்சின் திரைப்படத்தில் இடம்பெற்ற ‘வாடி வாடி’ பாடலில் மேதை என்றாலும் பேதை என்றாலும் கீதை போலாகும் இந்தப் பாட்டு என்ற வரியை எழுதினேன். ஆனால், அந்த வரிகளை மாற்றி எழுதுமாறு விஜய் கூறினார். ஏனெனில், ‘புதிய கீதை’ திரைப்படம் சரியாக ஓடாத காரணத்தினால், சென்டிமென்டாக இந்த வரிகளை வேண்டாம் என்று விஜய் கூறினார்.அதற்கு பதிலாக வேறு ஒரு வார்த்தையை பயன்படுத்துமாறு விஜய் கூறினார். அதனால், மேதை என்றாலும் பேதை என்றாலும் வேதம் போலாகும் இந்தப் பாட்டு என்று வரிகளை மாற்றினோம். இந்தப் பாடல் விஜய்க்கு மிகவும் பிடித்திருந்தது. இந்தப் பாடலை விஜய் பாடியது கூடுதல் கவனம் பெற்றது. பாடலாசிரியர், கதாநாயகன், இசையமைப்பாளர் என ஒரு கூட்டு முயற்சியின் மூலம் ஒரு பாடல் ஹிட்டாகும்.இதேபோல், ‘டேவிட்’ திரைப்படத்தில் நான் எழுதிய பாடலை விக்ரம் பாடி இருந்தார். நாங்கள் இருவரும் ஒரே பள்ளியில் படித்தோம். அந்த நேரத்தில் எனக்கு பையாலஜி படங்களை விக்ரம் தான் வரைந்து கொடுப்பார். அந்த அளவிற்கு நண்பர்களாக இருந்தோம்” என பாடலாசிரியர் இளங்கோ தெரிவித்துள்ளார்.