வணிகம்
ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி; ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் ‘அபராதம்’: ட்ரம்ப் அறிவிப்பு

ஆகஸ்ட் 1 முதல் இந்தியாவுக்கு 25% வரி; ரஷ்யாவுடன் வர்த்தகம் செய்தால் ‘அபராதம்’: ட்ரம்ப் அறிவிப்பு
ஆகஸ்ட் 1 ஆம் தேதி வர்த்தக ஒப்பந்தங்களை முடிப்பதற்கான காலக்கெடு நெருங்கி வரும் நிலையில், இந்தியா மீது 25% வரி மற்றும் அபராதம் விதிக்கப்படும் என அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இன்று (ஜூலை 30) அறிவித்துள்ளார். இந்தச் செய்தியை ஆங்கிலத்தில் படிக்க கிளிக் செய்யவும் தனது “ட்ரூத் சோஷியல்” தளத்தில் ட்ரம்ப் பதிவிட்ட ஒரு குறிப்பில், இந்தியாவில் பல வருடங்களாக இருந்து வரும் பாதுகாப்புவாத கொள்கைகள் காரணமாக அமெரிக்கா அவர்களுடன் ஒப்பீட்டளவில் குறைந்த வணிகமே செய்துள்ளது என்று தெரிவித்துள்ளார்.”மேலும், அவர்கள் எப்போதும் தங்கள் ராணுவ உபகரணங்களில் பெரும்பாலானவற்றை ரஷ்யாவிடமிருந்தே வாங்கியுள்ளனர். உக்ரைனில் போரை நிறுத்த அனைவரும் விரும்பும் நேரத்தில், சீனாவுடன் சேர்ந்து ரஷ்யாவின் மிகப்பெரிய எரிசக்தி வாங்குபவர்களாகவும் உள்ளனர். இவை அனைத்தும் நல்ல விஷயங்கள் அல்ல” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். இருப்பினும், புதிதாக அறிவிக்கப்பட்ட 25% வரியை கடந்து, “அபராதம்” என்பதற்கான விளக்கத்தை அவர் தெளிவுபடுத்தவில்லை. “இந்தியாவுடன் எங்களுக்கு ஒரு பெரிய வர்த்தக பற்றாக்குறை உள்ளது” என்றும் அவர் தெரிவித்தார்.அமெரிக்காவும், இந்தியாவும் பல மாதங்களாக ஒரு வர்த்தக ஒப்பந்தம் குறித்து விவாதித்து வருகின்றன. ஆனால், இறுதி ஒப்பந்தம் இதுவரை எட்டப்படவில்லை. அமெரிக்க பொருட்களுக்கு இந்திய சந்தையில் அதிக அணுகலை ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருகிறார். மற்ற வர்த்தக பேச்சுவார்த்தைகளிலும் அவர் இதே போன்ற கோரிக்கைகளை முன்வைத்துள்ளார்.முன்னதாக, ஏப்ரல் மாதம் இந்திய பொருட்களுக்கு 26% வரியை ட்ரம்ப் விதித்திருந்தார். இது அதிகமாக இருந்தாலும், சீனா மீது விதிக்கப்பட்ட 104%, கம்போடியா மீது விதிக்கப்பட்ட 49% மற்றும் வியட்நாம் மீது விதிக்கப்பட்ட 46% ஆகியவற்றை விட குறைவாகவே இருந்தது குறிப்பிடத்தக்கது.