பொழுதுபோக்கு
‘ஒரு கதை சொல்லு ராம்’… அம்மா வசனத்தை பேசி அசத்திய மகள்: தேவயானிக்கு தெரியுமா?

‘ஒரு கதை சொல்லு ராம்’… அம்மா வசனத்தை பேசி அசத்திய மகள்: தேவயானிக்கு தெரியுமா?
‘பஞ்ச தந்திரம்’ திரைப்படத்தில் நடிகை தேவயானியின் வசனமான ‘ஒரு கதை சொல்லு ராம்’ டையலாக்கை அவரது மகள் இனியா பேசி அசத்திய வீடியோ தற்போது வைரலாக பரவி வருகிறது.தமிழ், தெலுங்கில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தேவயானி. ‘தொட்டாசிணுங்கி’ திரைப்படத்தின் மூலம் ரசிகர்களுக்கு அறிமுகமான இவர், அதன் பின்னர் பல ஹிட் திரைப்படங்களில் நடித்துள்ளார். குறிப்பாக, அகத்தியன் இயக்கத்தில், அஜித் குமாருடன் இணைந்து இவர் நடித்த ‘காதல் கோட்டை’ திரைப்படம், இவரது கலைப்பயணத்தில் திருப்புமுனையாக அமைந்தது. இதேபோல்,, ‘சூர்யவம்சம்’, ‘நினைத்தேன் வந்தாய்’, ‘நீ வருவாய் என’, ‘தெனாலி’, ‘ஆனந்தம்’, ‘அழகி’ என பல படங்களில் இவரது நடிப்பு பேசப்பட்டது. திரைப்படங்களை போலவே சின்னத்திரையிலும் தேவயானி வெற்றிவாகை சூடினார். இவரது நடிப்பில் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான ‘கோலங்கள்’ தொடர், பல லட்சம் மக்களிடம் தேவயானியை கொண்டு சேர்த்தது. நீண்ட இடைவெளிக்கு பின்னர், அண்மையில் இவரது நடிப்பில் வெளியான ‘3BHK’ திரைப்படம் விமர்சன ரீதியாக வரவேற்பை பெற்றது. கடந்த 2001-ஆம் ஆண்டு இயக்குநர் ராஜகுமாரனை, நடிகை தேவயானி காதலித்து திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு இரண்டு பெண் குழந்தைகள் இருக்கின்றனர். இவர்களது மகள் இனியா ஜீ தமிழ் தொலைக்காட்சியின் ரியாலிட்டி நிகழ்ச்சியில் கலந்து கொண்டு அசத்தி வருகிறார். குறிப்பாக, இவர் பாடும் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்று வருகின்றன. மேலும், இவரது பாடல்களை நிகழ்ச்சியின் நடுவர்களும் பாராட்டியுள்ளனர். இந்நிலையில், அந்த நிகழ்ச்சியில் தனது அம்மாவின் வசனத்தை இனியா பேசிக் காண்பித்த க்யூட்டான வீடியோ இணையத்தில் வைரலாக பரவி வருகிறது. கே.எஸ். ரவிக்குமார் இயக்கத்தில், கமல்ஹாசன், சிம்ரன் நடிப்பில் வெளியான ‘பஞ்ச தந்திரம்’ திரைப்படத்தில் ஒரு காட்சியில் தேவயானி நடித்திருப்பார். அந்தக் காட்சியில் கமல்ஹாசனிடம் ‘ஒரு கதை சொல்லு ராம்’ என தேவயானி பேசும் வசனம் பிரபலமானது. அந்த வசனத்தை தேவயானி போன்று அவரது மகள் இனியா பேசிக் காண்பித்தது, பலரையும் ஆச்சரியத்தில் ஆழ்த்தியது. பாடல் மட்டுமின்றி தனது அம்மாவின் குரலில் மிமிக்ரி செய்து இனியா அசத்தியதற்கு பலரும் பாராட்டுகளை தெரிவித்துள்ளனர்.