பொழுதுபோக்கு
கேமரா கண்டுபிடிச்சவன் ஊர்ல தென்னை மரமே இல்ல; ஆனா நீங்க தேங்காய் வச்சி திருஷ்டி சுத்துறீங்க: சத்யராஜ் ரியல் சம்பவம்!

கேமரா கண்டுபிடிச்சவன் ஊர்ல தென்னை மரமே இல்ல; ஆனா நீங்க தேங்காய் வச்சி திருஷ்டி சுத்துறீங்க: சத்யராஜ் ரியல் சம்பவம்!
கேமராவிற்கு தேங்காய் கொண்டு திருஷ்டி சுற்றிய ஒரு சம்பவத்தை நினைவு கூர்ந்த நடிகர் சத்யராஜ், இதற்கு இயக்குநர் வேலு பிரபாகரன் அளித்த விளக்கத்தையும் தெரிவித்துள்ளார். வாவ் தமிழா யூடியூப் சேனலில் பதிவிடப்பட்டுள்ள இந்த வீடியோ, தற்போது சமூக ஊடகங்களில் ட்ரெண்டாகி வருகிறது.தமிழ் சினிமாவில் பழம்பெரும் நடிகர்களில் ஒருவராக திகழ்பவர் சத்யராஜ். சிவாஜி – எம்.ஜி.ஆர் காலத்தில் தனது திரைப்பயணத்தை தொடங்கிய சத்யராஜ், இன்று வரை வெற்றிகரமான நடிகராக வலம் வருகிறார். குறிப்பாக, தெலுங்கு மற்றும் இந்தி திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் சத்யராஜ் நடித்திருக்கிறார். இந்நிலையில், படப்பிடிப்பின் போது ஏற்பட்ட ஒரு சுவாரஸ்ய சம்பவத்தை நடிகர் சத்யராஜ் சமீபத்தில் பகிர்ந்து கொண்டார்.அதில், “1987-ஆம் ஆண்டு அமெரிக்காவில் எனது தங்கை வசித்தார். அப்போது, அவரைக் காண்பதற்காக அமெரிக்காவிற்கு சென்றேன். சிகாகோவில் இருந்து நயாகரா நீர் வீழ்ச்சிக்கு செல்லும் வழியில் ஒரு சிறிய கிராமம் இருந்தது. அந்தக் கிராமத்தில் தான் தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்ததாக என்னிடம் கூறினார்கள்.சினிமாவிற்கான அவரது பங்களிப்பை நினைவு கூரும் விதமாக அங்கு செல்லலாம் என்று நினைத்தேன். அந்தக் கிராமத்தில் அவரது கண்டுபிடிப்புகள், அவருடைய சிலை ஆகியவை காட்சிப்படுத்தப்பட்டிருந்தன. என்னுடைய இந்த நிலைக்கு அவர் ஒரு முக்கியமான காரணம் என்று நினைத்துக் கொண்டேன்.இதற்கு அடுத்து 1988-ஆம் ஆண்டு இங்கு ஒரு படப்பிடிப்பில் கலந்து கொண்டேன். அப்போது, கேமரா முன்பு தேங்காய் கொண்டு திருஷ்டி சுற்றினார்கள். இதை பார்த்த இயக்குநர் பிரபாகரன், கற்பூரத்தில் இருந்து வரும் புகை கேமரா லென்ஸில் பட்டால், படம் தெளிவாக இருக்காது என்று சற்று தள்ளி நின்று அதனை சுற்றுமாறு கூறினார். அதன் பின்னர், இடைவெளியின் போது அவரிடம் சென்று பேசினேன். அப்போது, கேமராவை கண்டுபிடித்த தாமஸ் ஆல்வா எடிசன் பிறந்த ஊரில் தென்னை மரமே கிடையாது எனவும், அவர் கேமராவை கண்டுபிடித்து அனுப்பி வைத்தால், இங்கு அதற்கு தேங்காய் சுற்றுகிறார்கள் எனவும் என்னிடம் கூறினார். மேலும், இதற்கு பதிலாக ப்ளம்ஸ் அல்லது ஆப்பிள் பழத்தை சுற்றினால் நியாயமாக இருக்கும் என்றும் என்னிடம் வேடிக்கையாக தெரிவித்தார்” என நடிகர் சத்யராஜ் கூறியுள்ளார்.