பொழுதுபோக்கு
சக நடிகர் மனைவியுடன் திருமணம்; அவர் குடும்பத்தை தத்தெடுத்த வி.கே.ராமசாமி: அந்த நடிகர் யார் தெரியுமா?

சக நடிகர் மனைவியுடன் திருமணம்; அவர் குடும்பத்தை தத்தெடுத்த வி.கே.ராமசாமி: அந்த நடிகர் யார் தெரியுமா?
வி.கே. ராமசாமி நகைச்சுவையாளர் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர் ஆவார். இவர் 1947 முதல் 2001 வரை தமிழ் படங்களில் பல்வேறு குணச்சித்திர வேடங்களில் நடித்ததற்காக அறியப்பட்டவர். சிறு வயதிலிருந்தே நடிப்பில் ஆர்வம் கொண்ட இவர், பொன்னுசாமி பிள்ளையின் பாலகான சபாவில் சேர்ந்தார்.21 வயதில், ஏவிஎம் பிலிம்ஸின் முதல் படமான ‘நாம் இருவர்’ (1947) படத்தில் 60 வயது முதியவராக நடித்து அனைவரது கவனத்தையும் ஈர்த்தார். ஐந்து தசாப்தங்களுக்கும் மேலாக நீடித்த தனது வாழ்க்கையில் 500 க்கும் மேற்பட்ட படங்களில் நடித்தார். பெரும்பாலும் முதியவர் கதாபாத்திரங்களிலேயே நடித்தார். 1960கள் மற்றும் 1970களில், டி.ஆர். மகாலிங்கம், எம்.ஜி. ராமச்சந்திரன், சிவாஜி கணேசன், ஜெமினி கணேசன், ஜெய் சங்கர், ரவிச்சந்திரன், முத்துராமன், கமல்ஹாசன் மற்றும் ரஜினிகாந்த் போன்ற பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்தார்.இயக்குநர்கள் மணிரத்னம், பாசில், பிரியதர்ஷன் மற்றும் பார்த்திபன் போன்றோரின் படங்களில் அஞ்சலி, அரங்கேற்ற வேளை, கோபுர வாசலிலே மற்றும் புதிய பாதை போன்ற படங்களில் முக்கியமான கதாபாத்திரங்களில் நடித்தார். அவரது தனித்துவமான குரல் மற்றும் வசன உச்சரிப்பு அவரது அடையாளமாக மாறியது. நகைச்சுவை, குணச்சித்திரம் மற்றும் வில்லன் வேடங்களில் திறமையாக நடித்தார். மணிரத்னம் தயாரித்து அழகம்பெருமாள் இயக்கிய மாதவன்-ஜோதிகா நடித்த ‘டும் டும் டும்’ (2001) படம் இவரது கடைசி படங்களில் ஒன்று.ராமசாமிக்கு தனது முதல் மனைவி சூரியகுமாரி மூலம் ரகுநாத் மற்றும் ராஜேந்திரன் என்ற இரண்டு மகன்கள் இருந்தனர். அவர் தனது இரண்டாவது திருமணம் ராமணியம்மாளுடன் நடந்தது. இவர், அவரது இணை நடிகரும் மற்றொரு பிரபலமான குணச்சித்திர நடிகருமான எம்.ஆர். ராதாவின் முன்னாள் மனைவி. அந்த நேரத்தில், ராமணியம்மாள் கடினமான பிரிவுக்குப் பிறகு தனது இரண்டு மகன்களான ரகு மற்றும் ரவியை வளர்க்க சிரமப்பட்டார்.அவரது சூழ்நிலையால் மனம் உருகிய ராமசாமி, ராமணியம்மளை திருமணம் செய்து கொண்டதோடு மட்டுமல்லாமல், அவரது மகன்களையும் தனது சொந்த மகன்களாக ஏற்றுக்கொண்டார். வி.கே. ராமசாமி 2002 டிசம்பர் 24 அன்று தனது 76 வயதில் சிறுநீரக மற்றும் பிற உடல்நலக் குறைபாடுகள் காரணமாக சென்னையில் காலமானார்.