வணிகம்
சம்பள உயர்வுக்கு ‘நோ’… டி.சி.எஸ் இறக்கிய அடுத்த இடி: சொல்லும் ஆனந்த் சீனிவாசன்

சம்பள உயர்வுக்கு ‘நோ’… டி.சி.எஸ் இறக்கிய அடுத்த இடி: சொல்லும் ஆனந்த் சீனிவாசன்
தற்போதைய காலகட்டத்தில் தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றுபவர்கள் அதிக அளவில் ஊதியம் பெறுவதாக ஒரு கருத்து நிலவி வருகிறது. மற்ற துறைகளில் ஒரு நபருக்கு இருக்கும் வளர்ச்சியை விட, இந்த துறையில் ஊதியத்திற்கான வளர்ச்சி அதிகமாக இருக்கிறது என்று சாமானிய மக்கள் நினைக்கின்றனர்.ஆனால், கொரோனா தொற்றுக்கு பிறகு இந்த நிலை மாறியதாக தகவல் தொழில்நுட்ப துறையில் பணியாற்றும் பலர் கூறுகின்றனர். குறிப்பாக, ஊதியத்தை குறைத்தது முதல் ஆயிரக்கணக்கான ஊழியர்களை பணி நீக்கம் செய்தது வரை பல நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. சிறிய நிறுவனங்கள் மட்டுமின்றி பிரபலமான நிறுவனங்கள் கூட அடிக்கடி ஊழியர்களை பணி நீக்கம் செய்து வருகின்றனர்.இந்த சூழலில், டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் 12 ஆயிரம் ஊழியர்களை பணி நீக்கம் செய்வதாக கடந்த சில நாட்களுக்கு முன்பு செய்தி வெளியானது. இந்த தகவல் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியது. இந்நிலையில், மற்றுமொரு அதிர்ச்சி தகவல் பரவி வருகிறது. அதாவது, டி.சி.எஸ் நிறுவனத்தில் பணியாற்றும் ஊழியர்களுக்கு சம்பள உயர்வு இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பான பல்வேறு தகவல்களை பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தனது யூடியூப் சேனலில் குறிப்பிட்டுள்ளார்.அதில், “டி.சி.எஸ் கடந்த மூன்று ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு சரிவை சந்தித்து இருக்கிறது. ஏற்கனவே 12 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்யப் போவதாக தகவல் வெளியாகி இருந்தது. ஆனால், இந்த எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தவிர ஊழியர்களுக்கு சம்பள உயர்வு அளிக்கும் எண்ணமும் கிடையாது என்று டி.சி.எஸ் தெரிவித்துள்ளது.ஊழியர்களுக்கான சம்பள உயர்வை நிறுத்தி வைத்திருப்பதாக கூறப்படுகிறது. டி.சி.எஸ் நிறுவனம் தற்போது கடுமையான அழுத்தத்தில் இருக்கிறது. ஏற்கனவே, மைக்ரோசாஃப்ட் நிறுவனம் 5 சதவீத ஊழியர்கள் என்ற கணக்கில் 25 ஆயிரம் பேரை பணி நீக்கம் செய்தது. இதன் காரணமாக ஊழியர்கள் அனைவரும் வேறு நிறுவனங்களுக்கு வேலை தேடி செல்கின்றனர். பல நாட்களாக பெஞ்சில் இருக்கும் ஊழியர்களையும் பணி நீக்கம் செய்ய டி.சி.எஸ் தயாராக இருக்கிறது. டி.சி.எஸ்-ல் மட்டும் 12 ஆயிரம் பேர் பணி நீக்கம் என்றால், ஒட்டுமொத்த தகவல் தொழில்நுட்ப துறையிலும் சுமார் ஒரு லட்சம் பேர் பணி இழப்பை சந்தித்திருக்க வாய்ப்பு இருக்கிறது” என பொருளாதார வல்லுநர் ஆனந்த் ஸ்ரீனிவாசன் தெரிவித்துள்ளார்.