பொழுதுபோக்கு
பண மோசடி வழக்கு: காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது

பண மோசடி வழக்கு: காமெடி நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கைது
2010-ம் ஆண்டு வெளியான உனக்காக ஒரு கவிதை என்ற படத்தின் மூலம் திரைத்துறையில் நடிகராக அறிமுகமானவர் ஸ்ரீனிவாசன். அக்குபிரஷர் டாக்டரான இவர், தொடர்ந்து நீதானா அவன், மண்டபம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். 2011 ஆம் ஆண்டு வெளியான லத்திகா என்ற படத்தை தயாரித்து ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படங்கள் இவருக்கு கை கொடுக்கவில்லை. பின்னர், 2013-ம் ஆண்டு வெளியாக கண்ணா லட்டு திண்ண ஆசையா என்ற படம் பெரிய வெற்றியை கொடுத்தது. சந்தானம் மற்றும் சேது ஆகியோருடன் நடித்த பவர் ஸ்டார் ஸ்ரீனிவாசன் இந்த படத்தில் காமெடியில் கலக்கியிருந்தார். அதன்பிறகு, ஐ உள்ளிட்ட பல படங்களில் காமெடி மற்றும் கேமியோ ரோலில் நடித்தார். கடந்த 2013-ம் ஆண்டு வெளியான பாட்டி சொல்லை தட்டாதே என்ற படத்தில் நடித்திருந்தார்.இதனைத் தொடர்ந்து, களம், அழகன் அழகி, அட்ரா மச்சான் விசில், சுட்ட பழம் சுடாத பழம், மகுடி, வாங்க வாங்க உள்ளிட்ட படங்களில் அவர் நடித்தார். இந்தப் படங்கள் அவருக்கு பெரும் வரவேற்பை தரவில்லை. கடந்த ஆண்டு டிசம்பரில் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்ட பவர் ஸ்டார் சீனிவாசன், சென்னை கிண்டியில் உள்ள கலைஞர் நூற்றாண்டு உயர் சிறப்பு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவர் சிறுநீரக கோளாறுக்கு ஒரு வார காலம் சிகிச்சை எடுத்துக் கொண்டார். மதுரையை பூர்வீகமாக கொண்ட சீனிவாசன் அரசியல் கட்சிகளிலும் தொடர்பில் இருந்து வருகிறார். 2013-ல் மோசடி புகார்களுக்காக கைது செய்யப்பட்டிருந்த நிலையில், 2018-ம் ஆண்டு அவர் கடத்தப்பட்டதாக வெளியான தகவல் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இந்த நிலையில், பண மோசடி வழக்கில் நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை டெல்லி போலீசார் கைது செய்தனர். ரூ.1,000 கோடி கடன் பெற்றுத் தருவதாகக் கூறி ரூ.5 கோடி வாங்கி பண மோசடி செய்த புகாரில் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். பவர் ஸ்டார் சீனிவாசன் மீது 6 மோசடி வழக்குகள் உள்ள நிலையில், 2018ம் ஆண்டு முதல் நீதிமன்றத்தில் விசாரணைக்கு ஆஜராகாமல் இருந்துள்ளார். நீதிமன்றத்தால் 2 முறை குற்றவாளியாக அறிவிக்கப்பட்ட நிலையில் டெல்லி போலீசாரால் சீனிவாசன் கைது செய்யப்பட்டுள்ளார். மோசடி செய்த பணத்தை திரைப்படம், சொந்த செலவுக்காக பவர் ஸ்டார் பயன்படுத்தி வந்ததாகவும் கூறப்படுகிறது.