இலங்கை
மாகாணசபைத் தேர்தல் சட்டச் சிக்கல்களுக்கு நாடாளுமன்றிடமே தீர்வு; தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!

மாகாணசபைத் தேர்தல் சட்டச் சிக்கல்களுக்கு நாடாளுமன்றிடமே தீர்வு; தேர்தல்கள் ஆணையாளர் தெரிவிப்பு!
மாகாணசபைத் தேர்தலை எந்த முறையில் நடத்துவது என்ற சட்டச்சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வுகாண முடியும்.தேர்தல் முறையைத் தீர்மானித்தால் அதற்கேற்ப செயற்படநாங்கள் தயாராகவே உள்ளோம் என்று தேர்தல்கள் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
கடந்த 10 மாத காலப்பகுதியில் 3 தேர்தல்களை நடத்தி முடித்துள்ளோம். உயர்நீதிமன்றத்தின் உத்தரவுக்கமைய உள்ளூராட்சிமன்றத் தேர்தலை சிறந்த முறையில் நடத்தினோம். தற்போது உள்ளூராட்சிமன்ற அதிகாரசபைகள் நிறுவப்பட்டுள்ளன.
மக்கள் பிரதிநிதிகள் இல்லாமல் மாகாணசபைகள் இயங்குவது ஜனநாயகத்துக்கு விரோதமானது என்று முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளை ஏற்றுக்கொள்கின்றோம். மாகாணசபைத் தேர்தலை விரைவாக நடத்த வேண்டும் என்ற நிலைப்பாட்டுடன் நாங்களும் உடன்படுகின்றோம். எனினும், மாகாணசபைத் தேர்தலை பழைய தேர்தல் முறையில் நடத்துவதா? அல்லது புதிய தேர்தல் முறையிலா நடத்துவது ? என்பதில் சட்டச் சிக்கல்கள் காணப்படுகின்றன. இந்தச் சட்டச் சிக்கல்களுக்கு இன்னமும் காத்திரமான தீர்வெதையும் கண்டு கொள்ளவில்லை.
மாகாணசபைத் தேர்தலை எந்தத்தேர்தல் முறையில் நடத்துவது என்ற சட்டச்சிக்கலுக்கு நாடாளுமன்றத்தின் ஊடாகவே தீர்வுகாண முடியும். தேர்தல் முறையைத் தீர்மானித்தால் தேர்தலை நடத்தத் தயாராகவே உள்ளோம். தேர்தல்முறைப் பிரச்சினைக்குத் தீர்வுகாணும் பொறுப்பு அரசியற் கட்சிகளுக்கும் உள்ளது – என்றார்.