இலங்கை
2026 இல் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடி : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்!

2026 இல் ஏற்படப்போகும் பொருளாதார நெருக்கடி : எச்சரிக்கும் முன்னாள் அமைச்சர்!
அடுத்த வருடம் இக்காலப்பகுதியில் இலங்கையில் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும். அதனை நோக்கியே இந்நாட்டை அரசாங்கம் அழைத்துச்செல்வதாக பிவிதுரு ஹெல உறுமயவின் தலைவரும், முன்னாள் அமைச்சருமான உதய கம்மன்பிலதெரிவித்தார்.
கொழும்பில் நேற்று முன்தினம் (28) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு கூறினார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
2028 இல் இந்நாடு கடன் செலுத்தும் நாடாக மாறவேண்டுமெனில் வருடாந்த பொருளாதார வளர்ச்சி வீதம் 5 ஆக இருக்க வேண்டும் என சர்வதேச நாணய நிதியம் கூறியுள்ளது. 2024 இல் நாம் இதனை செய்தோம். எனினும், தற்போது பொருளாதார வளச்சி வீதமானது 3.5 ஆகவும், அடுத்த வருடம் 3.1. ஆகவும் இருக்குமென சர்வதேச நாணய நிதியம் மதிப்பிட்டுள்ளது.
எனவே, சர்வதேச நாணய நிதியத்தின் இலக்குகளை அடைய முடியாமல் பொருளாதார நெருக்கடி ஏற்படக்கூடும்.
இந்நிலையில் எதிரணிகள் ஒன்றுபட்டால் அடுத்த வருடம் அதே காலப்பகுதியில் நாடாளுமன்ற தேர்தலை நடத்த முடியும்.
எதிரணிகள் ஓரணியில் திரண்டால் மட்டுமே இது சாத்தியமாகும். அடுத்த ஜனாதிபதி யார் என்ற விடயத்தை ஒரு புறம் வைத்துவிட்டு, நாடாளுமன்ற தேர்தலை வென்றெடுக்க ஒன்றுபட வேண்டும். ஜனாதிபதி யாரென்பதை மக்கள் தீர்மானிக்கட்டும். இந்த ஆட்சியை கவிழ்க்கும் பொறுப்பை எதிரணிகள் ஏற்க வேண்டும். எதிரணியை ஐக்கியப்படுத்தும் முயற்சியில் நான் இறங்கியுள்ளேன் என மேலும் தெரிவித்தார்.