பொழுதுபோக்கு
அப்போ வாய்ப்புக்கு அலைவாங்க, ஆனா இப்போ அழகா இருந்தாலே போதும்; சீரியல் ரொம்ப மாறிடுச்சு: நடிகை தேவி பிரியா ஆதங்கம்!

அப்போ வாய்ப்புக்கு அலைவாங்க, ஆனா இப்போ அழகா இருந்தாலே போதும்; சீரியல் ரொம்ப மாறிடுச்சு: நடிகை தேவி பிரியா ஆதங்கம்!
தொலைக்காட்சி தொடர்களில் சீனியர் நடிகையாக வலம் வரும் தேவி பிரியா, தற்போது இந்த துறையில் ஏற்பட்டிருக்கும் மாற்றங்கள் குறித்து தெரிவித்துள்ளார். சமீபத்தில் கலாட்டா தமிழ் யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த நேர்காண்லில் இதனை குறிப்பிட்டுள்ளார்.தமிழ் சீரியல்களை விரும்பி பார்ப்பவர்களுக்கு, நடிகை தேவி பிரியாவை நிச்சயம் தெரிந்திருக்கும். செல்லமே, அண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு சீரியல்கள் மூலம் ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்தவர் தேவி பிரியா. தற்போதும் ஏராளமான சீரியல்களில் நடித்து வருகிறார். இது தவிர வாலி உள்ளிட்ட சில திரைப்படங்களில் தேவி பிரியா நடித்துள்ளார். இந்நிலையில், சீரியல் துறையில் தனது அனுபவம் மற்றும் இப்போது ஏற்பட்டுள்ள மாற்றங்கள் உள்ளிட்ட பல தகவல்களை மனம் திறந்து அவர் கூறியுள்ளார்.அதன்படி, “இப்போது தயாரிக்கப்படும் தொலைக்காட்சி தொடர்கள் அனைத்தும் பெரிய அளவில் மாற்றம் அடைந்து வருகின்றன. முன்னர் இருந்த காலத்தில், கலைஞர்களுக்கு வாய்ப்பு அரிதாக கிடைத்தது. அவ்வாறு கடினமான முயற்சிகளுக்கு பிறகு பெற்ற வாய்ப்பை, தக்கவைத்துக் கொள்வதற்காக தன்னடக்கத்துடனும், பயத்துடன் கவனமாக செயல்பட்டனர்.ஆனால், தற்போதைய காலகட்டத்தில் சமூக ஊடகங்களில் பதிவிடும் புகைப்படத்தில் ஒரு பெண் அழகாக இருந்தாலே, அப்பெண்ணுக்கு வாய்ப்பு கிடைத்து விடுகிறது. இன்ஸ்டாகிராம் ரீல்கள் மூலமாக கூட இவர்களுக்கு எளிதாக வாய்ப்பு கிடைத்து விடும் நிலை நிலவுகிறது. இது போன்ற வாய்ப்புகள் எங்களுக்கு கிடைக்கவில்லை. ஏராளமான திறமைகளுடன் இருந்தாலும், பலருக்கு வாய்ப்பு மறுக்கப்பட்டது.இதுபோன்று எளிதாக வாய்ப்பு கிடைத்து விடுவதால், அசாத்தியமான துணிச்சலுடன் காணப்படுகின்றனர். குறிப்பாக, அவர்கள் இல்லையென்றால் சீரியலே இல்லை என்ற ஒரு மனநிலையுடன் செயல்படுகின்றனர். பாராட்டுகள், புகழ் அனைத்தும் எப்போது ஒருவரை விட்டுச் செல்லும் என்று தெரியாது. எனவே, எந்த சூழலிலும் தன்னடக்கத்துடன் நடந்துகொள்ள வேண்டும். மேலும், இதற்கு முன்னர் கதையை நன்றாக புரிந்து கொண்டு, வசனங்களை மனப்பாடம் செய்து சீரியலில் நடித்தோம். அந்த வகையில், ஒரு நாளில் மட்டும் சுமார் 13 சீன்கள் வரை நடித்திருக்கிறோம். இப்போது, ப்ராம்ட் மூலம் வசனங்களை பேசுகிறார்கள். கதையை புரிந்து, வசனங்களை படித்து நடிப்பதற்கான பொறுமை, இப்போது பல சீரியல் நடிகர்களிடம் இல்லை. மக்களிடம் இருந்து கிடைக்கும் வரவேற்பு, கலைத்துறை மூலம் கிடைக்கும் புகழ் இவற்றுக்கு மரியாதை செலுத்துவது இல்லை. இப்படி பல விஷயங்கள் மாறிவிட்டன” என்று நடிகை தேவி பிரியா ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.