இலங்கை
ஏராளமான குழந்தைகளுக்கு விளையாட்டுகளைத் தவிர்ப்பதால் விற்றமின் குறைபாடுகள்; மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டு!

ஏராளமான குழந்தைகளுக்கு விளையாட்டுகளைத் தவிர்ப்பதால் விற்றமின் குறைபாடுகள்; மருத்துவ நிபுணர் சுட்டிக்காட்டு!
இன்றைய குழந்தைகள் மைதான அல்லது வெளிப்புற விளையாட்டுகளைத் தவிர்த்து வருகின்ற காரணத்தால் விற்றமின் டி குறைபாடு ஏற்படுகின்றது. இந்தக் குறைபாட்டுடன் தான் இன்று ஏராளமான பிள்ளைகள் வளர்கின்றனர் என்று சிறுவர் மருத்துவ நிபுணர் தீபால் பெரேரா தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
இன்றைய சூழலில் சிறுவர்கள் வெளியில் சென்று விளையாடுவதற்குப் பதிலாக, மேலதிக வகுப்புகள் மற்றும் வீடியோ கேம்கள் என்று தான் காலத்தைச் செலவிடுகின்றனர். இதனால், சூரிய ஒளிமூலம் கிடைக்கும் விற்றமின் டி அவர்களுக்குக் கிடைக்காமல் போகின்றது. இது சாதாரண விடயமல்ல. தீவிரமான உடல்நலப்பிரச்சினைகள் இதனால் ஏற்படுகின்றன. இந்தக் குறைபாட்டுடன் தான் இன்று ஏராளமான குழந்தைகள் வளர்கின்றனர்.
சுமார் 20 முதல் 30 ஆண்டுகளுக்கு முன்னர் விற்றமின் டி பிரச்சினை குழந்தைகளிடம் இருந்ததில்லை. ஆனால் இன்று மிகச்சாதாரணமாக இந்தக் குறைபாடுகள் குழந்தைகளுக்கு ஏற்படுவது வேதனையான விடயம். மத்திய கிழக்கு நாடுகளில் அதிக வெப்பத்தால் குழந்தைகள் மைதானங்களுக்குச் செல்வதில்லை, ஐரோப்பிய நாடுகளில் அதிக குளிர் நிலவும். இதனால், மத்திய கிழக்கு நாடுகளிலும், ஐரோப்பிய நாடுகளிலும் வாழும் குழந்தைகள் தான் இதுவரை காலமும் விற்றமின் டி குறைபாட்டுடன் காணப்பட்டனர். இலங்கை இயற்கையாகவே சூரிய ஒளியைப் பெறும் நாடாகக் காணப்படுகின்றது. அப்படியிருந்தும் விற்றமின் டி குறைபாடு ஏற்படுவதை ஏற்கமுடியாது – என்றார்.