பொழுதுபோக்கு
பாலியல் சர்ச்சை: விஜய் சேதுபதி சார்பில் சைபர் கிரைமில் புகார்

பாலியல் சர்ச்சை: விஜய் சேதுபதி சார்பில் சைபர் கிரைமில் புகார்
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வரும் விஜய் சேதுபதி, அடுத்தடுத்து பல படங்களை கைவசம் வைத்து பிஸியான நடிகராக வலம் வரும் நிலையில், அவர் மீது போதைப்பொருள் மற்றும் பாலியல் குற்றச்சாட்டு தொடர்பாக சமூகவலைதளத்தில் ரம்யா மோகன் என்ற சமூக வலைதள பயனர் ஒருவர் குற்றம் சட்டி இருந்தார். இந்நிலையில், அவர் மீது விஜய் சேதுபதி சார்பில் சைபர் கிரைமில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் தமிழ் சினிமாவில் மக்கள் செல்வன் என்று அழைக்கப்படும் விஜய் சேதுபதி, தென்மேற்கு பருவக்காற்று படத்தின் மூலம் நாயகனாக தமிழ் சினிமாவில் அறிமுகமானவர். அதன்பிறகு, “சூப்பர் டீலக்ஸ், 96, விக்ரம் வேதா, மகாராஜா உள்ளிட்ட பல வெற்றிப்படங்களை கொடுத்துள்ளார். அதேபோல் பேட்ட, மாஸ்டர், விக்ரம் மற்றும் இந்தியில் ஜவான் உள்ளிட்ட படங்களில் வில்லன் கேரக்டரிலும் அசத்தியுள்ளார். இந்நிலையில், தனது நடிப்பால், அனைவரையும் கவர்ந்த அவர் மீது பகீர் குற்றச்சாட்டுகள் எழுந்தது. அவ்வகையில், ரம்யா மோகன் என்ற சமூக வலைதள பயனர் ஒருவர், விஜய் சேதுபதி தனக்குத் தெரிந்த ஒரு பெண்ணின் வாழ்க்கையை அழித்துவிட்டதாகக் கூறி பரபரப்பை ஏற்படுத்தி இருந்தார். இந்தக் குற்றச்சாட்டுகள் அடங்கிய அவரது பதிவு பின்னர் நீக்கப்பட்டுவிட்டது. நீக்கப்பட்ட அந்தப் பதிவில், திரைத்துறையில் நிலவும் ஒரு நச்சுத்தன்மையுள்ள கலாச்சாரத்தை விஜய் சேதுபதி ஊக்குவிப்பதாகவும், போதைப்பொருட்கள், படுக்கைக்கு அழைக்கும் பழக்கம், பாலியல் சீண்டல்கள் உள்ளிட்ட குற்றசாட்டுகளை குறிப்பிட்டு இருந்தார். கோலிவுட்டின் போதைப்பொருள் மற்றும் படுக்கைக்கு அழைக்கும் கலாச்சாரம் ஒரு ஜோக் அல்ல. எனக்குத் தெரிந்த ஒரு பெண், இப்போது மீடியாவில் பிரபலமான முகம், அவள் ஒருபோதும் விரும்பாத ஒரு உலகத்திற்குள் இழுக்கப்பட்டாள். அவள் இப்போது ஒரு மறுவாழ்வு மையத்தில் இருக்கிறாள். போதைப்பொருள், தில்லுமுல்லு, மற்றும் கொடுக்கல் வாங்கல் சுரண்டல் ஆகியவை திரைத்துறை நியமங்களாக மாறுவேடமிட்டுள்ளன.விஜய் சேதுபதி கேரவன் செல்ல ரூ. 2 லட்சம், பாலியல் தேவைக்காக ரூ. 50 ஆயிரம் கொடுத்துள்ளார், சமூக வலைதளங்களில் புனிதர் போல் நடிக்கிறார். அவர் அவளை பல வருடங்களாகப் பயன்படுத்தியுள்ளார். இது ஒன்று மட்டும் அல்ல. இதுபோன்று பல உள்ளன. ஆனால் ஊடகங்கள் இந்த மனிதர்களை புனிதர்கள் போல் போற்றுகின்றன. போதைப்பொருள் – பாலியல் தொடர்பு நிஜம். இது ஒரு ஜோக் அல்ல என்றும் அவர் குறிப்பிட்டு இருந்தார். தனது மற்றொரு பதிவில், இச்சம்பவம் குறித்து பொதுமக்கள் மத்தியில் நிலவும் உணர்வின்மை குறித்து தனது ஏமாற்றத்தை வெளிப்படுத்திய ரம்யா மோகன் “சில உணர்வற்ற முட்டாள்கள் உண்மையை ஒப்புக்கொள்வதை விட, ஆதாரத்தைக் கேள்வி கேட்பதிலும், பாதிக்கப்பட்டவரைக் குறை கூறுவதிலும் கவனம் செலுத்துவது பைத்தியக்காரத்தனம். இந்த உண்மை, அவள் டைரி மற்றும் போன் உரையாடல்களைப் பார்த்தபோது குடும்பத்தை ஒரு புயல் போல தாக்கியது. இது வெறும் கதை மட்டுமல்ல. இது அவளுடைய வாழ்க்கை, அவளுடைய வலி என்று பதிவிட்டு இருந்தார். சமூக வலைதள பயனரான ரம்யா மோகனின் இந்தக் குற்றச்சாட்டுகள் தமிழ் சினிமா வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தின. இந்த நிலையில், சமூக வலைதளத்தில் தனக்கு எதிராக சுமத்திய பாலியல் துன்புறுத்தல் குற்றச்சாட்டுகள் குறித்து விஜய் சேதுபதி தனது மௌனத்தை கலைத்துள்ளார்.இது தொடர்பாக டெக்கான் குரோனிக்கிள் செய்தி நிறுவனத்துக்கு விஜய் சேதுபதி அளித்துள்ள பேட்டியில், “என்னை பற்றி தெரிந்தவர்கள் இந்த மோசமான குற்றச்சாட்டை கேட்டு சிரிப்பார்கள். இது போன்ற மோசமான புகார்கள் என்னை பாதிக்காது. என் குடும்பத்தாரும், நண்பர்களும் தான் தற்போது கவலை அடைந்துள்ளனர். விடுங்கப்பா என அவர்களிடம் சொல்லியிருக்கிறேன். கவனம் ஈர்க்கவே அந்த பெண் அப்படி செய்திருக்கிறார். சில நிமிட புகழுக்காக செய்து கிடைத்திருக்கிறது. அவர் அதை என்ஜாய் பண்ணட்டுமே.இந்த விவகாரம் தொடர்பாக சைபர் குற்றிப்பிரிவில் புகார் கொடுத்திருக்கிறோம். 7 ஆண்டுகள் அனைத்து விதமான மோசமான புகார்களையும் பார்த்துவிட்டேன். என்னை குறி வைத்தாலும் அது என்னை பாதிக்கவில்லை. இனியும் பாதிக்காது. நான் நடித்த படம் ஒன்று நன்றாக ஓடிக் கொண்டிருக்கிறது. என் பெயரை கெடுத்தால் என் படத்தை நாசம் செய்யலாம் என பொறாமையில் சிலர் செய்திருக்கலாம். தற்போது யார் வேண்டுமானாலும் யாரை பற்றி வேண்டுமானாலும் எதுவும் சொல்லலாம். அதற்கு சமூக வலைதளத்தில் ஒரு கணக்கு வைத்திருக்க வேண்டும். எதிர்வினைகளை பற்றி பயப்படாமல் தைரியமாக எழுதலாம்” என்று அவர் கூறியுள்ளார்.