பொழுதுபோக்கு
15 நாள் அரை மொட்டை; குழந்தைக்கு யாரும் கண்ணாடி காட்டாதீங்க: தலைவன் தலைவி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!

15 நாள் அரை மொட்டை; குழந்தைக்கு யாரும் கண்ணாடி காட்டாதீங்க: தலைவன் தலைவி படப்பிடிப்பில் நடந்த சுவாரஸ்யம்!
தலைவன் தலைவி படம் குறித்த ஒரு சுவாரசியமான தகவலை அப்படத்தின் இயக்குநர் பாண்டிராஜ், ஆவுடையப்பன் டாக்ஸ் யூடியூப் பக்கத்தில், அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில் தனது படப்பிடிப்பு அனுபவங்கள் குறித்தும், அதில் நடந்த சுவாரசியமான சம்பவங்கள் குறித்தும் அவர் மனம் திறந்து பேசியுள்ளார். குறிப்பாக, அவர் இயக்கிய ‘தலைவன் தலைவி’ படத்தில் குழந்தை நடிகைக்கு ஒருபக்கம் மட்டும் மொட்டையடித்த காட்சி குறித்தும் பகிர்ந்துள்ளார். பாண்டிராஜின் இயக்கத்தில், விஜய் சேதுபதி மற்றும் நித்யா மேனனின் நடிப்பில் ஜூலை 25ஆம் தேதி வெளியானது. ‘தலைவன் தலைவி’ திரைப்படம், கணவன் – மனைவி உறவில் ஏற்படும் சிக்கல்களையும், அதற்கு குடும்ப உறுப்பினர்களின் தலையீடு எவ்வாறு காரணமாகிறது என்பதையும் மையமாகக் கொண்ட ஒரு காதல் மற்றும் குடும்பத் திரைப்படம் ஆகும். இந்நிலையில் இந்த படத்தில் குழந்தைக்கு மொட்டை போட்ட காட்சி ஒன்றை பற்றி இயக்குனர் பாண்டிராஜ் விவரித்து கூறியுள்ளார்.குழந்தையின் பாதி தலையை மொட்டையடித்தபோது, அந்தக் குழந்தையின் அப்பா முழு சம்மதம் அளித்தார். ஆனால், ஒரு குழந்தையின் தலையை ஒருபக்கம் மட்டும் மொட்டையடிப்பது என்பது சாதாரண காரியம் அல்ல; அதற்கு பெரிய மனது வேண்டும்” என்று கூறினார். இந்த ஒரு காட்சி படமாக்கப்பட வேண்டும் என்பதற்காக, அந்தக் குழந்தையின் பாதி தலை மட்டும் மொட்டை அடிக்கப்பட்டது. சவாலான அந்தக் காட்சியைப் படமாக்குவதற்காக, அந்தச் சிறுமி 15 நாட்கள் அதே அரை மொட்டை கெட்டப்பில் தான் இருக்க வேண்டியிருந்தது. படப்பிடிப்பு இல்லாத நாட்களில் அந்த மொட்டைப் பகுதியை மறைக்க மிகவும் சிரமப்பட்டதாகவும் பாண்டிராஜ் குறிப்பிட்டார். மேலும், அந்தச் சிறுமியின் தலையில் முடி அடர்த்தியாக இருந்ததால், அந்த அரை மொட்டையை மறைக்க முடிந்தது என்றும், தேவைப்பட்ட சமயங்களில் ஒரு விக்-கையும் பயன்படுத்தியதாக அவர் தெரிவித்தார். இந்தப் படப்பிடிப்பின்போது நடந்த மிக முக்கியமான மற்றும் நெகிழ்ச்சியான சம்பவம் என்னவென்றால், அந்தச் சிறுமியை கண்ணாடியைப் பார்க்க அனுமதிக்கவே இல்லை என்பதுதான். அதற்கான காரணத்தை விளக்கிய பாண்டிராஜ், “மொட்டையடித்த தோற்றத்தில் அவளை அவள் பார்த்துவிட்டால், அது அவளது மனநிலையைப் பாதிக்கலாம்” என்று தான் கருதியதாகவும், அதனால் படப்பிடிப்பு முடியும்வரை கண்ணாடியைக் காட்டாமல் பார்த்துக்கொண்டதாகவும் கூறினார்.