பொழுதுபோக்கு
இந்த ரெண்டு பாட்டு என் காலர் டியூன்; முத்துகுமார் உதவியை மறுத்த கவிஞர்: பாக்யராஜ் உருக்கமான தகவல்!

இந்த ரெண்டு பாட்டு என் காலர் டியூன்; முத்துகுமார் உதவியை மறுத்த கவிஞர்: பாக்யராஜ் உருக்கமான தகவல்!
தமிழ் சினிமாவில் அழகிய தமிழில் பாடல்கள் எழுதி அனைவரையும் கவர்ந்த முக்கிய பாடல் ஆசிரியர்களில் ஒருவர் தான் முத்துகுமார். இவர், தான் வளராத காலக்கட்டத்திலும், ஒரு கவிஞர் மருத்துவ செலவுக்காக போராடுகிறார் என்று தெரிந்து அவருக்கு உதவி செய்ததாக நடிகர் பாக்யராஜ் கூறியுள்ளார்.1999-ம் ஆண்டு வெளியான மலபார் போலீஸ் என்ற படத்தின் மூலம் பாடல் ஆசிரியராக திரைத்துறையில் அறிமுகமானவர் தான் நா.முத்துகுமார். காஞ்சிபுரத்தை சேர்ந்த இவர், அடுத்து மின்சார கண்ணா, உன்னருகே நானிருந்தால், இரணியன், ஹலோ உள்ளிட்ட படங்களில் ஒரு ஒரு பாடல் மட்டும் எழுதி வந்தார். ஆனாலும் தொடர்ந்து பாடல்கள் எழுதி அசத்தி வந்த இவர், விஜய், விஜயகாந்த், சத்யராஜ், மாதவன் உள்ளிட்ட முன்னணி நடிகர்களுக்கு பாடல்கள் எழுதியுள்ளார்.அதேபோல், பல முன்னணி இசையமைப்பாளர்களின் இசையில் பாடல்கள் எழுதியுள்ள நா.முத்துகுமார் யுவன் சங்கர் ராஜாவின் இசையில் எழுதிய பாடல்கள் அணைத்தும், காலத்தால் அழியான புகழை பெற்று நிலைத்திருக்கிறது. ராம் இயக்கத்தில் வெளியான தங்க மீன்கள் திரைப்படத்தில் வெளியான ஆனந்த யாழை என்ற பாடல் பலரின் ஃபேவரெட் பாடலாக ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இந்த படத்திற்காக அவருக்கு தேசிய விருது வழங்கப்பட்டது.அதேபோல் சைவம் படத்திற்காகவும் பாடல் எழுதியதற்காக தேசிய விருது வாங்கிய முத்துகுமார் 4 முறை தமிழக அரசின் விருதையும், 4 முறை பிலிம்பேர் சௌத் விருதையும் வென்றுள்ளார். சில புத்தகங்கள், சில படங்களுக்கு வசனம் கூட எழுதியுள்ள நா.முத்துகுமார், கடந்த 2016-ம் ஆண்டு உடல்நலக்குறைவால் மரணமடைந்தார். சமீபத்தில் அவரது நினைவை போற்றும் வகையில், சினிமா நட்சத்திரங்கள் சார்பில் நிகழ்ச்சி ஒன்று நடத்தப்பட்டது. இதில் பல நடிகர் நடிகைகள் கலந்துகொண்டனர்.நிகழ்ச்சியில் பேசிய நடிகரும் இயக்குனருமான பாக்யராஜ், ஒரு மூத்த கவிஞர் உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட்டிருந்தபோது, அதை தெரிந்துகொண்ட நா.முத்துகுமார் ரூ25000 செக் எழுதி அவருக்கு அனுப்பி வைத்தார். இவர் என்ன சினிமாவில் அவ்வளவு சம்பாதித்துவிட்டாரா என்று அந்த மூத்த கவிஞர் நினைத்தார். இவர் பணம் அனுப்பிய நேரம் அவருக்கு வேறொரு இடத்தில் இருந்து ரூ1 லட்சம் வந்ததால், இந்த 25000 பணத்தை திருப்பி அனுப்பியுள்ளார். ஆனால் இதனை வாங்க மறுத்த முத்துகுமார் உங்கள் மீதுள்ள மரியாதையின் காரணமாக உங்கள் மருத்துவ செலவுக்கு இந்த பணம் உதவட்டும் என்று கூறியுள்ளார்.இந்த தகவலை கவிஞர் முத்துலிங்கம் எனக்கு சொன்னார். நா.முத்துகுமார் எனக்கு பாடல் எழுதவில்லை என்றாலும் என் பொண்ணு பையனுக்கு பாடல்கள் எழுதியுள்ளார். இவர் எழுதிய பல பாடல்களை நான் காலர் டியூனாக வைத்திருந்தேன். என் மகன் சாந்தனுவுக்காக போட்ட பூவே பூவே பாடலை கிட்டத்தட்ட 6 மாதங்கள் நான் காலர் டியூனாக வைத்திருந்தேன். அதேபோல் எனது மகளுக்காக எழுதிய உன்னை கண்டேனே முதல்முறை என்ற பாடலையும் 6 மாதங்கள் காலர் டியூனாக வைத்திருந்தேன் என்று பாக்யராஜ் கூறியுள்ளார்.