பொழுதுபோக்கு
சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு; 3 முறை தள்ளிப்போன ஷூட்டிங்: ஷாருக்கான் முத்தம் குறித்து மனம் திறந்த கிங்காங்!

சூப்பர் ஸ்டார் பட வாய்ப்பு; 3 முறை தள்ளிப்போன ஷூட்டிங்: ஷாருக்கான் முத்தம் குறித்து மனம் திறந்த கிங்காங்!
நடிகர் கிங்காங் சினி உலகம் யூடியூப் பக்கத்திற்கு அளித்த ஒரு பேட்டியில் தன் வீட்டை சுற்றிக்காட்டிக்கொண்டே தனது திரை அனுபவங்கள் குறித்துப் பல சுவாரஸ்யமான தகவல்களைப் பகிர்ந்துள்ளார். குறிப்பாக, சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் மற்றும் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் ஆகியோருடன் தான் பழகிய தருணங்களைப் பற்றி அவர் பேசியிருக்கிறார்.கிங்காங், தமிழ் சினிமாவில் பல திரைப்படங்களில் நகைச்சுவை மற்றும் துணை கதாபாத்திரங்களில் நடித்துள்ளார். வடிவேலு உடன் இணைந்து பல காமெடி சீன்களில் நடித்துள்ளார். அப்படியாக அவர் தனது சினி வாழ்க்கையை பற்றிய நிறைய தகவல்களை பகிர்ந்துள்ளார். அதில் ரஜினிகாந்துடன் தனது முதல் சந்திப்பு ‘கொடி பறக்குது’ படத்தின்போது நிகழ்ந்தது. ரஜினியைச் சந்திப்பது தனது வாழ்நாள் கனவாக இருந்ததாகக் குறிப்பிட்ட கிங்காங், அவருடன் எடுத்துக்கொண்ட ஒரு புகைப்படத்தையும் காட்டினார்.அதேபோல ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ திரைப்படத்தில் ஷாருக்கான் மற்றும் தீபிகா படுகோன் ஆகியோருடன் நடித்த அனுபவம் குறித்தும் கூறியுள்ளார். இந்த வாய்ப்பு அவருக்கு அவ்வளவு எளிதாகக் கிடைக்கவில்லையாம். இந்தப் படத்துக்கான ஆடிஷன் சென்னையில் நடைபெற்றது. கிங்காங் போன்ற உருவ அமைப்பு கொண்ட சுமார் 30-க்கும் மேற்பட்டோர் அந்த ஆடிஷனில் கலந்துகொண்ட நிலையில் அவர்களுக்கு ஒரு தனிப்பட்ட மோனோலாக்கைச் சொல்லும்படியும், பழங்குடியினர் போன்ற அசைவுகளை செய்ய வேண்டும் என்றும் ஆடிசனில் கேட்கப்பட்டதாம். ஆடிஷனில் தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கு இரண்டு வாரங்களில் தகவல் தெரிவிக்கப்படும் எனச் சொல்லப்பட்டாலும், மூன்று மாதங்களுக்குப் பிறகுதான் படப்பிடிப்பு உறுதியானதாகவும் கேரளாவில் நடக்கவிருந்த படப்பிடிப்பு மழை காரணமாக இரண்டு, மூன்று முறை தள்ளிவைக்கப்பட்டதாகவும் கூறினார். இதனால் ஒருக்கட்டத்தில் தனக்கு அந்த பட வாய்ப்பு இல்லை என்றும் அவர் நினைத்தாராம்.திடீரென போன் வந்து நீங்கள் ஆடிசனில் செலக்ட் ஆகிவிட்டீர்கள், படப்பிடிப்புக்கு வரவேண்டும் என்றதும் மிகவும் மகிழ்ச்சியடைந்து படப்பிடிப்புக்குச் சென்றபோது, கொச்சி விமான நிலையத்தில் நடிகர் கமல்ஹாசனைச் சந்தித்ததாகவும், அவரிடம் ஷாருக்கானை தான் சந்திப்பதாகக் கூறியபோது, “அவரைப் பார்த்ததாகச் சொல்லுங்க” என்று கமல்ஹாசன் சொன்னதாகவும் கிங்காங் பகிர்ந்தார்.அதுமட்டுமின்றி படப்பிடிப்பின்போது ஷாருக்கான் இவரின் குடும்பம், பிள்ளைகளின் படிப்பு பற்றி அன்புடன் விசாரித்ததாகவும் கூறினார். ஒரு சண்டைக் காட்சியின் படப்பிடிப்பு முடிந்ததும், கிங்காங்கின் நடிப்பைப் பாராட்டி ஷாருக்கான் அவருக்கு ஒரு முத்தம் கொடுத்ததாகவும் பின்னர், ஒருமுறை கிங்காங், ஷாருக்கானிடம் தான் அவருக்கு ஒரு முத்தம் கொடுக்க விரும்புவதாகக் கேட்க, ஷாருக்கான் உடனே பணிவுடன் குனிந்து அமர்ந்து, கிங்காங் தன்னை அணைத்து கன்னத்தில் முத்தமிட அனுமதித்ததாகவும் கூறினார். மேலும் அந்த புகைப்படத்தையும் காண்பித்து ஷாருக்கானின் இந்த எளிமையான குணத்தால் தான் மிகவும் மகிழ்ச்சியடைந்ததாகவும் கிங்காங் நெகிழ்ச்சியுடன் தெரிவித்தார்.