விளையாட்டு
சென்னையில் மீண்டும் புரோ கபடி: முதல் போட்டியில் மோதும் தமிழ் தலைவாஸ்

சென்னையில் மீண்டும் புரோ கபடி: முதல் போட்டியில் மோதும் தமிழ் தலைவாஸ்
11 சீசன்களை கடந்துள்ள புரோ கபடி லீக் தொடர் இந்த ஆண்டுடன் 12-வது சீசனில் அடியெடுத்து வைக்கிறது. அவ்வகையில், ஹரியானா ஸ்டீலர்ஸ், தபாங் டெல்லி, உ.பி.யோத்யாஸ், பாட்னா பைரட்ஸ், யு மும்பா, ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ், தெலுங்கு டைட்டன்ஸ், புனேரி பால்டன், தமிழ் தலைவாஸ், பெங்கால் வாரியர்ஸ், குஜராத் ஜெயன்ட்ஸ், பெங்களூரு புல்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும் இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது. முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு இந்த போட்டி விசாசப்பட்டினத்தில் நடக்கிறது. இதைத்தொடர்ந்து 2-வது கட்ட ஆட்டங்கள் ஜெய்ப்பூரில் உள்ள சவாய் மான்சிங் உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 12 ஆம் தேதி முதல் 27 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 3-வது கட்ட ஆட்டங்கள் சென்னையில் உள்ள நேரு உள்விளையாட்டு அரங்கில் செப்டம்பர் 29 ஆம் தேதி முதல் அக்டோபர் 12 ஆம் தேதி வரையும், 4-வது மற்றும் கடைசி சுற்று லீக் ஆட்டங்கள் டெல்லியில் உள்ள தியாகராஜ் உள்விளையாட்டு அரங்கில் அக்டோபர் 13 ஆம் தேதி முதல் 23 ஆம் தேதி வரையும் நடக்கிறது. பிளே-ஆஃப் சுற்று போட்டி விவரம் பின்னர் வெளியிடப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.29 ஆம் தேதி வெள்ளிக்கிழமை அன்று விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி இண்டோர் மைதானத்தில் நடைபெறும் பரபரப்பான தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. ஆகஸ்ட் 30 சனிக்கிழமை அன்று, உள்ளூர் அணியான தெலுங்கு டைட்டன்ஸ் மீண்டும் அடுத்த ஆட்டத்தில் களமாடுகிறது. அந்த அணி தனது 2-வது போட்டியில் உ.பி யோதாஸை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டிக்கு முன்பாக நடக்கும் ஆட்டத்தில் யு மும்பா அணி குஜராத் ஜெயண்ட்ஸை எதிர்கொள்கிறது.இதற்கிடையில், சூப்பர் சண்டே ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ் அணி யு மும்பாவுடன் மோதவுள்ளது. அன்று நடக்கும் மற்றொரு போட்டியில் நடப்பு சாம்பியனான ஹரியானா ஸ்டீலர்ஸ் பெங்கால் வாரியர்ஸுக்கு எதிராக களமாடுகிறது. இம்முறை 12 அணிகளுமே கிட்டத்தட்ட சம பலம் கொண்ட அணிகளாக உள்ளன. இதில் எந்த அணி அதிக புள்ளிகளை பெற்று ஆதிக்கம் செலுத்தும் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியமாக இருக்கும். அதேநேரத்தில், புரோ கபடி லீக் தற்போது மறுபடியும் சென்னைக்கு திருப்புவதால் ரசிகர்கள் பெரும் உற்சாகமடைந்துள்ளனர். சென்னையைத் தலைமையகமாக கொண்ட தமிழ் தலைவாஸ் கடந்த சீசனில் அணி 9-வது இடத்துக்கு தள்ளப்பட்டது. இம்முறை சிறப்பாக ஆடும் என்கிற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.