பொழுதுபோக்கு
தாய்மொழியில் மட்டுமே முழு திறமையும் வெளிப்படும்; சிக்கந்தர் தோல்வி குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!

தாய்மொழியில் மட்டுமே முழு திறமையும் வெளிப்படும்; சிக்கந்தர் தோல்வி குறித்து மௌனம் கலைத்த ஏ.ஆர்.முருகதாஸ்!
தீனா திரைப்படத்தின் மூலம் இயக்குநரகாக அறிமுகமானவர் ஏ.ஆர்.முருகதாஸ். ரமணா, கஜினி, துப்பாக்கி, 7ஆம் அறிவு, கத்தி மற்றும் சர்கார் போன்ற வெற்றிப் படங்களைக் கொடுத்த ஏ.ஆர். முருகதாஸ், இந்தியில் கஜினி படத்தை இயக்கி வெற்றியடைந்தார். அதன் பிறகு, ஹாலிடே என்ற இந்திப் படமும் அவருக்கு வெற்றியைத் தேடித் தர, ‘அகிரா’ கலவையான விமர்சனங்களைப் பெற்றது. தெலுங்கில் மகேஷ் பாபு நடித்த ஸ்பைடர் திரைப்படம் எதிர்பார்த்த வெற்றியைப் பெறவில்லை. இந்த வரிசையில் ‘சிக்கந்தர்’ படத்தின் தோல்வி, ஏ.ஆர். முருகதாஸின் பாணிக்கு முரணானது என்று ரசிகர்கள் கருதினர்.ரஜினிகாந்துடன் ‘தர்பார்’ திரைப்படத்துக்குப் பிறகு, சல்மான் கான் நடிப்பில் ‘சிக்கந்தர்’ என்ற இந்திப் படத்தை இயக்கினார் ஏ.ஆர். முருகதாஸ். பான்-இந்தியப் படமாக வெளியான இந்தப் படம், ரசிகர்களிடமிருந்தும் விமர்சகர்களிடமிருந்தும் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. இந்தப் படம் குறித்த தோல்வி பற்றி ஏ.ஆர். முருகதாஸ் இப்போதுதான் முதன்முறையாக நேரடியாகப் பேசியிருக்கிறார். குறிப்பாக, தாய்மொழியில் ஒரு படம் எடுப்பதன் மூலம் கிடைக்கும் திருப்தியும், பார்வையாளர்களுடன் ஏற்படும் தொடர்பும் மற்ற மொழிகளில் கிடைப்பதில்லை என்று அவர் கருத்து தெரிவித்துள்ளார்.இந்நிலையில் அவர் சினிமா விகடனுக்கு அளித்த பேட்டியில் இது குறித்து விளக்கம் அளித்துள்ளார். அப்போது, ‘ஒருவர் தனது தாய்மொழியில் படம் எடுக்கும்போதுதான் அந்தச் சமூகத்தின் நடத்தை, கலாசாரம் மற்றும் பார்வையாளர்களின் விருப்பங்களைப் புரிந்துகொள்ள முடியும். அதற்கேற்ப, படத்திலும் சில விஷயங்களைச் சேர்க்க முடியும். அது ரசிகர்களுடன் வலுவான தொடர்பை ஏற்படுத்தும். ஆனால், இது மற்ற மொழிகளில் படம் செய்யும்போது சாத்தியமில்லை என்றார்.இந்தியில் படம் இயக்கும்போது மொழி மற்றும் கலாசாரத்தைப் புரிந்துகொள்வதில் சிரமம் இருப்பதாக ஏ.ஆர். முருகதாஸ் மேலும் கூறினார். ”நாம் எழுதும் வசனங்கள் பல நிலைகளில் மொழிபெயர்க்கப்படுகின்றன. அப்போது, அசல் யோசனை என்ன என்ற கேள்வி எழுகிறது. ஒரு இயக்குநராக, உங்களுக்கு மொழி நன்றாகப் புரிந்தால் மட்டுமே, உணர்வுகளைப் படத்தில் முழுமையாக வெளிப்படுத்த முடியும். அதனால்தான் தாய்மொழிப் படங்களில் மட்டுமே எனது முழுத் திறனும் வெளிப்படும்,” என்று உறுதியாகத் தெரிவித்தார்.