பொழுதுபோக்கு
அரைமணி நேரத்தில் எழுதி, 9 விருதுகள் வாங்கிய பாட்டு; தேசிய விருதுக்கு போகும்னு நினைக்கல: நா.முத்துகுமார் த்ரோபேக்!

அரைமணி நேரத்தில் எழுதி, 9 விருதுகள் வாங்கிய பாட்டு; தேசிய விருதுக்கு போகும்னு நினைக்கல: நா.முத்துகுமார் த்ரோபேக்!
கவிஞர் நா.முத்துக்குமார் தமிழ் திரையுலகில் ஒரு அழியாத முத்திரையைப் பதித்தவர். இவர் ஒரு பாடலாசிரியர், கவிஞர், மற்றும் எழுத்தாளர். தனது 41-வது வயதில் மரணமடைந்தாலும் அவரது பாடல்கள் இன்னும் அழியாமலும் மக்களின் ப்லேலிஸ்டில் உள்ளது. இந்நிலையில் நா.முத்துக்குமார் தனது கலைப் பயணத்தின் மறக்க முடியாத தருணங்களை ஜெயா டிவியில் கூறியிருப்பது பற்றி பார்ப்போம்.2014-ஆம் ஆண்டு அவரது வாழ்வில் மிக முக்கியமானதாகவும், மகிழ்ச்சியானதாகவும் அமைந்திருந்ததாகவும் அந்த ஆண்டில் மட்டும் அவர் 35 திரைப்படங்களுக்கு 107 பாடல்களை எழுதியது ஒரு மிகப்பெரிய சாதனையாகக் கருதினார். இந்தச் சாதனைகளில், குறிப்பாக தங்க மீன்கள் திரைப்படத்தில் இடம்பெற்ற “ஆனந்த யாழை” பாடல் அவருக்கு ஒரு பெரிய அங்கீகாரத்தைப் பெற்றுத் தந்தது. இந்தப் பாடலுக்காக அவருக்கு தேசிய விருது கிடைத்ததுடன், நார்வே தமிழர்கள் நடத்திய உலகத் திரைப்பட விழா, சைமா விருது, பிலிம் ஃபேர் விருது உட்பட மொத்தம் 9 விருதுகள் கிடைத்ததாக அவர் பெருமையுடன் தெரிவித்தார்.அவர் “ஆனந்த யாழை” பாடலை வெறும் அரை மணி நேரத்தில் எழுதியதாகவும் இது தேசிய விருதுக்குச் செல்லும் பாடல் என்று அவர் அப்போது நினைக்கவில்லை என்றும் கூறினார். ஒரு மகளுக்கும் தந்தைக்கும் இடையிலான ஆழமான பாசத்தை வெளிப்படுத்திய இந்தப் பாடல், பலரின் மனதை நெகிழச் செய்ததாகவும் நா.முத்துக்குமார் கூறினார். மேலும், தனது மகன் பிறந்த பிறகு பூக்கள் பூக்கும் தருணம் என்ற பாடலில், ஆறுயிரே என்ற வார்த்தைக்குப் பதிலாக, ஆதவனே என்ற வார்த்தையைப் பயன்படுத்திய சுவாரசியமான தகவலையும் அவர் பகிர்ந்துகொண்டார். கவிஞராக மட்டுமல்லாமல், எதிர்காலத்தில் ஓமர் கயாம், கலீல் ஜிப்ரான் போன்று தத்துவங்கள் நிறைந்த புத்தகங்களையும் எழுத விரும்புவதாகவும் தனது ஆசையை வெளிப்படுத்தினார். ‘காற்றோடு குழுங்கிக் கிடக்கும் பூக்கள்’ என்ற தனது முதல் பாடலுக்குப் பிறகு, தனது கலை வாழ்க்கையில் 1500-க்கும் மேற்பட்ட பாடல்களை எழுதினார். நா.முத்துக்குமாரின் பாடல்கள் வார்த்தைகளினால் உருவான கவிதைகள் மட்டுமல்ல, அவை உணர்வுகளின் ஆழமான வெளிப்பாடுகளாகவும் அமைந்தன. அவரது எளிமையான மற்றும் அழகான தமிழ் வரிகள், இன்றும் பலரின் இதயங்களில் வாழ்ந்துகொண்டுதான் இருக்கின்றன.