இந்தியா
இ.டி. பணமோசடி தடுப்புச் சட்டம்: 2015 முதல் 5,892 வழக்குகளில் 15 பேர் மட்டுமே தண்டனை!

இ.டி. பணமோசடி தடுப்புச் சட்டம்: 2015 முதல் 5,892 வழக்குகளில் 15 பேர் மட்டுமே தண்டனை!
பணமோசடி தடுப்புச் சட்டம் (PMLA) கீழ், 2015-ம் ஆண்டு முதல் அமலாக்கத்துறை (ED) 5 ஆயிரத்து 892 வழக்குகளை விசாரித்து, அவற்றில் 15 பேருக்கு மட்டுமே தண்டனை பெற்றுத் தந்துள்ளதாக மத்திய நிதி அமைச்சகம் மாநிலங்களவையில் தெரிவித்துள்ளது. மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சௌத்ரி, இதுதொடர்பாக எழுத்துபூர்வமாக அளித்த பதிலில், “இந்த வழக்குகளில், 353 துணை குற்றப்பத்திரிக்கைகள் (Supplementary PCs) உட்பட மொத்தம் ஆயிரத்து 398 குற்றப்பத்திரிக்கைகள் (Prosecution Complaints – PCs) PMLA சிறப்பு நீதிமன்றங்களில் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இவற்றில், ஜூன் 30-ம் தேதி வரை, 66 துணை குற்றப்பத்திரிக்கைகள் உட்பட 300 குற்றப்பத்திரிக்கைகளில் சிறப்பு நீதிமன்றங்கள் குற்றச்சாட்டுகளைப் பதிவு செய்துள்ளன. மேலும், 8 உத்தரவுகளில் 15 நபர்களுக்கு PMLA சிறப்பு நீதிமன்றங்கள் தண்டனை விதித்துள்ளன” என்று குறிப்பிட்டார்.மொத்த வழக்குகளில் 49 வழக்குகளில் அமலாக்கத்துறை PMLA சிறப்பு நீதிமன்றத்தில் வழக்குகளை முடித்து வைப்பதற்கான அறிக்கைகளைத் தாக்கல் செய்துள்ளதாகவும் அமைச்சர் தெரிவித்தார். அமலாக்கத்துறை இயக்குனர் ராகுல் நவின் தனது 2024-25 ஆண்டு அறிக்கையில், “PMLA சட்டத்தை அமல்படுத்திய ஆரம்ப ஆண்டுகளில், பெரும்பாலான வழக்குகள் போதைப்பொருள் தொடர்பான குற்றங்களாகவே இருந்தன. மார்ச் 2014 வரை, ஆயிரத்து 883 அமலாக்க வழக்குத் தகவல் அறிக்கைகள் (Enforcement Case Information Reports) மட்டுமே பதிவு செய்யப்பட்டிருந்தன. இது ஆண்டுக்கு சராசரியாக 200-க்கும் குறைவான வழக்குகளாகும். மேலும், 84 குற்றப்பத்திரிக்கைகள் மட்டுமே தாக்கல் செய்யப்பட்டிருந்தன. அப்போது பறிமுதல் செய்யப்பட்ட சொத்துக்களின் மதிப்பு வெறும் 5 ஆயிரத்து 171.32 கோடி ரூபாயாக இருந்தது” என்று கூறியுள்ளார்.”ஏப்.2014 முதல் மார்ச் 2024 வரையிலான காலகட்டத்தில், அமலாக்க நடவடிக்கைகளில் குறிப்பிடத்தக்க அளவில் வளர்ச்சி ஏற்பட்டுள்ளது. இந்த 10 ஆண்டுகளில் 5 ஆயிரத்து 113 PMLA விசாரணைகள் தொடங்கப்பட்டன. இது ஆண்டுக்கு சராசரியாக 511 ECIR களாகும். மேலும், ஆயிரத்து 332 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. இதன் தொடர்ச்சியாக, 2024-25 நிதியாண்டில், 775 புதிய PMLA விசாரணைகள் தொடங்கப்பட்டு, 333 குற்றப்பத்திரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன. குறிப்பிடத்தக்க வகையில், இந்த நிதியாண்டில் 34 நபர்களுக்கு தண்டனை வழங்கப்பட்டு உள்ளது” என்றும் அவர் அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.