இலங்கை
கல்கிஸ்ஸை கொலை சம்பவம் ; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்

கல்கிஸ்ஸை கொலை சம்பவம் ; சந்தேகநபர்கள் தப்பியோட்டம்
கல்கிஸ்ஸை பொலிஸ் பிரிவின் அரலிய வீட்டுவசதிப் பகுதியில் இரு குழுக்களுக்கிடையில் ஏற்பட்ட மோதலில் ஒருவர் உயிரிழந்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர்கள் பிரதேசத்தை விட்டு தப்பிச் சென்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கொலையுடன் தொடர்புடைய ஐந்து சந்தேக நபர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளதுடன், அவர்களில் இரண்டு பெண்களும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
தப்பிச் சென்ற சந்தேக நபர்களை கைது செய்வதற்காக கல்கிஸ்ஸை பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
நேற்று (01) மாலை இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளதுடன், கூரிய ஆயுதங்களால் தாக்கப்பட்டதில் குறித்த இருவரும் பலத்த காயங்களுடன் லுனாவ வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
காயமடைந்தவர்களில் ஒருவர் லுனாவ வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் உயிரிழந்துள்ளதாகவும், காயமடைந்த மற்றொரு நபர் மேலதிக சிகிச்சைக்காக களுபோவில வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளதாகவும் கல்கிஸ்ஸை பொலிஸார் தெரிவித்தனர்.
தாக்குதலில் உள்ளானவர்கள் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த இரண்டு சகோதரர்கள் என்றும், 28 வயதான மூத்த சகோதரரே இதன்போது உயிரிழந்ததாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த தாக்குதலில் காயமடைந்த 15 வயது பாடசாலை மாணவன் தற்போது வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
பாடசாலையில் ஒரே வகுப்பில் படிக்கும் இரண்டு நண்பர்களுக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் குறித்து விசாரிக்க, பாடசாலை மாணவன் தனது மூத்த சகோதரனுடன் சம்பந்தப்பட்ட வீட்டிற்குச் சென்றபோது ஏற்பட்ட மோதலின் விளைவாக இந்தக் கொலை நடந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.