இந்தியா
சத்தீஷ்காரில் கட்டாய மத மாற்றம்; கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்: யார் இவர்கள்? பின்னணி என்ன?

சத்தீஷ்காரில் கட்டாய மத மாற்றம்; கைதான கேரள கன்னியாஸ்திரிகளுக்கு ஜாமீன்: யார் இவர்கள்? பின்னணி என்ன?
சத்தீஷ்கார் மாநிலம் நாராயண்பூர் பகுதியை சேர்ந்த 3 பெண்களை கடத்தி, அவர்களை கட்டாய மதமாற்றம் செய்ய முயற்சி நடப்பதாக பஜ்ரங் தல் அமைப்பை சேர்ந்த நிர்வாகி புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில், கடந்த ஜூலை 25 ஆம் தேதி துர்க் ரயில் நிலையத்தில் கேரளாவை சேர்ந்த பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய 2 கத்தோலிக்க கன்னியாஸ்திரிகள் மற்றும் சத்தீஷ்கார் மாநிலத்தை சேர்ந்த சுக்மான் மாண்டவி ஆகிய 3 பேரை போலீசார் கைது செய்தனர்.கேரள கன்னியாஸ்திரிகளின் கைதுக்கு நாடும் முழுதும் கடும் எதிர்ப்பு கிளம்பியது. கேரளாவில் உள்ள கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு கடும் கண்டனம் தெரிவித்தது. இந்த விவகாரத்தில் பிரதமர் மோடி தலையிடக்கோரி கேரள முதல்வர் பினராயி விஜயன் அவசர கடிதம் அனுப்பினார். மேலும் நாடாளுமன்ற எதிர்க் கட்சித் தலைவர் ராகுல்காந்தி, தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் போன்ற தலைவர்களும் கடும் கண்டனத்தை பதிவு செய்தனர். வேலைக்கு அழைத்து வருவதற்காகவே அந்த 3 இளம் பெண்களை கன்னியாஸ்திரிகள் ரயிலில் அழைத்து வந்ததாக கிறிஸ்தவ கூட்டமைப்பு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது. இந்த செய்தியை ஆங்கிலத்தில் படிக்கவும்இந்நிலையில், கேரளாவைச் சேர்ந்த இரண்டு கன்னியாஸ்திரிகளுக்கு பிலாஸ்பூரில் உள்ள சிறப்பு என்.ஐ.ஏ. நீதிமன்றம் இன்று சனிக்கிழமை ஜாமீன் வழங்கியது. இதற்கு கேரள மாநிலத்தில் உள்ள ஆளுங்கட்சி, எதிர்க்கட்சிகள் மற்றும் கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பினர் வரவேற்பு தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், சத்தீஷ்காரில் கட்டாய மத மாற்றம் விவகாரத்தில் கைது செய்யப்பட்டு தற்போது ஜாமீனில் விடுக்கப்பட்டுள்ள கன்னியாஸ்திரிகள் யார்? அவர்களின் பின்னணி என்ன? என்பது குறித்து இங்குப் பார்க்கலாம். கன்னியாஸ்திரிகளின் பின்னணி கன்னியாஸ்திரிகளான பிரீத்தி மேரி, வந்தனா பிரான்சிஸ் ஆகிய இரண்டு பேரும் கேரளாவின் ஆலப்புழா மாவட்டத்தில் உள்ள சேர்த்தலாவை தலைமையிடமாகக் கொண்ட அசிசி சகோதரிகள் மேரி இம்மாகுலேட் (ஏ.எஸ்.எம்.ஐ) சபையைச் சேர்ந்தவர்கள். இதில் கன்னியாஸ்திரி பிரீத்தி மேரி எர்ணாகுளம் மாவட்டத்தில் உள்ள எலவூரைச் சேர்ந்தவர். கன்னியாஸ்திரி வந்தனா பிரான்சிஸ் கண்ணூர் மாவட்டம் உதயகிரி கிராமத்தைச் சேர்ந்தவர். கன்னியாஸ்திரி பிரீத்தி மேரி சிறுமியாக இருந்தபோது, தனது கிராமம் அமைந்துள்ள பங்கில் இருக்கும் ஏ.எஸ்.எம்.ஐ சபையைச் சேர்ந்த கன்னியாஸ்திரிகளை தவறாமல் சந்திப்பார். வளர்ந்ததும் தானும் அவர்களைப் போல் ஒரு கன்னியாஸ்திரியாக வேண்டும் என்று முடிவு செய்துள்ளார். அவருடன் உடன்பிறந்தவர்கள் 7 பேர். அவர்களில் மூத்த மகள் தான் கன்னியாஸ்திரி பிரீத்தி மேரி. தனக்கு 20 வயது ஆன போது அவர் கன்னியாஸ்திரிகள் சபையில் சேர்ந்துள்ளார். கன்னியாஸ்திரி பிரீத்தி மேரி பற்றி அவரது தம்பி எம். பைஜு தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “அவர் (கன்னியாஸ்திரி பிரீத்தி மேரி) வீட்டிற்கு வரும்போதெல்லாம், சத்தீஸ்கரில் உள்ள ஏழைகளுக்கு உணவு, உடைகள் மற்றும் மருந்துகளை பேக் செய்வார். பயிற்சி பெற்ற செவிலியரான அவர், பிரார்த்தனை மற்றும் குணப்படுத்துதலை சமமாகவும் முக்கியமானதாகவும் கருதினார். நோய்களால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவுவதில் அவர் நம்பிக்கை கொண்டுள்ளார். வட இந்திய நகரங்களில் உள்ள ஏழைகளின் அவலநிலை குறித்து அவர் தொடர்ந்து எங்களிடம் கூறி வந்தார்.” என்று அவர் தெரிவித்தார். ஏ.எஸ்.எம்.ஐ சபையின் தலைவரான மதர் சுப்பீரியர் இசபெல் பிரான்சிஸ், தி இந்தியன் எக்ஸ்பிரஸ்ஸிடம் கூறுகையில், “எங்கள் நோக்கம் சுமார் 75 ஆண்டுகளுக்கு முன்பு தொழுநோயைக் குணப்படுத்துவதற்கான தலையீடாகத் தொடங்கியது. பின்னர் நாங்கள் பொது மருத்துவம் மற்றும் கல்வியில் கிளைத்தோம். நாங்கள் சத்தீஸ்கரில் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான பள்ளிகளையும் சுகாதார மருத்துவமனைகளையும் நடத்துகிறோம். எங்கள் வரலாற்றில் இதுபோன்ற (கட்டாய மத மாற்றம்) குற்றச்சாட்டை நாங்கள் சந்தித்ததில்லை.சகோதரி வந்தனா மற்றும் சகோதரி பிரீத்தி இருவரும் நீண்ட காலமாக திருச்சபைக்காக வாழ்ந்து பணியாற்றி வருகின்றனர். அவர்கள் தங்கள் வாழ்வில் சுமார் 30 ஆண்டுகளை ஏழைகளுக்காக தியாகம் செய்துள்ளனர். எங்கள் சகோதரிகளில் சிலர் இப்போது சட்டத்தைக் கற்றுக்கொள்கிறார்கள். இதன் மூலம், இதுபோன்ற பொய்யான குற்றச்சாட்டுகளை எதிர்த்துப் போராட முடியும்.” என்று அவர் தெரிவித்தார். சத்தீஸ்கரில் மருந்தகத்தில் பணிபுரிந்த 56 வயதான கன்னியாஸ்திரி வந்தனாவின் குடும்பத்தினர் அவரது உடல்நிலை குறித்து கவலையுற்று பேசினர். அவரது சகோதரர் ஜிம்ஸ் பேசுகையில், “அவர் (கன்னியாஸ்திரி வந்தனா பிரான்சிஸ்) ஒரு வயதான பெண்மணி, அவருக்கு மருத்துவ சிகிச்சை தேவை. நாங்கள் அவருக்காக கவலைப்படுகிறோம்” என்று கூறினார். கன்னியாஸ்திரிகளின் சகோதரர்களான பைஜு மற்றும் ஜிம்ஸ் இருவரும், அவர்களது சகோதரிகள் கைது செய்யப்பட்டதிலிருந்து சத்தீஸ்கரில் தங்கி இருந்தனர். இதுபற்றி பைஜு கூறுகையில், “வெளியில் என்ன நடக்கிறது என்பதை அவர்கள் அறியவில்லை, கவலைப்படுகிறார்கள். நான் அவர்களைச் சந்திக்கும் போது, திருச்சபை அவர்களுக்கு எவ்வாறு துணை நிற்கிறது என்பதை அவர்களிடம் சொல்ல முயற்சிக்கிறேன்.” என்றார்.தன்னைப் பார்க்கச் சென்றவர்களிடம் வந்தனா பிரான்சிஸ் தான் நலமாக இருப்பதாகச் சொல்லியிருக்கலாம். “அவர் தனது மடத்தில் உள்ள கன்னியாஸ்திரிகளைப் பற்றி விசாரித்தார். அவர்கள் தான் அவருடைய குடும்பத்தினர்,” என்று ஜிம்ஸ் கூறினார்.கேரள கத்தோலிக்க கிறிஸ்தவ பேராயர்கள் கூட்டமைப்பு தலைவர்கள், பல்வேறு மாநிலங்களில் மதமாற்ற எதிர்ப்புச் சட்டங்களுக்கு எதிராக நாடு முழுவதும் அமைதியான போராட்டங்களின் முகமாக கன்னியாஸ்திரிகள் இருந்துள்ளனர் என்று தி இந்தியன் எக்ஸ்பிரஸிடம் தெரிவித்தனர். “நாங்கள் அவர்களுடன் இருக்கிறோம். அவர்கள் எந்தத் தவறும் செய்யவில்லை என்பது எங்களுக்குத் தெரியும்,” என்று பொதுச் செயலாளர் பாதிரியார் தாமஸ் தரயில் கூறினார்.