இலங்கை
பணத்துக்காக பலரை ஏமாற்றி திருமணம்; 9 ஆவது திருமணத்தில் சிக்கிய பெண்!

பணத்துக்காக பலரை ஏமாற்றி திருமணம்; 9 ஆவது திருமணத்தில் சிக்கிய பெண்!
பணத்துக்காக பல ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்யும் பெண், தொடர்பான தகவல் ஒன்று வௌியாகியுள்ளது.
குறித்த பெண் , 9 வது திருமணத்துக்கு தயாரான நிலையில், அவரை பொலிஸார் கைது செய்துள்ளனர். சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரைச் சேர்ந்த சமீரா பாத்திமா என்ற பெண் கடந்த 15 ஆண்டுகளாக பணக்கார ஆண்களைக் குறிவைத்து மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்.
ஆசிரியர் எனக் கூறப்படும் சமீரா பாத்திமா, இதுவரை 8 ஆண்களை ஏமாற்றி திருமணம் செய்துள்ளார்.
இறுதியாக, 9வது திருமணத்துக்கு தயாராக இருந்த நிலையில், பாதிக்கப்பட்ட ஆண் ஒருவர் அளித்த முறைப்பாட்டை தொடர்ந்து, பொலிஸார் பெண்ணை நாக்பூரில் வைத்து கைது செய்தனர்.
மேட்ரிமோனி வலைதளம் மற்றும் போலி முகநூல் கணக்குகளின் ஊடாக பணக்கார ஆண்களை தொடர்பு கொள்ளும் சமீரா, தாம் விவாகரத்து பெற்ற பெண் எனவும், குழந்தை இருப்பதாகவும் கூறி அவர்களின் அனுதாபத்தையும், நம்பிக்கையையும் பெறுவதாக கூறப்படுகின்றது.
அவர்களின் நம்பிக்கையைப் பெற்றவுடன் திருமணம் செய்துகொள்வார். பின்னர், சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப் போவதாகவும் பொதுவெளியில் அவமானப்படுத்தப் போவதாகவும் தெரிவித்து மிரட்டி பணம் பறித்து வந்துள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
இதற்காக ஒரு மோசடி கும்பலையும் சமீரா ஒருங்கிணைத்து ஈடுபடுத்தியுள்ளதாக முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.
கடந்த 15 ஆண்டுகளில் 8 ஆண்களை சமீரா ஏமாற்றியுள்ள நிலையில், பல இலட்சம் ரூபாய் மோசடியில் ஈடுபட்டுள்ளார்.
சமீராவின் வலையில் சிக்கியவர்களில் இந்திய ரிசர்வ் வங்கியில் முக்கிய பொறுப்பில் இருக்கும் அதிகாரிகளும் உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.