இலங்கை
யாழ். சித்துப்பாத்தி கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ; அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு

யாழ். சித்துப்பாத்தி கண்டெடுக்கப்பட்ட பொருட்கள் ; அடையாளங்காண பொதுமக்களுக்கு அழைப்பு
சித்துப்பாத்தியில் மீட்கப்பட்ட மனித என்புக்கூட்டுத் தொகுதிகளுடன் கண்டெடுக்கப்பட்ட உடைகள் மற்றும் பிறபொருட்கள் என்பனவற்றை பொதுமக்களுக்கு காண்பித்து, அதன் மூலம் விசாரணை நடவடிக்கைகளுக்கு ஒத்துழைப்பை பெற்றுக்கொள்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
யாழ்ப்பாண நீதிவான் நீதிமன்றத்தின் உத்தரவில் இது குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த உத்தரவின்படி, யாழ்ப்பாணம் ஏ-9 வீதிக்கு அருகில் உள்ள செம்மணி பகுதியின், அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில், நீதிமன்ற கட்டளைக்கு அமைவாக மேற்கொள்ளப்பட்ட அகழ்வுப்பணிகளின்போது, மீட்கப்பட்ட சான்றுப்பொருட்கள் பொதுமக்களின் அடையாளப்படுத்தலுக்காக காட்சிப்படுத்தப்படவுள்ளன.
இதற்காக குற்றப்புலனாய்வு திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவின் நிலையப் பொறுப்பதிகாரி நீதிமன்றுக்குச் செய்த விண்ணப்பத்துக்கு, யாழ்ப்பாணம் நீதவான் நீதிமன்றம் அனுமதியை வழங்கியுள்ளது.
அதற்கமைய, செம்மணிப் பிரதேசத்தில் அமைந்துள்ள அரியாலை சித்துப்பாத்தி இந்து மயானத்தில் 2025 ஆகஸ்ட் 05ஆம் திகதி பிற்பகல் 1:30 முதல் மாலை 5 மணிவரை குறித்த உடைகள் மற்றும் பிறபொருட்கள் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
அவற்றைப் பார்வையிட்டு, அதிலுள்ள பொருட்களை அடையாளம் காணும்பட்சத்தில், நீதிமன்றுக்கு அல்லது குற்றப்புலனாய்வுப் பிரிவினருக்கு, அறிவித்து, விசாரணைக்கு ஒத்துழைப்பு வழங்குமாறு பொது மக்களிடம் கோரப்பட்டுள்ளது.