இந்தியா
அதிக லக்கேஜுக்கு கட்டணம்: ஸ்ரீநகரில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மீது ராணுவ அதிகாரி கொலைவெறித் தாக்குதல்

அதிக லக்கேஜுக்கு கட்டணம்: ஸ்ரீநகரில் ஸ்பைஸ்ஜெட் ஊழியர்கள் மீது ராணுவ அதிகாரி கொலைவெறித் தாக்குதல்
ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லவிருந்த அந்த அதிகாரியிடம், அதிகப்படியான உடமைகளுக்கான கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கப்பட்டதால், அவர் ஊழியர்களைத் தாக்கியதாகக் கூறப்படுகிறது. இந்தச் சம்பவம் ஜூலை 26-ம் தேதி நடந்துள்ளது.ஆங்கிலத்தில் படிக்க:“ஸ்ரீநகரில் இருந்து டெல்லி செல்லும் SG-386 என்ற விமானத்தின் நுழைவாயிலில், ஒரு பயணி நான்கு ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களைக் கடுமையாகத் தாக்கினார்” என்று ஸ்பைஸ்ஜெட் செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “குத்துகள், மீண்டும் மீண்டும் உதைப்பது மற்றும் வரிசைக்கான தடுப்புக் கட்டையால் தாக்கப்பட்டதால் எங்கள் ஊழியர்களுக்கு முதுகெலும்பு முறிவு மற்றும் தாடை எலும்புகளில் கடுமையான காயங்கள் ஏற்பட்டன. ஒரு ஸ்பைஸ்ஜெட் ஊழியர் மயங்கி தரையில் விழுந்தார். ஆனால், அந்த பயணி மயங்கி விழுந்த ஊழியரையும் தொடர்ந்து உதைத்துத் தாக்கினார். மயங்கி விழுந்த சக ஊழியருக்கு உதவ குனிந்த மற்றொரு ஊழியரின் தாடையில் வலுவாக உதைத்ததால் அவரது மூக்கு மற்றும் வாயில் இருந்து ரத்தம் வழிந்தது. காயமடைந்த ஊழியர்கள் உடனடியாக மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டு, சிகிச்சை பெற்று வருகின்றனர்.” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.“ஒரு மூத்த ராணுவ அதிகாரியான அந்தப் பயணி, அனுமதிக்கப்பட்ட 7 கிலோவை விட 2 மடங்கு அதிகமாக, மொத்தம் 16 கிலோ எடையுள்ள இரண்டு கைப்பைகளை வைத்திருந்தார். அதிகப்படியான உடமைகள் குறித்து பணிவாகத் தெரிவிக்கப்பட்டு, அதற்கான கட்டணத்தைச் செலுத்துமாறு கேட்கப்பட்டபோது, அந்தப் பயணி மறுத்துவிட்டார். மேலும், விமானத்தில் ஏறுவதற்கான செயல்முறையை முடிக்காமல், பாதுகாப்பு நடைமுறைகளை மீறி, வலுக்கட்டாயமாக விமான இணைப்பாலத்திற்குள் நுழைந்தார். பின்னர், சி.ஐ.எஸ்.எஃப் (CISF) அதிகாரி ஒருவரால் அவர் மீண்டும் நுழைவாயிலுக்கு அழைத்து வரப்பட்டார்” என்று செய்தித் தொடர்பாளர் கூறினார். “நுழைவாயிலில், அந்தப் பயணி மிகவும் ஆக்ரோஷமாக நடந்து கொண்டு, 4 ஸ்பைஸ்ஜெட் ஊழியர்களை உடல் ரீதியாகத் தாக்கினார்.” என்று தெரிவித்துள்ளார்.“உள்ளூர் காவல்துறையிடம் முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டுள்ளது. மேலும், சிவில் விமானப் போக்குவரத்து விதிகளின்படி, அந்தப் பயணியை விமானத்தில் பறக்க தடைசெய்யப்பட்டோர் பட்டியலில் சேர்க்கும் நடவடிக்கையை விமான நிறுவனம் தொடங்கியுள்ளது. தங்கள் ஊழியர்கள் மீது நடந்த கொலைவெறித் தாக்குதல் குறித்து ஸ்பைஸ்ஜெட் விமானப் போக்குவரத்து அமைச்சகத்திற்கு கடிதம் எழுதி, அந்தப் பயணி மீது தகுந்த நடவடிக்கை எடுக்கக் கோரியுள்ளது” என்று செய்தித் தொடர்பாளர் தெரிவித்தார். “விமான நிலைய அதிகாரிகளிடம் இருந்து சிசிடிவி காட்சிகளைப் பெற்று காவல்துறையிடம் அளித்துள்ளோம். ஸ்பைஸ்ஜெட் தனது ஊழியர்களுக்கு எதிராக நடைபெறும் எந்தவொரு வன்முறைச் செயலையும் கடுமையாக கண்டிக்கிறது. மேலும், இந்த விவகாரத்தை சட்ட மற்றும் ஒழுங்குமுறை ரீதியான முடிவுக்கு கொண்டு செல்லும்” என்றார்.விமான நிறுவனம் அளித்த புகாரின் அடிப்படையில், புட்காம் காவல் நிலையத்தில் அந்த அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.இந்தச் சம்பவத்தின் சிசிடிவி காட்சிகளில், அந்த அதிகாரி விமான நிலைய ஊழியர்களைத் தாக்குவதும், காயமடைந்த ஊழியர்களில் ஒருவர் ஸ்ட்ரெச்சரில் தூக்கிச் செல்லப்படுவதும் பதிவாகியுள்ளது.