பொழுதுபோக்கு
கண்டிஷன் போட்ட வித்யாசாகர்; கடுப்பில் அவரையே திட்டி பாடல் எழுதிய யுகபாரதி: இது ஹிட்டான பிசாசு!

கண்டிஷன் போட்ட வித்யாசாகர்; கடுப்பில் அவரையே திட்டி பாடல் எழுதிய யுகபாரதி: இது ஹிட்டான பிசாசு!
புகழ்பெற்ற பாடலாசிரியர் யுகபாரதி தனது இசைப் பயணத்தில் நடந்த ஒரு மறக்க முடியாத நிகழ்வைப் பற்றி ஒரு நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோ தீக்கதிர் யூடியூப் பக்கத்தில் வெளியாகியுள்ளது. ரன் திரைப்படத்திற்காக இசையமைப்பாளர் வித்யாசாகர், யுகபாரதியை பாடல் எழுத அழைத்தபோது, யுகபாரதி தனது இரண்டு கவிதைத் தொகுப்புகளுடன் அவரைச் சந்தித்தார்.ஆனால், வித்யாசாகர் அந்தக் கவிதைத் தொகுப்புகளை அலட்சியமாகத் தூக்கி எறிந்து, ‘பல்லாங்குழியில் வட்டம் பார்த்தேன்’ பாடல் மிகப் பெரிய வெற்றியைப் பெற்றிருந்தபோதிலும், அதைப் பற்றி அறிந்திருக்காதது போல் தன்னிடம் பேசியதாக தெரிவித்தார். ஒரு காதல் பாடலுக்கான சூழ்நிலையை விவரிக்கும்போது, வித்யாசாகர், ‘அன்புள்ள’ என்ற வார்த்தையுடன் ஆரம்பிக்கக் கூடாது என்று நிபந்தனை விதித்தது, யுகபாரதியை ஆத்திரமூட்டியது.வித்யாசாகரின் நிபந்தனைகளாலும், அலட்சியத்தாலும் கோபமடைந்த யுகபாரதி, அதே கோபத்துடன் ஒரே இரவில் ஒரு பாடலை எழுதினார். இந்த பாடல் கூட இரவில் சித்தர் பாட்டு படிக்கும்போது தோன்றியதாகவும் பிசாசு என்ற வார்த்தையை அதில் படித்தப்பின் யோசனை வந்து பாட்டில் பயன்படுத்தியதாகவும் தெரிவித்தார். அந்தப் பாடல்தான் ரன் படத்தில் வரும் ‘காதல் பிசாசே, காதல் பிசாசே, ஏதோ சௌக்கியம் பரவாயில்லை’ என்று வித்யாசாகரையே கேலி செய்யும் விதமாக அமைந்திருந்தது. ஆனால், அந்தப் பாடலை வித்யாசாகர் படித்தபோது, அதில் இருந்த தனித்துவமான உணர்வைக் கண்டு வியந்து தன்னை பாராட்டியதாக தெரிவித்தார்.யுகபாரதி தன்னுடைய கோபத்தைக் கட்டுப்படுத்த முடியாமல் திட்டியது, கடைசியில் ஒரு சிறந்த படைப்பாக மாறியது. வித்யாசாகர், ‘இனிமேல் நான் இசையமைக்கும் எல்லாப் படங்களுக்கும் நீதான் பாடல் எழுத வேண்டும்’ என்று யுகபாரதியிடம் கூறி, அவருக்கு ஒரு புதிய வாய்ப்பை அளித்ததாகவும் யுகபாரதி தெரிவித்தார். அதற்கு பிறகு வித்யாசாகரின் இசையில் சுமார் 300 பாடல்களுக்கு பாட்டு எழுதியுள்ளதாகவும் யுகபாரதி கூறினார். மேலும் அந்த பாடல் வித்யாசாகரை திட்டித்தான் எழுதியது என்று அவருக்கும் தெரியுமா? பரவாயில்லை நான் திட்டியதால்தான் நீ இப்படி எழுதினாய் என்று அவர் கூறி வாய்ப்பு கொடுத்து இருக்கிறார். இந்த நிகழ்வு, யுகபாரதியின் வாழ்க்கையில் ஒரு முக்கியத் திருப்புமுனையாக அமைந்தது. சில நேரங்களில் கோபம் கூட ஒரு சிறந்த படைப்பிற்கான உந்துதலாக அமையலாம் என்றும் அவர் கூறினார்.