பொழுதுபோக்கு
பஸ் டிக்கெட்டுக்கு காசு இல்ல, 16 வயதில் பசி கொடுமை; ஆனாலும் ஜாலி தான்: கஷ்டத்திலும் காமெடி செய்த பார்த்திபன் மெமரீஸ்!

பஸ் டிக்கெட்டுக்கு காசு இல்ல, 16 வயதில் பசி கொடுமை; ஆனாலும் ஜாலி தான்: கஷ்டத்திலும் காமெடி செய்த பார்த்திபன் மெமரீஸ்!
பிரபல தமிழ் நடிகர் மற்றும் இயக்குனர் பார்த்திபன், தனது தனித்துவமான பேச்சுத் திறமைக்கும், நகைச்சுவை உணர்வுக்கும் பெயர் பெற்றவர். ஒரு இயக்குநராக, ‘புதிய பாதை’ போன்ற திரைப்படங்களின் மூலம் தேசிய விருதைப் பெற்று, தமிழ் சினிமாவில் தனக்கென ஒரு தனி இடத்தைப் பிடித்துள்ளார். பார்த்திபனின் நகைச்சுவை உணர்வு, அவரது கடினமான வாழ்க்கை அனுபவங்களிலிருந்தே உருவானது என்பது பலருக்கும் தெரியாத ஒரு விஷயம். அவர் தனது கல்லூரி காலத்தில் சந்தித்த கஷ்டங்களைப் பற்றிப் பேசும்போது, அதில் கூட நகைச்சுவை கலந்திருந்ததாக அந்திமழை டிவி யூடியூப் பக்கத்திற்கு அளித்த பேட்டியில் தெரிவித்துள்ளார்.அவர் சென்னை அடையாறு பாலிடெக்னிக்கில் படித்தபோது, வறுமை காரணமாக பஸ் டிக்கெட்டுக்கு கூட பணம் இல்லாமல் இருந்திருக்கிறார். பசி கொடுமையால், வெறும் சாதத்தில் மஞ்சள் தூள், ஒரு வெங்காயம், ஒரு மிளகாய் சேர்த்து சாப்பிட்டு, அன்றைய நாளைக் கழித்திருக்கிறார். இந்த நிலைமையிலும் கூட, மற்றவர்களை சிரிக்க வைக்கும் முயற்சியில் அவர் ஈடுபட்டார். ஒருமுறை பஸ்ஸில் கண்டக்டர், பின்னால் நின்றுகொண்டிருந்த இளைஞர்களை, குறிப்பாக பெண்களை “சைட் அடித்துக்” கொண்டிருந்ததாகக் கூறி, அவர்களை முன்பக்கம் செல்லுமாறு கூறினார். அப்போது கண்டக்டரிடம் பார்த்திபன், “நான் எங்கே போகணும்னு கேட்டதுக்கு, நீதான்யா போணும்னு சொன்னார், கண்டக்டருக்கு கோபம் வந்துவிட்டது, ஆனால் அருகில் இருந்த பெண்களுக்கு சிரிப்பு வந்துவிட்டது.இன்னொருமுறை, ஒரு பயணி “நீ எங்கே இறங்கணும்?” என்று கேட்டபோது, பார்த்திபன், “நான் கீழே இறங்கணும்” என்று விளையாட்டாக பதிலளித்தார். இதைக் கேட்டவுடன் பஸ்ஸில் இருந்த அனைவரும் சிரித்தனர். இப்படிப்பட்ட நகைச்சுவைப் பேச்சுகளை, முன்பே தயாரித்துக்கொண்டு, பிறரை சிரிக்க வைப்பதையே அவர் தனது பொழுதுபோக்காக வைத்திருந்தார். அதேபோல மற்றொரு நாள் காமதேனு பஸ் ஸ்டாப்பில் இவரை இறக்கிவிடுங்கள் என்று பக்கத்தில் இருந்தவரிடம் பயணி ஒருவர் கூறியதற்கு இல்லை நானே இறங்கிக்கிறேன், ஸ்டாப் வந்தால் மட்டும் சொல்லுங்கள் என்று கூறுவாராம். இதனால் பஸ்ஸில் இருக்கும் அனைவரும் சிரிப்பார்கள் என்று அவர் கூறினார். வறுமையான காலகட்டத்தில் கூட பார்த்திபன் காமெடி செய்து அனைவரையும் சிரிக்க வைத்துள்ளார். இதற்காக முன்னாடி நாளே தயார் செய்துவிட்டு செல்வதாகவும் கூறினார். வாழ்க்கையில் எவ்வளவு கஷ்டங்கள் வந்தாலும், அதை நகைச்சுவையோடு கடந்து செல்வதுதான் வாழ்க்கையின் மிகப் பெரிய தத்துவம் என்பதை அவர் உணர்த்துகிறார். சினிமாவில் அவரது பயணம் ஒரு கடினமான தொடக்கத்தைக் கொண்டிருந்தாலும், பார்த்திபன் தனது திறமையையும், கடின உழைப்பையும் ஒருபோதும் விட்டுக் கொடுக்கவில்லை. ‘புதிய பாதை’ திரைப்படத்தின் வெற்றி, அவரை ஒரு திறமையான இயக்குனர் மற்றும் நடிகராக நிலைநிறுத்தியது.அவரது திரைப்படங்கள் பெரும்பாலும் வித்தியாசமான கதைகளையும், தனித்துவமான கதாபாத்திரங்களையும் கொண்டிருக்கும். அவரது படங்களின் வசனங்கள், தமிழ் சினிமாவில் ஒரு புதிய பாணியை உருவாக்கியுள்ளன. இந்த வீடியோவில் அவர் பகிர்ந்து கொண்ட அனுபவங்கள், பார்த்திபன் என்ற கலைஞன் எப்படி உருவானான் என்பதைத் தெளிவாக உணர்த்துகிறது. ஒரு எளிய குடும்பத்தில் பிறந்து, வறுமையின் பிடியில் சிக்கி, அதை நகைச்சுவையால் வென்று, இன்று ஒரு முன்னணி கலைஞனாக உயர்ந்துள்ளார் பார்த்திபன்.