பொழுதுபோக்கு
பார்க்கிங் நல்ல படம் தான், ஆனா தகுதியான படத்திற்கு விருதுகள் இல்லை; பிரபல தயாரிப்பாளர் கருத்து!

பார்க்கிங் நல்ல படம் தான், ஆனா தகுதியான படத்திற்கு விருதுகள் இல்லை; பிரபல தயாரிப்பாளர் கருத்து!
71-வது தேசிய திரைப்பட விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்ட நிலையில், இந்த விருது பட்டியலில் பல நல்ல திரைப்படங்களை தேர்வுக்குழு பரிசீலிக்கவில்லை என்று தயாரிப்பாளர் தனஞ்சேயன் கூறியுள்ளார்.இந்தியாவில் ஆண்டுதோறும் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படுவது வழக்கமான ஒன்று. சிறந்த நடிகர், சிந்த துணை நடிகர், சிறந்த படம், சிறந்த இசையமைப்பாளர் உள்ளிட்ட பல பிரிவுகளில் வழங்கப்படும் இந்த விருதுகள் குறிப்பிட்ட வருடத்தில் ஜனவரி 1-ந் தேதி முதல் டிசம்பர் 31-ந் தேதி வரை தேசிய தணிக்கை வாரியத்தால் சான்று அளிக்கப்பட்ட படங்களில் சிறந்த படங்களை தேர்வு செய்து இந்த விருதுகளை வழங்கி வருகிறார்கள்.அந்த வகையில் 2022-ம் ஆண்டுக்கான 70-வது தேசிய விருது பட்டியலில் திருச்சிற்றம்பலம் படத்தில் நடித்த நடிகை நித்யா மேனனுக்கு சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டது. தொடர்ந்து 72-வது தேசிய விருது கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது. 2023-ம் ஆண்டு ஜனவரி 1 முதல் டிசம்பர் 31-வரை தணிக்கை சான்று பெற்ற திரைப்படங்களுக்கு விருது அளிக்கப்பட்டது. அந்த வகையில் தமிழில் பார்க்கிங் திரைப்படம், சிற்நத படம், சிறந்த திரைக்கதை, சிறந்த துணை நடிகர் (எம்.எஸ்.பாஸ்கர்) ஆகிய 3 பிரிவுகளில் விருதை வென்றுள்ளது.அதேபோல் வாத்தி படத்திற்கு இசையமைத்த ஜி.வி.பிரகாஷ் சிறந்த இசையமைப்பாளருக்கான தேசிய விருதை வென்றிருந்தார். மலையாளத்தில் ஊர்வசி நடித்த உள்ளொழுக்கு, தி கேரளா ஸ்டோரீஸ், தெலுங்கில் பாலகிருஷ்ணா நடித்த பகவந்த் கேசரி, இந்தியில் டுவல்த் ஃபெயில், ஜவான் ஆகிய படங்களுக்கும் விருது அளிக்கப்பட்டது. ஷாருக்கானின் திரை வாழ்க்கையில் முதல்முறையாக ஜவான் படத்திற்காக தேசிய விருது வாங்கியுள்ளார்.விருது பெற்ற திரைப்படங்கள் மற்றும் நட்சத்திரங்களுக்கு பாராட்டுக்கள் குவிந்தாலும் பல தகுதியான திரைப்படங்களுக்கு விருது கிடைக்காதது ஏமாற்றம் தான் என்று தயாரிப்பாளர் தனஞ்சேயன் கூறியுள்ளார். வாவ் தமிழா யூடியூப் சேனலுக்கு அவர் அளித்த பேட்டியில், பார்க்கிங் நல்ல திரைப்படம் தான் அதில் எந்த மாற்றுக்கருத்தும் இல்லை. எம்.எஸ்.பாஸ்கர் திறமையான நடிகர், தேசிய விருதுக்கு தகுதியானவர். ஆனால் போர்த்தொழில் அருமையான திரைப்படம், அதேபோல் அயோத்தி, மாமன்னன் ஆகிய படங்களுக்கும் விருதுகள் கிடைத்திருக்க வேண்டும். ஜி.வி.பிரகாஷ்க்கு கூட வாத்தி படத்தின் தெலுங்கு மொழியை அடிப்படையாக வைத்து தான் விருது கொடுத்திருக்கிறார்கள். விருது கிடைத்த அனைவருக்கும் வாழ்த்துக்கள் சொல்லலாம். ஆனால் பல தகுதியான திரைப்படங்களுக்கு விருதுகள் கிடைக்காதது ஏமாற்றம் தான். அதேசமயம் இந்த கடுமையாக போட்டியில் இவ்வளவு விருதுகள் கிடைத்ததை நினைத்து மகிழ்ச்சியடையலாம் என்று கூறியுள்ளார்.