பொழுதுபோக்கு
15 நாள் பாம்புடன் ஷூட்டிங், முதல் நாளே நடந்த விபரீதம்; தெறித்து ஓடிய ஹீரோ: வடிவேலு த்ரேபேக்!

15 நாள் பாம்புடன் ஷூட்டிங், முதல் நாளே நடந்த விபரீதம்; தெறித்து ஓடிய ஹீரோ: வடிவேலு த்ரேபேக்!
பிரபல நகைச்சுவை நடிகர் வடிவேலு, தான் படப்பிடிப்பின்போது சந்தித்த சில வேடிக்கையான மற்றும் சுவாரஸ்யமான அனுபவங்களை ஒருமுறை ஜெயா டிவியின் பேட்டியில் பகிர்ந்துகொண்டார். அவற்றில் இரண்டு சம்பவங்கள் மிகவும் சுவாரஸ்யமானவை.ஒரு படப்பிடிப்பின்போது, கதைப்படி ஒரு நடிகர் 15 நாட்கள் பாம்புடன் நடிக்க வேண்டியிருந்தது. இதற்காக, ஒரு பாம்பாட்டி படப்பிடிப்புத் தளத்திற்கு பாம்பு ஒன்றை எடுத்து வந்திருந்தார். படப்பிடிப்பில் இருந்த நடிகர், அந்தப் பாம்பாட்டியை அணுகி, “இந்த பாம்பு பாதுகாப்பானதா? எதுவும் பிரச்சனை செய்யாதா?” என்று கேட்டிருக்கிறார். அதற்குப் பாம்பாட்டி, “பயப்பட வேண்டாம், எதுவும் செய்யாது. இதன் பற்களைப் பிடுங்கிவிட்டோம்” என்று உறுதி அளித்திருக்கிறார்.ஆனால், நடிகர் அதை நம்ப மறுத்து, “எங்கே, பாம்பை உங்களைக் கொத்த சொல்லுங்கள், சோதித்துப் பார்ப்போம்” என்று வலியுறுத்தினார். பாம்பாட்டியும் பாம்பை எடுத்து, “கொத்து” என்று சொல்லிக்கொண்டிருக்கும்போது, எதிர்பாராத விதமாக பாம்பு அவரை கடித்துவிட்டது. உடனடியாக மயக்கம் அடைந்த அந்தப் பாம்பாட்டி, “சார், பாம்பு மாறிவிட்டது” என்று கூறிவிட்டு மயக்கமடைந்துவிட்டார். அந்தப் பாம்பாட்டி உடனடியாக மருத்துவமனைக்குக் கொண்டு செல்லப்பட்டு 15 நாட்கள் சிகிச்சை பெற்றுள்ளார். இதை அறிந்த அந்த நடிகர், தான் வாங்கிக்கொண்ட முன்பணத்தை அப்படியே வைத்துவிட்டு, “நான் இந்தப் படத்தில் நடிக்கவில்லை” என்று கூறிவிட்டு படத்திலிருந்து விலகிவிட்டதாக வடிவேலு அந்தப் பேட்டியில் தெரிவித்தார்.இதேபோல மற்றொரு படப்பிடிப்பில், முதல் நாள் ஷூட்டிங் முடிந்த பிறகு, படக்குழுவினர் அனைவரும் ஒரு ஹோட்டலில் தங்க வைக்கப்பட்டிருந்தனர். வடிவேலுவின் அறைக்கு எதிரே ஒரு பாம்பாட்டிக்கும் அறை ஒதுக்கப்பட்டிருந்தது. மறுநாள் காலை, வடிவேலு அந்தப் பாம்பாட்டியிடம், “பாம்பு எப்படி இருக்கிறது?” என்று விசாரித்தார்.அதற்கு அந்தப் பாம்பாட்டி, “பாம்புகள் எல்லாம் நன்றாகத்தான் இருக்கின்றன, ஆனால் ஒரு பாம்பை மட்டும் காணவில்லை” என்று கூறியிருக்கிறார். இதைக் கேட்டதும் அதிர்ச்சியடைந்த வடிவேலு, உடனடியாக மேலாளரை அழைத்து, அங்கிருந்து வேறு ஹோட்டலுக்கு மாறிவிட்டாராம். இதுபோன்ற பல சுவாரஸ்யமான சம்பவங்கள் படப்பிடிப்பில் நடக்கும் என்று வடிவேலு சிரித்துக்கொண்டே கூறினார்.