இந்தியா
என்ன சொன்னாலும் அரசு கேட்கவில்லை: குடிநீரில் கலந்த கழிவுநீர்- புதுச்சேரியில் மக்கள் அவதி

என்ன சொன்னாலும் அரசு கேட்கவில்லை: குடிநீரில் கலந்த கழிவுநீர்- புதுச்சேரியில் மக்கள் அவதி
புதுச்சேரி உருளையன்பேட்டை தொகுதிக்கு உட்பட்ட கோவிந்த சாலை, முடக்கு முத்து மாரியம்மன் வீதியில், சுமார் 300-க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இந்த பகுதி மக்கள் கடந்த மூன்று மாதங்களுக்கும் மேலாக ஒரு பெரும் சுகாதாரப் பிரச்சனையை சந்தித்து வருகின்றனர். அவர்களின் அன்றாட தேவைக்கான குடிநீரில், கழிவுநீர் கலந்து வருவதாகப் பலமுறை புகார் அளித்தும், அரசுத் தரப்பில் இருந்து எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. “என்ன சொன்னாலும் அரசு கேட்கவில்லை” என பாதிக்கப்பட்ட மக்கள் வேதனையுடன் கூறுகிறார்கள். அவர்களின் இந்த குற்றச்சாட்டுக்கு வலு சேர்க்கும் விதமாக, நேற்று குடிநீரில் அதிக அளவில் கழிவுநீர் கலந்து வந்ததால், அதனை அருந்திய குழந்தைகள் உட்பட 10-க்கும் மேற்பட்டோர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இவர்களுக்கு வாந்தி பேதி மற்றும் வயிற்றுப்போக்கு ஏற்பட்டதையடுத்து, உடனடியாக புதுச்சேரி அரசு பொது மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்த செய்தி அறிந்தவுடன், எதிர்க்கட்சித் தலைவர் சிவா, நேரடியாக மருத்துவமனைக்குச் சென்று பாதிக்கப்பட்டவர்களைச் சந்தித்து ஆறுதல் கூறினார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், “புதுச்சேரி நகரப் பகுதிகளில் கடந்த மூன்று மாதங்களுக்கு மேலாகவே குடிநீர் பிரச்சனை இருந்து வருகிறது. இது குறித்து அரசுக்கு பலமுறை தெரிவித்த பின்னரும் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. இதனால் இன்று 10-க்கும் மேற்பட்டவர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். எனவே, அரசு உடனடியாக இந்த விஷயத்தில் தலையிட்டு, போர்க்கால அடிப்படையில் சுத்தமான குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார்.