இலங்கை
இஸ்ரேலுக்கான இலவச விசா அமெரிக்காவின் அழுத்தமா-எச்சரிக்கும் எதிர்க்கட்சி!

இஸ்ரேலுக்கான இலவச விசா அமெரிக்காவின் அழுத்தமா-எச்சரிக்கும் எதிர்க்கட்சி!
இஸ்ரேலியர்கள் இலங்கைக்கு வருவதற்கு வாய்ப்பளிக்க வேண்டும் என்பது அமெரிக்காவின் அழுத்தமாகவோ அல்லது நிபந்தனையாகவோ இருக்கலாம். ஆனால் இஸ்ரேலியர்களை நாட்டுக்குள் அனுமதிப்பதால் எதிர்காலத்தில் பாரிய அழிவுகளை சந்திக்க நேடும் என ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் எச்சரித்துள்ளார்.
கொழும்பில் நேற்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிடும் போது இதனைத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிடுகையில்,
தற்போது அருகம்பை இஸ்ரேலில் ஒரு கொலனியாக மாறியிருக்கிறது என்பது வெளிநாட்டவர்களுக்கு கூட புரிந்துள்ளது.
நாட்டின் சுற்றுலாத்துறை அமைச்சர், பாதுகாப்பு அமைச்சர் உள்ளிட்ட அனைவரும் கசாயம் அருந்தியவர்களைப் போன்று இருக்கின்றனர்.
இஸ்ரேலியர்கள் மொசார்ட்டைப் போன்று இலங்கையில் சுதந்திரமாக செயற்படக் கூடிய சூழல் காணப்படுகிறது.
இது தேசிய பாதுகாப்புக்கு பாரிய அச்சுறுத்தலாகும். இஸ்ரேலுடன் இணைந்து நாட்டைக் கட்டியெழுப்ப முடியும் என்று அரசாங்கம் எண்ணுகிறது.
அவர்களுடன் உறவாடினால் இலாபத்தை விட பாரிய இழப்பீட்டை செலுத்த நேரிடும் என்பதையும் அரசாங்கத்துக்கு நினைவுபடுத்துகின்றோம். எந்த அடிப்படையில் கட்டணமின்றி இஸ்ரேலியர்களுக்கு விசா வழங்க வெளிநாட்டலுவல்கள் அமைச்சர் தீர்மானித்தார் என்பது எமக்கு தெரியாது.
இது அமெரிக்காவின் நிபந்தனையாகக் கூட இருக்கலாம். அமெரிக்கா, இஸ்ரேல் என்பவை வெளியுலகுக்கு இரு வேறு நாடுகள் என்ற போதிலும் இன்று அவை இரண்டும் ஒரே நாடுகள் ஆகும்.
இந்த அரசாங்கத்தின் வெளிநாட்டுக் கொள்கையால் நாட்டுக்கு எதிர்காலத்தில் பாரிய அழிவு காத்திருக்கிறது என்றார்.[ஒ]