இலங்கை
ஈழத்தமிழர்கள் மீது அவதூறு ; கிங்டம்’ திரைப்படம் வெளியீட்டில் சர்ச்சை

ஈழத்தமிழர்கள் மீது அவதூறு ; கிங்டம்’ திரைப்படம் வெளியீட்டில் சர்ச்சை
ராமநாதபுரத்தில் தெலுங்கு நடிகர் விஜய் தேவரகொண்டா நடித்துள்ள ‘கிங்டம்’ திரைப்படத்திற்கு எதிராக நாம் தமிழர் கட்சியினர் செவ்வாய்க்கிழமை போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த திரைப்படம், ஈழத்தமிழர்கள் மீது அவதூறான மற்றும் வரலாற்றுக்கு முரணான காட்சிகளை கொண்டு வெளியாகியுள்ளதாக கட்சியினர் குற்றம் சாட்டியுள்ளனர்.
திரைப்படத்தில், ஈழத்தமிழர்கள் மலையகத்தமிழர்களை அடிமைகள் போல் நடத்தினர் என காட்டப்படுவது மிகுந்த வரலாற்று முறைப்பாடும், பொய்மையும் என அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து நாம் தமிழர் கட்சி கூறியுள்ளதாவது,
“கருத்துச் சுதந்திரம் என்ற பெயரில், தமிழர் இன வரலாற்றைத் திரித்து காண்பிப்பதை ஒருபோதும் அனுமதிக்க முடியாது. வரலாற்றில் நடக்காத விஷயங்களை நடந்தது போல் காட்டி, தமிழர்களை அவமதிக்கும் இச்செயல் முற்றிலும் எதிர்க்கத்தக்கது.”
போராட்டம் காரணமாக, ராமநாதபுரம் உள்ளிட்ட சில பகுதிகளில் தியேட்டர்களில் பொலிசார் பாதுகாப்பு திரட்டப்பட்டனர்.
இதேவேளை, ராமநாதபுரத்தில் உள்ள ஒரு தியேட்டர், நிலவிய நிலைமையை முன்னிட்டு ‘கிங்டம்’ படத்துக்கான காட்சிகளை ரத்து செய்ததாக அறிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்ட நாம் தமிழர் கட்சியினரை பொலிசார் கைது செய்ததும் குறிப்பிடத்தக்கது.
இந்த விவகாரம் தொடர்பாக அரசியல் மற்றும் சமூக அமைப்புகளும் கடும் கண்டனம் தெரிவித்துள்ளன.
திரைப்படத்தின் பிரச்சாரக் காட்சிகளை தமிழகமெங்கும் எதிர்க்கும் நிலைமை நிலவுகிறது.