இந்தியா
உத்தரகாசி: மேக வெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு… 4 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்

உத்தரகாசி: மேக வெடிப்பால் வெள்ளம், நிலச்சரிவு… 4 பேர் பலி; மீட்புப் பணிகள் தீவிரம்
உத்தரகாசியின் தாராலி கிராமத்தில் செவ்வாய்க்கிழமை அன்று ஏற்பட்ட மேக வெடிப்பு காரணமாக திடீர் வெள்ளப்பெருக்கு மற்றும் பெரிய அளவிலான நிலச்சரிவு ஏற்பட்டது. இந்த விபத்து அப்பகுதியில் பெரும் சேதத்தை ஏற்படுத்தியுள்ளது. இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும், இந்திய ராணுவம், மாநில பேரிடர் மீட்புப் படை (SDRF), தேசிய பேரிடர் மீட்புப் படை (NDRF) மற்றும் பிற மீட்புக் குழுக்கள் சம்பவ இடத்திற்கு விரைந்துள்ளன. இந்த தாராலி கிராமம், பிரபலமான சுற்றுலாத் தலமான ஹர்சிலில் இருந்து சுமார் 10 கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது.மாவட்ட ஆட்சியர் பிரசாந்த் ஆர்யா தெரிவிக்கையில், “மேக வெடிப்பால் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது. இந்த கிராமம் உயரமான பகுதியில் இருந்தாலும், இங்கு உணவகங்கள் மற்றும் கடைகள் போன்ற வணிக நிறுவனங்கள் அதிகம் இருந்தன. இதனால் அதிக சேதம் ஏற்பட்டுள்ளது. தற்போது வரை நான்கு பேர் உயிரிழந்ததாகத் தகவல் வந்துள்ளது” என்று கூறினார். மேலும், சம்பவத்தின் போது அப்பகுதியில் இருந்தவர்கள் குறித்த விவரங்களைச் சேகரித்து வருவதாகத் தெரிவித்தார்.இதற்கிடையே, திடீர் வெள்ளத்தில் சிக்கி உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா இரங்கல் தெரிவித்துள்ளார். மேலும், உத்தரகண்ட் முதல்வர் புஷ்கர் சிங் தாமிக்கு தொலைபேசியில் தொடர்பு கொண்டு, நிலைமை குறித்து கேட்டறிந்தார். பேரிடர் மீட்புப் பணிகளுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் மத்திய அரசு செய்யும் என்றும் உறுதியளித்துள்ளார். உத்தரகண்ட் மாநில பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் தகவலின்படி, அருகில் உள்ள மருத்துவமனைகள் மற்றும் ரிஷிகேஷில் உள்ள எய்ம்ஸ் மருத்துவமனையில் படுக்கைகள் ஒதுக்கப்பட்டிருக்கின்றன. அவசரகால சிகிச்சைக்காக ஆம்புலன்ஸ்களும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்பட்டுள்ளன. பத்வாரி துணை மாவட்ட ஆட்சியர் ஷாலினி நேகி, “சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்துள்ளனர். மனித உயிர் சேதம் ஏற்பட்டிருக்கலாம் என அஞ்சுவதாகவும், சேதமதிப்புகள் குறித்து முழுமையான தகவல்கள் இன்னும் கிடைக்கவில்லை” என்றும் தெரிவித்துள்ளார்.சம்பவம் நடந்த சமயத்தில் அப்பகுதியில் உள்ளூர் திருவிழா நடைபெற்றுக் கொண்டிருந்ததாகவும், இதனால் பொதுமக்கள் அதிக அளவில் இருந்ததாகவும் காவல்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. திடீர் வெள்ளத்தில் 20க்கும் மேற்பட்ட உணவகங்கள் மற்றும் கடைகள் சேதமடைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. மீட்புப் பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன.இந்த செய்தியை ஆங்கிலத்தில் வாசிக்க இந்த இணைப்பை கிளிக் செய்யவும்.