இலங்கை
செம்மணி சான்றுப்பொருள்கள் இன்று மக்களின் பார்வைக்கு!

செம்மணி சான்றுப்பொருள்கள் இன்று மக்களின் பார்வைக்கு!
யாழ்ப்பாணம் – செம்மணிப் புதைகுழியில் இருந்து இதுவரை மீட்கப்பட்ட சான்றுப்பொருள்கள் இன்று மக்களின் பார்வைக்காகக் காட்சிப்படுத்தப்படவுள்ளன.
யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில், குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் மனிதக்கொலை விசாரணைப் பிரிவால் தாக்கல் செய்யப்பட்ட நகர்த்தல் பத்திரத்துக்கு அமைய, செம்மணிப் புதைகுழியில் இருந்து மீட்கப்பட்ட புத்தகப்பை, சிறுவர்களின் காலணிகள், குழந்தையின் பாலூட்டும் போத்தல் (போச்சி), வளையல்கள் உள்ளிட்ட 54 சான்றுப் பொருள்களையும் பொதுமக்களின் பார்வைக்காக வைத்து, அடையாளப்படுத்தல் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு நீதிமன்றம் அனுமதித்திருந்தது.
இதன்படி, இன்று செவ்வாய்க்கிழமை பிற்பகல் 1.30 மணி தொடக்கம் மாலை 5 மணிவரை இந்தச் சான்றுப்பொருள்களை அரியாலை சித்துப்பாத்தி மயானத்தில் பார்வையிட முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதைமுன்னிட்டு விசேட பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன.