Connect with us

இந்தியா

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை;

Published

on

Loading

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுரவின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறை;

தென்னிந்திய இயக்குநர் வ.கௌதமன் தெரிவிப்பு!

கிருசாந்தி படுகொலை வழக்கின் குற்றவாளியாக தற்பொழுது சிறையிலிருக்கும் இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஆபத்து ஏற்பட்டால் அது அநுர அரசாங்கத்திற்கு ஆகப்பெரும் ஒரு கறையாகவே அமையும் என தென்னிந்திய பிரபல இயக்குநரும் தமிழ்ப் பேரரசு கட்சியின் பொதுச் செயலாளருமான வ.கெளதமன் தெரிவித்துள்ளார்.

Advertisement

இது குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்: யாழ்ப்பாணம் செம்மணி மனிதப் புதைகுழி விவகாரம் தொடர்பாக தேவை ஏற்படும் சூழலில் சர்வதேச விசாரணைக்கு தயாராக இருப்பதாக கிருசாந்தி கொலை வழக்கின் குற்றவாளியான இராணுவ சிப்பாய் சோமரத்ன ராஜபக்ச தனது மனைவி ஊடாக இலங்கை ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுக்கு கடிதம் மூலம் தெரியப்படுத்தியுள்ளார். இவ்வாறு அவர் தெரியப்படுத்தியதன் மூலம் சிறையிலிருக்கும் அவரது உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது.

சோமரத்ன ராஜபக்ச சிறையில் அடைக்கப்பட்ட ஆரம்ப காலகட்டத்தில் ஜனாதிபதி சட்டத்தரணியான குமார் பொன்னம்பலம் போகம்பரை சிறைச்சாலையில் சோமரத்ன ராஜபக்சவை சந்தித்து அவரிடம் பல விடயங்களை கேட்டறிந்த பின்னர், ஐக்கிய நாடுகள் சபைக்கு குறித்த விடயத்தை கொண்டு சென்று அது தொடர்பான நகர்வுகள் மேற்கொள்ளப்படவிருந்த நிலையில் குமார் பொன்னம்பலம் சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது இவ்வாறு இருக்கையில் சோமரத்ன ராஜபக்சவின் உயிரை பாதுகாக்க வேண்டிய தேவை தற்பொழுது அனைத்து தரப்பினருக்கும் ஏற்பட்டுள்ளது. ஏனெனில் செம்மணியில் 135க்கும் மேற்பட்ட மனித எலும்புக் கூடுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள நிலையில் இன்னமும் அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்படுகின்றன. செம்மணி புதைகுழியில் புதைக்கப்பட்டவர்களுக்கு என்ன நடந்தது என்பதனை வெளியில் தெரியப்படுத்தக்கூடிய ஒரே ஒரு முக்கிய சாட்சியமாக சோமரத்ன ராஜபக்ச மட்டுமே உள்ளார்.

Advertisement

செம்மணியில் புதைக்கப்பட்டவர்கள் சிங்களவர்களாக இருக்கலாம் என தென்பகுதி அரசியல்வாதிகள் கூறுகின்றனர். ஆனால் இராணுவத்தினரால் கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டவர்களே செம்மணியில் புதைக்கப்பட்டிருக்கின்றார்கள் என காணாமல் ஆக்கப்பட்டோரது, உறவுகளும் தமிழ்த் தேசியம் சார்ந்த அரசியல் பிரமுகர்களும், சிவில் சமூக அமைப்பினரும், சர்வதேச நாடுகளில் வசிக்கும் புலம்பெயர் தமிழர்களும் கூறுகின்றனர். எனது கருத்தும் காணாமல் ஆக்கப்பட்டோடரது உறவினர்களின் கருத்துகளோடு இணங்குகின்றது.

பல்வேறு தரப்பினரும் பல்வேறு விதமான கருத்துகளை கூறிக் கொண்டிருக்கின்ற நிலையில் அதன் உண்மை நிலைப்பாட்டை, உண்மைத் தன்மையை வெளிப்படுத்தக் கூடிய உரிமை நேரில் அல்லது சம்பவம் நிகழ்ந்த இடத்தில் இருந்தவர்களுக்கே உண்டு. அந்தவகையில் சோமரத்ன ராஜபக்ச ஒரு முக்கிய சாட்சியாக காணப்படுகின்றார்.

சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலத்திலேயே பல மர்ம முடிச்சுகள் அவிழக்கூடிய சந்தர்ப்பங்கள் உள்ளன. செம்மணி புதைகுழி குறித்து நீதியோடும், நியாயத்தோடும் செயல்படுவதாக இலங்கை அரசு தெரிவித்துள்ளது. தமிழ் மக்கள் மட்டுமல்லாது சிங்கள மக்களின் எதிர்பார்ப்பாகவும் செம்மணி விவகாரம் காணப்படுகின்றது. இவ்வாறான சூழ்நிலையில் அதன் உண்மை நிலைப்பாடு என்ன என்பதை தெளிவுபடுத்த முன்வரும் சோமரத்ன ராஜபக்சவை காப்பாற்ற வேண்டிய கடமை  அரசாங்கத்துக்கு உள்ளது.

Advertisement

சோமரத்ன ராஜபக்சவின் உயிருக்கு ஒரு ஆபத்து ஏற்பட்டால் அது முன்னாள் ஜனாதிபதிகளான ஜே.ஆர்.ஜெயவர்த்தன, சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க, மகிந்த ராஜபக்ச ஆகியோரின் ஆட்சிக் காலத்தில் இடம்பெற்ற வன்முறைகளுக்கு ஒப்பானதாகவே கருதப்படும். அது அநுர அரசாங்கத்தின் ஆட்சிக்கு ஆகப்பெரும் கறையை கட்டாயம் ஏற்படுத்தும்.

எனவே சர்வதேச விசாரணைகளுக்கான வாக்குமூலத்தை வழங்குவதற்கு குற்றவாளியான சோமரத்ன ராஜபக்ச அனுமதிக்கப்பட வேண்டும். ஐக்கிய நாடுகள் சபையின் இலங்கைக்கான வதிவிடப் பிரதிநிதிகள் விரைந்து சோமரத்ன ராஜபக்சவின் வாக்குமூலங்களை ஆவணப்படுத்த வேண்டும்.

போரின் போது இனப்படுகொலை நிகழ்த்தப்பட்டுள்ளதாக ஈழத்தில் வசிக்கின்ற தமிழ் மக்கள் மட்டுமல்லாது பல்வேறு தரப்பினரும் தெரிவித்து வந்தனர். ஆனால் அவற்றினை தென்னிலங்கை தரப்புகள் தொடர்ச்சியாக மறுத்து வந்ததே வரலாறு. இன்று அவர்களது பகுதியில் இருந்தே ஒருவர் வாக்குமூலம் அளிக்க முன்வருகின்றார். அவர் தன் சார்ந்த முக்கிய விடயங்கள் வெளிப்படுத்தப்படும் சூழலில்,  வடக்கில் உண்மையிலேயே என்ன நடந்தது என்பதனை தென் இலங்கை சமூகமும் அறிந்துகொள்ள முடியும்.

Advertisement

காலம் கனிந்து வந்திருக்கின்றது. ஐக்கிய நாடுகள் சபையின் அமர்வு நடைபெற இருப்பதால் தமிழர் தரப்பு அரசியல் தலைவர்கள் அனைவரும் இப்போதாவது ஓரணியில் திரளுங்கள். கருத்து முரண் இல்லாமலும் தனி நபர் காழ்ப்புணர்ச்சியற்றும் ஒருமித்த குரலில் எம் மக்களது பேரிழப்பை, பெரும் வலியினை சர்வதேச அரங்கில் எடுத்துரையுங்கள். படுகொலைகளை மேற்கொண்ட இராணுவ தரப்பில் இருந்தே அதற்கான சாட்சியும் தற்போது கிடைத்திருக்கின்றது. எனவே இந்த சந்தர்ப்பத்தை நழுவ விட்டால் அது ஒரு வரலாற்று தவறு மட்டுமல்லாது  விடிவுக்காக போராடும் தமிழ் இனத்துக்கே நீங்கள் செய்யும்  ஆகப்பெரும் துரோகமாக பார்க்கப்படும் என அவர் மேலும் தெரிவித்தார்.

Continue Reading
Advertisement
Click to comment

Leave a Reply

உங்கள் மின்னஞ்சல் வௌியிடப்பட மாட்டாது. கட்டாயமான புலங்கள் * ஆக குறிக்கப்பட்டுள்ளன