இலங்கை
சோமரத்ன விவகாரத்தில் அரசின் தீர்மானம் என்ன… சரத் வீரசேகர கேள்வி!

சோமரத்ன விவகாரத்தில் அரசின் தீர்மானம் என்ன… சரத் வீரசேகர கேள்வி!
கிருஷாந்தி குமாரசுவாமி படுகொலை வழக்கின் பிரதான குற்றவாளியான சோமரத்ன ராஜபக்சவுக்கு உயர்நீதிமன்றம் மரண தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளது. ஆகையால் இந்த விவகாரத்தை ஜனாதிபதி ஆணைக்குழு நியமித்து விசாரணை செய்வது சிக்கல் நிலையை ஏற்படுத்தும். இது தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவடிக்கை என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம் என்று முன்னாள் பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவித்துள்ளதாவது:-
மரண தண்டனைக் கைதியான சோமரத்ன ராஜபக்ச சர்வதேச விசாரணைக்குத் தயார் என்று அவரது மனைவி ஜனாதிபதிக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். இலங்கையின் உள்ளக விவகாரத்தை சர்வதேசத்துக்குக் கொண்டு செல்லும் ஒரு உத்தியாகவே இந்த விடயம் பயன்படுத்தப்படுகிறது. சர்வதேசக் கட்டமைப்புக்குச் செல்வதற்கு முன்னர் தேசிய நீதிக்கட்டமைப்பை நாடலாம். இராணுவத்தினர் குற்றம் புரிந்திருப்பார்களாயின் அவர்களுக்கு உள்ளக நீதிக்கட்டமைப்பின் கீழ் தண்டனை வழங்கவேண்டும் என்பதில் உறுதியாக உள்ளோம். முறையான விசாரணைகளின் பிரகாரமே இவருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது. ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் கூட்டத்தொடர் நடைபெறவுள்ள நிலையில் இவ்வாறான குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகிறன. சோமரத்ன ராஜபக்சவின் மனைவி அனுப்பியுள்ள கடிதம் தொடர்பில் ஜனாதிபதி எடுக்கும் நடவ டிக்கைகள் என்னவென்பதை எதிர்பார்த்துள்ளோம்- என்றார்.