விளையாட்டு
ராணுவத்தில் பணி… உ.பி-யில் போலீஸ் டி.எஸ்.பி: தமிழ் தலைவாசில் ஆடும் இந்த வீரர் யார்?

ராணுவத்தில் பணி… உ.பி-யில் போலீஸ் டி.எஸ்.பி: தமிழ் தலைவாசில் ஆடும் இந்த வீரர் யார்?
12 அணிகள் அணிகள் களமாடும் 12-வது புரோ கபடி லீக் தொடர் வருகிற 29 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெறுகிறது. இதில் ஒவ்வொரு அணியும், மற்ற அணியுடன் தலா இரு முறை மோத வேண்டும். லீக் சுற்று முடிவில் புள்ளி பட்டியலில் முதல் 6 இடங்களை பிடிக்கும் அணிகள் பிளே-ஆஃப் சுற்றுக்கு முன்னேறும்.இம்முறை போட்டிகள் விசாகப்பட்டினம், ஜெய்ப்பூர், சென்னை மற்றும் டெல்லி போன்ற முக்கிய நகரங்களில் அடுத்தடுத்து அரங்கேறுகிறது.முதல் கட்ட லீக் ஆட்டங்கள் விசாகப்பட்டினத்தில் உள்ள ராஜீவ் காந்தி ஸ்டேடியத்தில் வருகிற 29 ஆம் தேதி முதல் செப்டம்பர் 11 ஆம் தேதி வரை நடைபெறுகிறது. 7 ஆண்டு இடைவெளிக்கு பிறகு நடைபெறும் சூழலில், தொடக்கப் போட்டியில் தெலுங்கு டைட்டன்ஸ் – தமிழ் தலைவாஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்றொரு ஆட்டத்தில் பெங்களூரு புல்ஸ் புனேரி பால்டனை எதிர்கொள்கிறது. இந்த தொடருக்காக தமிழ் தலைவாஸ் அணி உட்பட அனைத்து அணிகளும் தீவிரப் பயிற்சியில் பங்கேற்று வருகின்றன. இந்நிலையில், இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணிக்காக ஆடவிருக்கும் வீரர் ஒருவர் இந்திய ராணுவத்தில் பணிபுரிந்தவராகவும், உத்தர பிரதேச காவல்துறையில் டி.எஸ்.பி பதவியில் இருப்பவராகவும் இருக்கிறார். அவர் தான் அதிரடி ரைடர் அர்ஜுன் தேஷ்வால். தமிழ் தலைவாஸ் அணி, புரோ கபடி முன்னணி நட்சத்திர வீரராக திகழ்ந்து வரும் அர்ஜுன் தேஷ்வாலை இந்த ஆண்டு நடைபெற்ற ஏலத்தில் ரூ. 1.405 கோடிக்கு வாங்கியது. அவர் தனது சிறப்பான ரைடு மற்றும் துல்லியமான ஆட்டத்திற்கு பெயர் பெற்றவர். ‘ரெய்டு-மெஷின்’ என்கிற செல்லப்பெயரையும் அவர் கொண்டுள்ளார். உத்தரபிரதேசத்தின் பாசியாவைச் சேர்ந்த 25 வயதான இவருக்கு சிறுவயது முதலே கபடி ஆடுவதில் அலாதி பிரியம். அதனால், அதற்கு தன்னை தயார்ப்படுத்திக் கொண்டதோடு, விளையாட்டில் சிறந்த வீரராகவும் உருவெடுத்தார். தனது இடைவிடாத முயற்சியின் மூலம், 2018 ஆம் ஆண்டில் இந்திய ராணுவத்தில் ஸ்போர்ட்ஸ் கோட்டா-வைப் பயன்படுத்தி சேர்ந்தார். புரோ கபடியில் 6-வது சீசனில் அடியெடுத்து வைத்த இவர், யு மும்பா அணிக்காக ஆடினார். ஆனால், 8-வது சீசனில் அர்ஜுன் தேஷ்வால் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக ஆடிய போது, பெரும் தாக்கத்தை ஏற்படுத்தினார். இதேபோல், சீசன் 9 இல் சிறந்த வீரராக ஜொலித்தார். அந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணி இரண்டாவது பட்டம் வெல்ல பெரிதும் பங்காற்றினார். இதேபோல், கடந்த ஆண்டு நடந்த 11-வது சீசனில் சிறப்பாக ஆடி 227 ரெய்டு புள்ளிகளை பெற்றார். மேலும், அர்ஜுன் தேஷ்வால் இதுவரை 114 போட்டிகளில் ஆடி 1,174 ரெய்டு புள்ளிகளுடன், புரோ கபடி லீக் தொடரின் பிரபலமான வீரர்களில் ஒருவராக வலம் வருகிறார். அவர் 9.86 என்ற சராசரியில் 230 புள்ளிகளையும் பெற்றுள்ளார். அர்ஜுன் தேஷ்வால் படைத்த சாதனைகள் அர்ஜுன் தேஷ்வால் கடந்த சீசனில் ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் அணிக்காக ஆடி யு.பி யோதாஸை வென்றபோது 1000 ரெய்டு புள்ளிகளை எட்டினார். தொடர்ந்து, அதே சீசனில் அவர் 1100 ரெய்டு புள்ளிகளை எட்டினார். இதன் மூலம் இந்த மைல்கல்லை எட்டிய இரண்டாவது இளைய வீரர் ஆனார். அர்ஜுன் தேஷ்வால் உத்தரகண்ட் மாநில அணியைப் பிரதிநிதித்துவப்படுத்தினார். 2019 இல் உத்தரகண்ட் மாநில அணிக்காக விளையாடியுள்ளார். தொடர்ந்து, இந்திய தேசிய அணியிலும் அவர் இடம் பிடித்தார். 2022 ஆசிய விளையாட்டுப் போட்டி மற்றும் 2023 ஆசிய கபடி சாம்பியன்ஷிப்பிலும் தங்கப் பதக்கங்களை வென்ற இந்திய தேசிய அணியில் அவர் இடம் பெற்றவர். புரோ கபடி தொடருக்கான சீசன் 9-ல் மிகவும் மதிப்புமிக்க வீரர் என்கிற பட்டத்தை வென்றார். சீசன் 10 இல் கூட்டு அதிக ரெய்டு புள்ளிகள் எடுத்தவராக சாதனை படைத்தார். உத்தரபிரதேச காவல்துறையில் துணை காவல் கண்காணிப்பாளராக (டி.எஸ்.பி) பதவி வகித்து வரும் அர்ஜுன் தேஷ்வால் தற்போது, இந்த சீசனில் தமிழ் தலைவாஸ் அணியில் இணைந்திருக்கிறார். அவர் அந்த அணி முதல் முறை கோப்பை கனவை நெருங்க உதவுவாரா? என்பதைப் பொறுத்திருந்து பார்க்கலாம்.